“வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?

walkingஉடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.

உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.

இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.

தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.

கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !

இந்த எஸ்.எம்.எஸ்-ஐப் படித்தால் மரணம் நிச்சயம் !!! கதையல்ல நிஜம்!!!

sms

எஸ்.எம்.எஸ் ஐ வாசித்தால் முதலில் தலை வலி வருகிறது. பின் அந்த வலி மிகக் கடுமையான வலியாக மாறி மூளையில் இரத்தக் கசிவை உருவாக்கி விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த இரத்தக் கசிவு உயிரையே பறித்துக் கொள்கிறது.

இது மர்மக் கதையோ, அறிவியல் புனைக் கதையோ இல்லை உண்மை சம்பவம் என அடித்துச் சொல்கின்றனர் சிலர்.

இந்த பரபரப்பான செய்திகள் உலவிக் கொண்டிருப்பது எகிப்திலும், சவுதி அரேபியாவிலும்.

இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் இப்போதெல்லாம் எந்த எஸ்.எம்.எஸ் வந்தாலும் படிக்காமலேயே அழித்து விடுகின்றனராம். எஸ்.எம்.எஸ் வருமோ எனும் பயத்திலேயே கழிகிறதாம் பலருடைய வாழ்க்கை.

எகிப்திய அரசும், நலவாழ்வுத் துறை அமைச்சகமும் இப்படிப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களை அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் மறைமுகமாக எகிப்திய காவல்துறை இந்தக் கதையின் பின்னணியை தீவிரமாய் ஆராய்ந்து வருகிறதாம்.

முன்பெல்லாம் பதினைந்து காசு அஞ்சலட்டையில் நமக்கு கடிதங்கள் வரும். இந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்து பதினைந்து பேருக்கு அனுப்பாவிடில் உன் தலை சுக்கு நூறாகவோ நூற்று ஐம்பதாகவோ உடைந்து விடும் என.

பள்ளிக்கூட நாட்களில் இப்படிப் பட்ட கடிதங்கள் வந்ததனால் மிரண்டு போய் ஒளித்து ஒளித்து கடிதம் எழுதிய நண்பர்கள் பலர் எனக்கும் இருந்தார்கள்.

பதின் வயதுகளில் எனக்கு அப்படி வந்த முதல் கடிதத்தை கிழித்துப் போடும் போது எனக்குள்ளும் சிறு பயம் இருக்கத் தான் செய்தது ! பின் அது வேடிக்கையாய் மாறி, யாருக்கு அப்படிப்பட்ட கடிதம் வந்தாலும் என்னிடம் கொண்டு வந்து கிழிக்கச் சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் என்ன கிழிச்சேன் என்பதற்கு ஒரு பதில் இதுவாகவும் இருக்கலாம் என்பது எனது பள்ளிக்கூட சுவாரஸ்ய நினைவுகள்.

அஞ்சலட்டை என்பது, மின்னஞ்சலாகி, இப்போது எஸ்.எம்,எஸ் ஆகி இருக்கிறது. ஆவிகளைக் குறித்தும், வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்தும் கதை எழுதப் பிரியப்படுபவர்களுக்கு நல்ல தீனி… வெறென்ன சொல்ல ?

இதுக்கு “தம்” பரவாயில்லையேப்பா !

 namitha1

வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.

இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?

அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.

சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.

(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்

வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.

 

காளான் அல்லது மஷ்ரூம்…

காளான் !

 

 

 

mushroom

முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள் இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.

சீனாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் நீட்சி பல்வேறு வடிவங்களில் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

காளானில் புற்றுநோயை எதிர்க்கும் குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கான்சருக்கு அளிக்கப்படும் மருந்துகளைப் போலவே காளானும் செயல்படுகிறதாம். அதாவது கான்சரை உருவாக்கும் ஆஸ்டிரோஜென் ஹார்மோனை தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் திறன் காளான்களுக்கு உண்டாம்.

