ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இசைப்புயலுக்கு நானும் ஒரு வாழ்த்துச் சொல்லவில்லையேல் பிளாக் உலகம் என்னை மன்னிக்காது.
ரஹ்மானுக்கு விருது கிடைக்குமா ? எனும் எதிர்பார்ப்புடன் காலையில் நிகழ்ச்சியைப் பார்க்க அமர்ந்தால், அட… அலுவலகத்தில் மிக முக்கியமான மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்து தொலைந்தது. (இல்லையேல் நான் தொலைந்திருப்பேன் என்பது வேறு விஷயம் )
பிறகென்ன, வரும் வழியில் கேள்விப்பட்டேன் இரண்டு விருதுகளை ரஹ்மான் வாங்கிய மகிழ்ச்சிச் செய்தியும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் அமோக அறுவடையும்.
வாழ்த்துக்கள் ரஹ்மான்.
நான் பூஜை செய்ததால் தான் ரஹ்மானுக்கு விருது கிடைத்தது, நான் ஏற்கனவே ஆரூடம் சொல்லியிருந்தேன், அவரு ஜாதகம் அப்படி என்றெல்லாம் இனிமேல் சில நாட்களுக்கு நம்மூர் பத்திரிகைகள் நகைச்சுவைகளை அள்ளி விடும் என்பதில் ஐயமில்லை.
ஸ்லம் டாக் மில்லியனர் – படத்தின் பிரமிப்பூட்டும் விருது அறுவடை உலகுக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லியிருக்கிறது. அதாவது எவரையும் சின்னப் பசங்க என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்பதே அது. என சுவாரஸ்யமாய் கூறுகிறது அமெரிக்காவின் யூஎஸ் ஏ டுடே நாளிதழ்.
ஹாலிவுட்டின் கதவுகள் இந்திய திசையை நோக்கி மெலிதாய் திறந்திருக்கின்றன. இனிமேல் இந்தியத் திறமைகள் ஆஸ்கர் மேடையில் அடிக்கடி நுழையும் என நம்பலாம்.
திறந்திருக்கும் கதவை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, கமல் கவனித்திருப்பார்.