பாகிஸ்தானின் பாதுகாப்பு வேடம் கலைந்தது

sl

தீவிரவாதிகளின் தாயகமான பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சர்வதேச அளவில் மாபெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

நெஞ்சிலும், கால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் இலங்கை வீரர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட திகிலுடன் இருந்ததாகத் தெரிவிக்கும் செய்திகள் விளையாட்டு ரசிகர்களை மட்டுமன்றி உலக நலவாழ்வை மதிக்கும் அனைவரையுமே திகைப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதவில்லை என இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சொல்லி வந்ததையெல்லாம் சகட்டு மேனிக்கு மறுத்து வந்த பாகிஸ்தான் இந்த தாக்குதலில் நிலைகுலைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அயல் நாடுகளைத் தாக்க தனது வீட்டில் வரைபடம் வரைய தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளித்த பாகிஸ்தான் இப்போது தான் வேட்டியில் விட்ட ஓணானினால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறது

ஒரு அயல் நாட்டு கிரிக்கெட் குழுவுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் பரிதாபத்தின் சின்னமாகவே காட்சியளிக்கிறது. பாகிஸ்தானின் விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியுடன் கேட்டிருக்கும் மன்னிப்பே அதற்கான ஒரு சாட்சி.

உலக கிரிக்கெட் குழுக்கள் (பிசிசிஐ) உட்பட தெரிவிக்கும் அதிர்ச்சியும் இரங்கலும் நிலைமையைச் சரிசெய்து விட முடியாது எனினும், பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான உலக நாடுகளின் அணுகுமுறையை இன்னும் தீவிரப்படுத்தும் என நம்பலாம்.