கான்சர் எதிர்ப்புக்கும், காளானுக்கும் இடையேயான தொடர்பு சமீபகாலமாகவே பல்வேறு ஆராய்ச்சிகளை தூண்டி விட்டிருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

அதாவது, காளான் சூப் தயாரித்துக் குடிப்பதனால் மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சி.

ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

காளான்களை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.

 

இது, மீன் சமாச்சாரம் !

 fish_cartoon08

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

இந்த நக்கல் தானே வேணாங்கிறது !

imag0067

 

இது அரசியல் காலம்.

இனிமேல் புகைப்பது, சினிமா காரர்களைப் பகைப்பது போன்ற சமாச்சாரங்களெல்லாம் சில நாட்களுக்கு நடக்காது என்பதைத் தெரிந்து தானோ என்னவோ இவ்வளவு ஹாயாக, போர்ட் மேலேயே கையைப் போட்டு புகைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

“என்னங்க… நோ பார்க்கிங்னா, அங்கே வண்டியை நிப்பாட்டுவீங்க ! நோ ஸ்மோக்கிங்னா அங்கே புகை பிடிப்பீங்களா என சிரித்துக் கொண்டே கேட்டேன்” (கொஞ்சம் பயந்து கொண்டு கூட )

அவர் நக்கல் பேர்வழி போல,

“தமிழ் நாடு கெட்டுப் போச்சுங்க. வண்டியை நிப்பாட்டற இடமா பாத்து நோ பார்க்கிங் போர்ட் மாட்டுவாய்ங்க. அதே போல நான் தம் அடிக்கிற இடமா பாத்து இந்த போர்டையும் மாட்டியிருக்காய்ங்க” என்றார் கூலாக !

“யாராச்சும் போன் பண்ணி கம்ப்ளயிண்ட் பண்ணினா என்ன பண்ணுவீங்க ?” என்றேன்

“தம்மு அதுக்குள்ள முடிஞ்சுடும். நான் கிளம்பிடுவேன். நீ இப்போ கிளம்பு காத்துவரட்டும்” என்றார், முறைத்துக் கொண்டே.

திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

தேர்வுக்கும், தண்ணீருக்கும் என்ன சம்பந்தம்

 examwater

 

நன்றாகத் தேர்வு எழுத என்னென்ன வேண்டும் ?

நன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதை எழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ? வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது.

தேர்வுக்குச் செல்வதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன் 250 மிலி தண்ணீரை அருந்துவது தேர்வை சிறப்பாக எழுத உதவுகிறது எனும் இந்த ஆராய்ச்சி முடிவு இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பலனுக்கான சரியான காரணம் இன்னும் புரியாத நிலையில், தண்ணீர் அருந்துவது நிச்சயமாக நன்றாகவும், கவனமாகவும், எளிதாகவும் தேர்வு எழுத உதவுகிறது என்பது மட்டும் இந்த விரிவான ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

மூளையில் தகவல் பரிமாற்றம் தண்ணீர் குடித்தபின் எளிதாக இருக்கும் என்பது இதன் காரணமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த சோதனை பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டது. உதாரணமாக தண்ணீர் குடித்த மற்றும் குடிக்காத மாணவர்கள் எப்படி தேர்வில் கவனமாய் செயல்படுகின்றனர், அவர்களுடைய கண்பார்வை கூர்மையில், சிந்தனையில், செயல்படுதலில் ஏதேனும் வேறுபாடு தெரிகிறதா என்றெல்லாம் பல்வேறு வகைகளில் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டது.

இருபடங்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று போட்டி வைத்த போது தண்ணீர் குடித்திருந்த மாணவர்கள் மற்றவர்களை விட 34 விழுக்காடு அதிக சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர்.

இரண்டும் இரண்டும் எத்தனை என்பது போன்ற எளிய கணக்குப் போட்டிகளில் ஏதும் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு காணப்படவில்லை, ஆனால் கடினமான நினைவுப் போட்டிகளில் தண்ணீர் குடித்த மாணவர்களே 23 விழுக்காடு அதிகம் சிறப்புடன் செயல்பட்டிருக்கின்றனர்.

