வேளச்சேரி குறித்த ஓர் புலம்பல்

tree-aheadசென்னைக்கு “அவுட்டர்” என அழைக்கப்பட்ட வேளச்சேரி இப்போது சென்னையின் மையமாக உருமாறி விட்டதால் கூடவே ஆரம்பித்து விட்டது இடியாப்பச் சிக்கல்.

முன்பெல்லாம் சரக் சரக்கென சைக்கிளில் சுற்றி வந்த சாலையை இப்போது நடந்து கடக்க வேண்டுமென்றாலே கால்மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவஸ்தை.

குருநானக் கல்லூரியிலிருந்து அலெக்ஸாண்டர் சதுக்கம் நோக்கி வரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் கடந்த பிறவியில் சாவான பாவம் செய்தவர்கள். நின்றும், ஊர்ந்தும் நகர்ந்தும் அந்த ஒரு கால் கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் கடிகாரம் ஒரு சுற்று ஓடி முடித்துவிடும், கால்வலியும் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொள்ளும்.

அந்த சாலையில் இத்தனை “தெருக் கோயில்கள்” இருப்பது  முன்பெல்லாம் கவனத்துக்கு வந்ததேயில்லை. இப்போது வண்டியை வளைத்தும் நெளித்தும் ஓட்டும் போது தான் தெரிகிறது சட்டென முன்னால் நிற்கும் வித்தியாசமான பெயர்களுடன் பல கோயில்கள்.

பாவம் இந்த சாலைக் கடவுள்கள் யாரிடம் சாபம் பெற்றார்களோ ? நாளெல்லாம் புழுதியில் புழுங்க வேண்டிய அவஸ்தை. யாரும் இந்த கோயில்களில் வந்து நின்று தொழுததைப் பார்த்ததில்லை. அல்லது குறைந்த பட்சம் அந்த கோயில்களை சுத்தம் செய்கிறார்களா என்பதே கூட மர்மமே.

அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நிகழ்வதற்கு மிக முக்கிய பங்காற்றும் இந்த கோயில்களை சற்றே காற்றோட்டமான இடத்துக்கு இடம் மாற்றி வைத்தால் கடவுளுக்கும் காற்று கிடைக்கும், கூடவே பயணிப்பவர்களுக்கும் சாலை கிடைக்கும்.

ஆனால் என்ன, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் சட்டென மக்களுக்கு பக்திப் பெருக்கெடுத்து ஒரு பெரிய கலவரமே உருவாகும் வாய்ப்பும் உண்டு என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை போல.

ஒருகாலத்தில் இந்த ஏரியாவே கொலைகாரர்களின் சுவர்க்க புரியாகவும், பாம்புகளின் கூடாரமாக இருந்தது என்றார் ஒருநாள் நான் பயணம் செய்த கால் டாக்சி ஓட்டுநர். அது உண்மை என்பது போல வரிசையாய் புற்றுக் கோயில்கள் !

அது ஒரு புறம் இருக்கட்டும்,

அந்த நெரிசல் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. “ Tree Ahead” Go Slow என சிங்காரச் சென்னை போக்குவரத்து காவல் துறை அமைத்திருக்கும் அறிவிப்புப் பலகை அது.

அதில் விஷேசம் என்னவென்றால், மரம் இருக்கிறது என்பதை மரத்தின் மேலேயே ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

“நல்ல வேளை சொன்னாய்ங்க.. இல்லேன்னா மோதியிருப்பேன்லே…” என சிரித்துக் கொண்டே மக்கள் வண்டி ஓட்டுவது சகஜமாகி விட்டது. என்னதான் ராத்திரி வர்றவங்களுக்காக ஹி…ஹி … என சால்ஜாப்பு சொன்னாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.

இங்கே பள்ளம் இருக்கிறது என பள்ளத்துக்கு உள்ளேயே சென்று போஸ்டர் ஒட்டுவீங்களா ஆப்பீசர் ? 

நடு ரோட்டில் ஆஜானுபாகுவாய் நிற்கும் இந்த மரத்தை கொஞ்சம் வெட்டி எடுத்தாலாவது பரவாயில்லை மக்களுக்கு கொஞ்சம் இடம் கிடைக்கும். அதுக்கெல்லாம் வழியைக் காணோம். ஒருவேளை அசோகர் காலத்துல நட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மரமோ என்னவோ ?

விஜயநகர் பஸ்டாண்டின் மையப்பகுதியில் இருக்கிறது ஒரு டாஸ்மார்க் கடை. எந்தப் பருவகாலத்திலும் பொய்க்காத வியாபாரம் அதற்குண்டு. ஸ்டெடியாக வரும் குடிமகன்களின் இருசக்கர வாகனங்களே பெரும்பாலான சாலையை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என்னப்பா இது.. கோயிலை இடம்  மாத்தினா தான் பிரச்சினை. டாஸ்மார்க்கைக் கூடவா இடம் மாத்தக் கூடாது ? அதை கொஞ்சம் நாலு தெரு தள்ளி வெச்சா யாரும் வரமாட்டாங்களா என்ன ? ஒதுக்கமா இருந்தா தான் “ஒழுக்கமான” குடிகாரங்களும் தெகிரியமா வருவாங்கப்பு…

ஒரு பகுதியில் மக்கள் அதிகமாகக் குடியேற ஆரம்பிக்கிறார்கள் எனில் அந்தப் பகுதியை அதற்கேற்றார் போல் கொஞ்சம் வசதியாக ஆக்கினார்கள் என்றால் எல்லோருக்கும் வசதியாகும். 

இல்லையேல், TREE AHEAD போல ROAD AHEAD என ஒரு போர்டை காவல் துறை மாட்டினால் தான் சாலை இருப்பதே நாளை கண்ணுக்குத் தெரியும் !