ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல !

 

tamilஇன்று தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழி நெடுகிலும் பார்க்க முடிந்தது எங்கும் எதிலும் “அய்யா” மற்றும் “சின்ன அய்யா” வாசகங்கள்.

ஐயா என்று அழைப்பது பிழை என்று கருதி “அய்யா” என அழைக்கிறார்களா என்பது புரியாமல் குழம்பியதால்,
கூடவே பயணித்த நண்பனிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“ஒருவேளை நேமாலஜியாய் இருக்குமோ” என எனக்கு ஒரு கேள்வியையே பதிலாய் சொல்லி மேலும் குழப்பத்திலாழ்த்தினான்.  ( ஐயா படம் எடுத்த ஹரியிடம் கேட்டிருக்க வேண்டுமோ ? )

சின்ன வயதில் “ஐ” என்னும் வார்த்தை சுத்த உயிரெழுத்து, மெய்யாலுமே மெய் கலக்காதது என்றெல்லாம் பெருமையாய் படித்திருக்கிறேன். அந்த ஐ –க்கு இப்படி ஒரு நிராகரிப்பு நிகழ்ந்து விட்டதே என எனது ஐ கலங்கி கண்ணீர் வந்து விட்டது. அய்!!!!

அப்புறம் எனக்குள் ஒரு “ஐ”(அய்?)யம் எழுந்தது.

ஒருவேளை “ஐ” என்பது “ஜ” போல தோன்றுவதால் இதுவும் வடமொழிச் சொல் என நினைத்தார்களோ தமிழ் ஆர்வலர்கள் ? 

போன் கிடைத்தால் மக்கள் தொலைக்காட்சி தமிழ் அறிஞரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

காலையிலிருந்து ஐ(அய்?)ந்து மணி வரை யோசித்தும் ஒன்றும் பிடிபடாததால் வலையுலக தமிழ் தலைகளிடம் கேட்கலாம் எனும் யோசனையில் இங்கே பதிவிடுகிறேன்.

ஐயிரண்டு என்பது பத்து என்பது மாறி இப்போது ஐ-இரண்டு மீன்ஸ் கண் இரண்டு தானே என பதின் வயதுகள் கேட்கும் காலம் இது. ஐயய்யோ …. இருக்கிற ஒரு ஐயும் போகுமோ எனும் கவலையும் எழாமல் இல்லை 🙂

எனினும், போஸ்டர் அடிக்கும் நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கவனமாக எழுத்தை அடியுங்கள். குறில் நெடிலை கவனத்தில் கொள்ளுங்கள். !