தண்ணீர் குடிப்பது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது என்பதை இந்த ஆராய்ச்சி இன்னுமொருமுறை தெளிவு படுத்தியிருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் கெரோலில் எட்மண்ட்ஸ்.

தண்ணீர் அருந்துவது பெரியவர்களுடைய அறிவுத் திறமையை அதிகரிக்கும் என முன்பு ஒரு ஆராய்ச்சி வெளிவந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

எனினும், தேர்வுக்கும் தண்ணீர் அருந்துவதற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியிருக்கும் முதல் ஆராய்ச்சி இது எனும் வகையில் இந்த ஆராய்ச்சி சிறப்பிடம் பெறுகிறது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா – 1

dmdk

அரசியல் சதுரங்க விளையாட்டு பரபரப்புக் கட்டத்தை எட்டியிருப்பதை சென்னையின் மூலை முடுக்கெங்கும் காண முடிகிறது.

தேமுதிக இப்படி ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. வீசோ வீசென்று அவரை நோக்கி எல்லா விதமான வலைகளும் வீசப்படுகின்றன.

விஜயகாந்துக்கு பல கவலைகள் இருக்கின்றன.

ஒன்று, திமுக, அதிமுக – போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டேன். வைத்தால்…., ,என்றெல்லாம் வீர வசனங்களைப் பேசியதால் தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. கூட்டணி வைத்தால் அந்த இமேஜ் பாதிக்கப்படலாம் என்பது ஒரு குவார்டர் கவலை.

ஒருவேளை கூட்டணி வைக்காமல் போனாலும் வாக்குச் சதவீதம் குறைந்து போய் சிக்கல் உருவாகலாம் என்பது ஒன்னொரு ஆஃப் கவலை.

எனினும் இந்தக் கவலைகளையெல்லாம் விட மிகப்பெரிய ஃபுள் கவலை விஜயகாந்துக்கு இருக்கும் கடன்.

சுமார் 750 கோடி வரை ஒரு தனி நபரிடமே கடனாய் வைத்திருக்கிறாராம் விஜயகாந்த். அப்படியானால் அந்தக் கடனை கொஞ்சமேனும் அடைக்க ஏதாவது வழி செய்ய வேண்டுமே !

7 இடங்களும் 600 கோடி ரூபாய்களும்

வேண்டும்.

என்பது தான் தேமுதிக தரப்பிலிருந்து திமுக வுக்கு அனுப்பப்பட்ட செய்தியாம். அதாவது பா.ம.க வுக்கு 6 இடங்கள் திமுக ஒதுக்கினால் தனக்கு அதை விட ஒரு இடம் அதிகமாய் ஒதுக்கி ஏழு இடங்கள் வேண்டும் என கேப்டன் கர்ஜித்தாராம்.

கூடவே அந்த 600 !!! கோடி !!!! தமிழனுக்கு “வாக்கு” தான் முக்கியம் !!!! கொஞ்சம் கொஞ்சமாச்சும் கடனை அடைக்கணும்ல! !

திமுக தரப்போ, காங்கிரசைக் கூப்பிட்டு பெருசுங்களா உங்களுக்கு 15 சீட் !

அதுல நீங்க எப்படி வேணும்னாலும் பேசிக்கோங்க. வேணும்னா தேமுதிக க்கு 7 குடுத்துட்டு நீங்க 8 இடத்துல போட்டியிட்டாலும் எனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை என புள்ளி வைத்துவிட்டதாம்.

எனினும், அரசியலில் புள்ளிகள் மாறுவதும், நீள்வதும் அழிவதும் எல்லாம் சகஜமாச்சே. பா.ம.க திமுகவில் சேர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் (அன்பு மணி சும்மா விடுவாரா என்ன ? ) தேமுதிகவுக்கு அதைவிட அதிக இடங்கள் தருவது சாத்தியமில்லை என்பது திமுகவின் வாதம். பாவம் காங்கிரஸ் தான் இதில் மாட்டிக் கொண்டு டவலுக்குக் கீழே விரல் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆமா, வை.கோ ன்னு ஒரு தலைவர் இருந்தாரே.. அவர் என்ன ஆனார் என்றேன் அப்பாவியாய் ஒரு அரசியல் பிரமுகரிடம்

“யாரு ? உண்ணாவிரதம் இருக்கிற பெருசுகளுக்கு ஜூஸ் குடுத்துட்டு இருப்பாரே அவரா ?” என்ற அவரது கேள்விக்குப் பின் நான் ஏதும் கேட்கவும் இல்லை.

