வார இறுதியில் பார்த்த படங்கள் …..

4

வாரத்துக்கு ஐந்து நாள் நடு ராத்திரி வரை கணினி முன்னால் அமர்ந்து பேய் மாதிரி முழிப்பவனுக்குத் தான் தெரியும் வார இறுதிகளின் சுவாரஸ்யம். இதைத் தான் முன்னோர்கள் வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்றார்கள். இப்போ தான் கண்ணுக்கு நிழலே தெரிய மாட்டேங்குதே !

குழந்தைகளுடன் விளையாடுவதைகத் தவிர்த்துப் பார்த்தால் வார இறுதிகளில் கிடைக்கும் ஒரு பொழுது போக்கு எல்லோரையும் போல சில திரைப்படங்கள். சீரியல் எரிச்சல் தாங்க முடியாமல் கேபிளைக் கட் பண்ணி கடாசி பல மாதங்களாச்சு. அதனால் திரைப்படங்களெனில் திரையரங்கு அல்லது தி.விசிடி.

கடந்த வாரம் பார்த்த படங்களில் ரொம்பவே நெகிழ வைத்த படம் “வாரணம் ஆயிரம்”. தந்தை மகனுக்கு இடையேயுள்ள நெருக்கமும், நெகிழ்வும் உயிருக்குள் ஆழமாய் இறங்கி கண்கலங்க வைத்தது. தோழனாய் வாழ்ந்த தந்தையின் நினைவுகள் காரணமாய் இருக்கலாம். நாயகன் தந்தையை இழந்தபின் ஏக்கத்தில் பேசும் வார்த்தைகள் என் மனதுக்குள் நான் அடிக்கடி பேசும் வார்த்தைகள் என்பதனாலும் இருக்கலாம்.

எனினும், குழந்தைக் கடத்தல், ஜர்னலிஸ்ட் கடத்தல் என கதையின் அடி நாதத்தை விட்டு படம் தேவையின்றி விலகிச் சென்றது உறுத்தலாகவே இருந்தது. அந்த விதத்தில் இன்னும் சேரனின் தவமாய் தவமிருந்து உள்ளுக்குள் ஈரமாய் இருக்கிறது.

சேரன் என்றதும் ராமன் தேடிய சீதை நினைவுக்கு வருகிறது. நண்பன் கொண்டு வந்து பாசமாய் கொடுத்ததற்காய் பார்த்த படம். மனதுக்கு நிறைவைத் தந்தது. சில படங்கள் பார்த்தபின், அடச் சே கிடைத்த மூணுமணி நேரத்தை தூங்கியாவது அனுபவித்திருக்கலாம், இப்படி… என தோன்றும். அந்த நினைப்பு தோன்றாமல் இருந்தாலே நல்ல படம் எனும் வரையறை என்னுடையது. அந்த வகையில் ராதேசீ மனதுக்குள் நிறைவு.

நண்பனின் வீட்டுக்கு மாலையில் சென்றிருந்தபோது “திண்டுக்கல் சாரதி” படம் பார்த்துக் கொண்டிருந்தான். “செம ஜோக் மச்சி” என்றான். அப்படியா என்றபடி கொஞ்சம் அமர்ந்தேன். இரண்டாவது முறையாகப் பார்க்கிறானாம். சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடங்களுக்கு மேல் செயற்கையாய் சிரிக்க முடியாமல், முகம் அஸ்டகோணலாகிப் போக விடைபெற்றேன்.

சரி.. இந்த படம் பாரு, உனக்குப் பிடிக்கும் என ஒரு படத்தைக் கையில் கொடுத்தான்.

டென்ஷல் வாஷிங்டன் இயக்கி நடித்திருந்த “த  டிபேட்டர்”  படம்.

நிஜமாகவே மனதுக்கு நிறைவளித்த படம். 1935 களில் நகரும் படம் அக்கால கருப்பர் இன மக்களின் கல்வி வேட்கையையும், அடிமைத்தனங்களையும் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நான்கு டிபேட்டர்களை உருவாக்குகிறார் கதாநாயகன். அந்தக் கதையைச் சுற்றி நகர்கிறது அன்றைய சமூக அமைப்பும், அவலமும், காதலும் இன்ன பிற சமாச்சாரங்களும்.

கடைசி விவாதத்தில் காந்தியின் அகிம்சைக் கொள்கையைப் பற்றிப் பேசியும், கருப்பர் இன அவலங்கள் பற்றிப் பேசியும், கருப்பராய் பிறந்த காரணத்துக்காய் வன்முறைக்கு ஆளாவதையும் டென்ஷல் வைடேகர் பேசும்போது, அடுத்த தீவு ஈழத் தமிழர்கள் நினைவுக்குள் வந்து நிற்கிறார்கள்.

நமது ஊரில் முன்பே வந்து போயிருக்கலாம். அல்லது அவுட்லேண்டர் போன்ற படங்களுக்காய் வழிவிட்டு ஒதுங்கியிருக்கலாம். 
 
டிவிடியைத் திருப்பிக் கொடுத்தபோது, இந்த வாரம் “நான் கடவுள்” பாக்க போலாமா ? என சீரியஸாய் கேட்ட நண்பனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஆளை விடுப்பா…  நான் கடவுளோ, நான் சாத்தானோ… மனுஷனால நேரா நிக்கவே முடியலை. இதைப் பாத்து இனி நான் தலைகீழா நிக்க ஆரம்பிச்சேன்னா….