அவர் எதுவும் சொல்லவும் இல்லை.

கோபம் கொல்லும்

anger-how-5

பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.

கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் ? இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என எகிறுகிறதாம்.

நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாம் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லையெனில் அதோ கதி தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறார் ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.

இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்படி இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கிறது எனும் கோணத்தில் நடந்தது.

அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் விளையாட்டுகள் இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்தமாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட்.

கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே விடவேண்டியவை மது, புகை மட்டுமல்ல கோபமும் கூடத் தான் என்பதைக் கவனத்தில் கொள்வோம் !

ஸ்லம் டாக் மில்லியனர், சர்வதேசத் திரையில் இந்திய அவலம்

 

slumdog-millionaire-640x426

( தமிழ் ஓசை நாளிதழில் வெளியான முதல் திரைப்பட விமர்சனம் !!)

எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் இந்தியாவின் சந்துகளிலும் கூட பரவ விட்ட ஸ்லம் டாக் மில்லியனர் ( கோடீஸ்வர சேரி நாய் ) திரை உலகின் அங்கீகரிக்கப்பட்ட மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் நாட்டின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆக்கிரமிப்பும், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே எடுத்திருக்கும் திரைப்படம் எனும் தன்மையும், பெரும்பாலும் இந்தியக் கலைஞர்களினால் நிறைந்திருக்கக் கூடிய படம் என்பதும் இந்தப் படத்தை ஓர் இந்தியப் படமாகவே மக்கள் கொண்டாடக் காரணமாகி விட்டன.

அதனால் தான் இந்தத் திரைப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைக் கூட இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த ஆஸ்கர் அங்கீகாரமாய் பார்க்கின்றனர் இந்தியர்களில் ஒரு பிரிவினர்.

இன்னொரு சாரார் இந்தத் திரைப்படத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்தத் திரைப்படம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது, இந்தியாவின் அவலட்சணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. இது மேலை நாட்டின் ஆணவம் என்பது அவர்களுடைய வாதம்.

அப்படி ஸ்லம்டாக் மில்லியனர் படம் என்னதான் சொல்கிறது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கதையின் நாயகனான பதின் வயதுச் சிறுவன் பங்குபெறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை அளித்து அதிர வைக்கிறான். அவனோ சேரியில் பிறந்து, மும்பையில் ஒரு கால் செண்டர் நிறுவனத்தில் டீ வாங்கித் தரும் வேலை செய்யும் எடுபிடி.

நிகழ்ச்சியை நடத்துபவருக்கு இவனுடைய திறமை மேல் சந்தேகம் எழுகிறது. தன்னைத் தவிர யாரும் அறியாமை இல்லை எனும் மேல்குலத்தின் ஆணவ சிந்தனையின் வெளிப்பாடு அது. ஏதோ ஏமாற்று வேலை நடக்கிறது என நாயகனை அவன் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.

காவல்துறை கேட்பதற்கு யாருமற்ற அந்த சிறுவனை  நையப்புடைத்து “உண்மையை” வாங்க முயல்கிறது. அடிபட்டு, மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு, உதைபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அவன் “எனக்கு கேள்விகளுக்கான விடை தெரியும்” என்கிறான் பலவீனமாய்.

எப்படி கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தது என விசாரிக்கிறார் காவல் அதிகாரி. அவன் தனது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து கேள்விகளுக்கான விடைகளைப் பொறுக்கி எடுத்த விதத்தை ஒவ்வொன்றாய் விளக்குகிறான்.

அந்த கேள்விகளின் ஊடாக பயணிக்கும் படம், அவனுடைய வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களை புரட்டிக் கொண்டே பயணித்து பார்வையாளரை உறைய வைக்கிறது.

அப்படி என்னதான் வலி மிகுந்த நிகழ்வுகள் அவனுக்கு விடை சொல்லிக் கொடுத்தன ?

குறைவான வசதிகளும், குறைவற்ற ஆனந்தமுமாய் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சேரியில் இந்துத்துவ வெறியர்களின் வெறித் தாக்குதல் மூர்க்கத் தனமாய் மோதுகிறது. சிறுவனான கதையின் நாயகனின் தாய் படுகொலை செய்யப்படுகிறாள். அண்ணனுடன் உயிர்தப்ப பாதங்களில் பதை பதைப்புடனும்,  கண்களில் கிலியுடனும், குருதிக்கு இடையிலும், நெருப்புக்கு நடுவிலும் ஓடித் திரியும் சிறுவனின் கண்களில் படுகிறான் ராமர் வேடமணிந்த சிறுவன்.

சோகத்தின் பிசுபிசுப்புடன் அவனுடைய மனதில் ஒட்டிக் கொண்ட ராமனின் கையிலிருக்கும் அம்பும், வில்லும் ஒரு கேள்விக்கான விடையாகிறது.

தப்பி ஓடி சாக்கடையிலும், குப்பை மேட்டிலும் உழலும் சிறுவர்களை சிலர் கபடச் சிரிப்புடன் கடத்தில் செல்கின்றனர். அவர்கள் சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் பாதகர்கள். அந்தக் கூட்டத்தில் கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் உலவுகின்றனர் சிறுவர்கள்.

சிறுவர்களைப் பாடவைத்து, அவர்கள் நன்றாகப் பாடுகிறார்களெனில் அவர்களைப் பாராட்டி, கொடூரச் சிரிப்புடன் அவர்களுடைய கண்களில் நெருப்பில் பழுத்த கரண்டியைத் தேய்த்து பார்வையைப் பறித்து பிச்சையெடுக்க வைக்கின்றனர்.  தர்ஷன் தோ கான்ஷயாம் பாடலை எழுதியது யார் எனும் கேள்விக்கான விடை இந்தக் கண்ணீர் கதையிலிருந்து கிடைக்கிறது.

இப்படியாய் ஒவ்வோர் கேள்விக்கான விடையையும் ஒவ்வோர் அதிர்ச்சிப் பக்கத்திலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறான் நாயகன் எனும் உண்மை காவல் துறைக்கு புரிந்து போகிறது.

ஆயிரம் ரூபாய் நோட்டில் இருப்பவருடைய பெயர் காந்திஜி என்பது தெரியாது, இந்தியச் சின்னத்தில் இருப்பது “வாய்மையே வெல்லும்” என்பது தெரியாது ஆனால் நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரியும் எனும் வித்தியாசமான கதைக்களமாய் விரிகிறது படம்.

சேரிச் சிறுவன் எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் ? இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை அளிக்கக் கூடிய எந்தத் திறமையும் நாயகனிடம் இல்லையே ? எனும் கேள்விக்கு விடையாகிறது நாயகனின் காதல் நினைவுகள்.

சிறுவயதில் கலவரத்திலிருந்து தப்பி ஓடும்போது அண்ணனின் நிராகரிப்பையும் மீறி சேர்த்துக் கொள்கிறான் ஒரு சிறுமியை. இந்த மூவர் அணி பின் பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் மாட்டி அங்கிருந்து தப்பி ஓடும் போது அண்ணனின் சூழ்ச்சியால் அவள் மட்டும் பிடிபடுகிறாள். சிவப்பு விளக்குப் பகுதியில் வளர்ந்து நாட்டியம் பயிலும் அவளை சில பல இடர்பாடுகளுக்குப் பின் மீண்டும் தப்பிக்க வைத்தால் அண்ணனின் துரோகத்தால் மீண்டும் அவளை இழக்கிறான். இப்போது அவள் மும்பை தாதாவின் வீட்டில் சிக்கிக் கொள்கிறாள்.

அங்கிருந்து அவள் வந்து சேர்வாளா எனும் எதிர்பார்ப்பே நாயகனின் பிரதான எதிர்பார்ப்பாகிப் போகிறது.  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான், வெல்கிறான், என படம் மசாலாத்தனமாய் முடிந்து போகிறது.

கதையாய் பார்க்கையில் சாதாரணமாய் தோன்றும் இந்தப் படம் மும்பையின் சேரியையும், அழுக்கையும், இந்தியாவின் மத வெறியையும், காவல் துறையின் கொடூர விசாரணைகளையும் வெளிச்சம் போட்டிருக்கிறது எனுமளவில் அழுத்தம் பெறுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று படம் எடுத்துப் பழக்கப்பட்டுப் போன நமது இயக்குநர்களை நிற்க வைத்து நமது வீட்டுக் கொல்லை எப்படி இருக்கிறது என்பதை ஒரு வெள்ளை விளக்கியிருக்கிறது.

சேரியில் பிறந்த ஒரு சிறுவன் வாழ்வில் சந்திக்கும் துயர நிகழ்வுகளும், எதிர்த்துப் பேசத் திராணியற்ற அவனுடைய இயலாமை நிலையின் உக்கிரமும் நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.

இஸ்லாம் தீவிரவாதிகளை மட்டுமே கைத்தட்டி வரவேற்கும் சமூகத்தில் இந்துத்துவ வெறியின் நிஜத்தை கண் முன் நிறுத்தி நமது புண்களை நமக்கே தொட்டுக் காட்டி நமது மதச்சார்பின்மையை வீரியத்துடன் விசாரிக்கிறது.

சிறுவர்களைப் பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் இந்தியாவில் சர்வ சுதந்திரமாகத் திரிகின்றனர் என்று நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது.

இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தத் திரைப்படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே எனது பதில்.

டீ விற்கும் பையன் என்பதற்காக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  அவமானப் படுத்தும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் செயல்கள் மிகைப்படுத்தப்பட்டவை.

“உண்மையான அமெரிக்கா பணம் தந்து அரவணைக்கும்” எனும் மேலை நாட்டு ஆதிக்க சிந்தனையின் திணிப்பு வெகு செயற்கை.

சிறுவர்கள் கையில் எப்படி ஒரு துப்பாக்கி கிடைத்தது என்பது நம்ப முடியாத புதிர். இப்படி குறைகளையும் நிறையவே அடுக்க முடியும்.

என்ன தான் இருந்தாலும் சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு எகிறிக் குதிப்பதெல்லாம் ஹிந்தி மசாலாத் தனத்தைத் தவிர்த்து சிலாகிக்க ஏதுமற்றது.

இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிவந்த ரஹ்மானின் இசை மௌனத்தையும் வீச்சுடன் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் படங்களுக்கே உரிய பாணியில் பின்னணி இசை சேர்த்திருப்பது உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். எனில்,ஹெய் ஹோ – பாடலுக்கான ஆஸ்கர், அட… இப்படிப் பார்த்தால் ரஹ்மானுக்கு எத்தனையோ ஆஸ்கர் கிடைத்திருக்கவேண்டுமே என தோன்ற வைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியிடவே வெகு சிரமப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று உலகெங்கும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கப்படுகிறது.உலக அளவில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாக உலக பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன, பத்தி பத்தியாக பாராட்டுப் பத்திரங்கள் வாசிக்கின்றன.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய கியூ அண்ட் ஏ நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை மிகத் திறமையாக இயக்கிய டேனி போயல் இந்தியத் திரையுலகுக்கு ஆஸ்கரின் கதவுகளை சற்று அகலமாகவே திறந்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..


ஸ்லம்டாக் பெற்றுள்ள ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம் : ஸ்லம் டாக் மில்லியனர்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த பாடல் – “ஜெய் ஹோ…” – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த தழுவல் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

சிறந்த இசை சேர்ப்பு – ரிச்சர்ட் பிரைகே & ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்

நன்றி :  தமிழ் ஓசை, களஞ்சியம்