ஸ்லம் டாக் மில்லியனர், சர்வதேசத் திரையில் இந்திய அவலம்

 

slumdog-millionaire-640x426

( தமிழ் ஓசை நாளிதழில் வெளியான முதல் திரைப்பட விமர்சனம் !!)

எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் இந்தியாவின் சந்துகளிலும் கூட பரவ விட்ட ஸ்லம் டாக் மில்லியனர் ( கோடீஸ்வர சேரி நாய் ) திரை உலகின் அங்கீகரிக்கப்பட்ட மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் நாட்டின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆக்கிரமிப்பும், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே எடுத்திருக்கும் திரைப்படம் எனும் தன்மையும், பெரும்பாலும் இந்தியக் கலைஞர்களினால் நிறைந்திருக்கக் கூடிய படம் என்பதும் இந்தப் படத்தை ஓர் இந்தியப் படமாகவே மக்கள் கொண்டாடக் காரணமாகி விட்டன.

அதனால் தான் இந்தத் திரைப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைக் கூட இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த ஆஸ்கர் அங்கீகாரமாய் பார்க்கின்றனர் இந்தியர்களில் ஒரு பிரிவினர்.

இன்னொரு சாரார் இந்தத் திரைப்படத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்தத் திரைப்படம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது, இந்தியாவின் அவலட்சணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. இது மேலை நாட்டின் ஆணவம் என்பது அவர்களுடைய வாதம்.

அப்படி ஸ்லம்டாக் மில்லியனர் படம் என்னதான் சொல்கிறது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கதையின் நாயகனான பதின் வயதுச் சிறுவன் பங்குபெறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை அளித்து அதிர வைக்கிறான். அவனோ சேரியில் பிறந்து, மும்பையில் ஒரு கால் செண்டர் நிறுவனத்தில் டீ வாங்கித் தரும் வேலை செய்யும் எடுபிடி.

நிகழ்ச்சியை நடத்துபவருக்கு இவனுடைய திறமை மேல் சந்தேகம் எழுகிறது. தன்னைத் தவிர யாரும் அறியாமை இல்லை எனும் மேல்குலத்தின் ஆணவ சிந்தனையின் வெளிப்பாடு அது. ஏதோ ஏமாற்று வேலை நடக்கிறது என நாயகனை அவன் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.

காவல்துறை கேட்பதற்கு யாருமற்ற அந்த சிறுவனை  நையப்புடைத்து “உண்மையை” வாங்க முயல்கிறது. அடிபட்டு, மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு, உதைபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அவன் “எனக்கு கேள்விகளுக்கான விடை தெரியும்” என்கிறான் பலவீனமாய்.

எப்படி கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தது என விசாரிக்கிறார் காவல் அதிகாரி. அவன் தனது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து கேள்விகளுக்கான விடைகளைப் பொறுக்கி எடுத்த விதத்தை ஒவ்வொன்றாய் விளக்குகிறான்.

அந்த கேள்விகளின் ஊடாக பயணிக்கும் படம், அவனுடைய வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களை புரட்டிக் கொண்டே பயணித்து பார்வையாளரை உறைய வைக்கிறது.

அப்படி என்னதான் வலி மிகுந்த நிகழ்வுகள் அவனுக்கு விடை சொல்லிக் கொடுத்தன ?

குறைவான வசதிகளும், குறைவற்ற ஆனந்தமுமாய் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சேரியில் இந்துத்துவ வெறியர்களின் வெறித் தாக்குதல் மூர்க்கத் தனமாய் மோதுகிறது. சிறுவனான கதையின் நாயகனின் தாய் படுகொலை செய்யப்படுகிறாள். அண்ணனுடன் உயிர்தப்ப பாதங்களில் பதை பதைப்புடனும்,  கண்களில் கிலியுடனும், குருதிக்கு இடையிலும், நெருப்புக்கு நடுவிலும் ஓடித் திரியும் சிறுவனின் கண்களில் படுகிறான் ராமர் வேடமணிந்த சிறுவன்.

சோகத்தின் பிசுபிசுப்புடன் அவனுடைய மனதில் ஒட்டிக் கொண்ட ராமனின் கையிலிருக்கும் அம்பும், வில்லும் ஒரு கேள்விக்கான விடையாகிறது.

தப்பி ஓடி சாக்கடையிலும், குப்பை மேட்டிலும் உழலும் சிறுவர்களை சிலர் கபடச் சிரிப்புடன் கடத்தில் செல்கின்றனர். அவர்கள் சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் பாதகர்கள். அந்தக் கூட்டத்தில் கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் உலவுகின்றனர் சிறுவர்கள்.

சிறுவர்களைப் பாடவைத்து, அவர்கள் நன்றாகப் பாடுகிறார்களெனில் அவர்களைப் பாராட்டி, கொடூரச் சிரிப்புடன் அவர்களுடைய கண்களில் நெருப்பில் பழுத்த கரண்டியைத் தேய்த்து பார்வையைப் பறித்து பிச்சையெடுக்க வைக்கின்றனர்.  தர்ஷன் தோ கான்ஷயாம் பாடலை எழுதியது யார் எனும் கேள்விக்கான விடை இந்தக் கண்ணீர் கதையிலிருந்து கிடைக்கிறது.

இப்படியாய் ஒவ்வோர் கேள்விக்கான விடையையும் ஒவ்வோர் அதிர்ச்சிப் பக்கத்திலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறான் நாயகன் எனும் உண்மை காவல் துறைக்கு புரிந்து போகிறது.

ஆயிரம் ரூபாய் நோட்டில் இருப்பவருடைய பெயர் காந்திஜி என்பது தெரியாது, இந்தியச் சின்னத்தில் இருப்பது “வாய்மையே வெல்லும்” என்பது தெரியாது ஆனால் நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரியும் எனும் வித்தியாசமான கதைக்களமாய் விரிகிறது படம்.

சேரிச் சிறுவன் எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் ? இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை அளிக்கக் கூடிய எந்தத் திறமையும் நாயகனிடம் இல்லையே ? எனும் கேள்விக்கு விடையாகிறது நாயகனின் காதல் நினைவுகள்.

சிறுவயதில் கலவரத்திலிருந்து தப்பி ஓடும்போது அண்ணனின் நிராகரிப்பையும் மீறி சேர்த்துக் கொள்கிறான் ஒரு சிறுமியை. இந்த மூவர் அணி பின் பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் மாட்டி அங்கிருந்து தப்பி ஓடும் போது அண்ணனின் சூழ்ச்சியால் அவள் மட்டும் பிடிபடுகிறாள். சிவப்பு விளக்குப் பகுதியில் வளர்ந்து நாட்டியம் பயிலும் அவளை சில பல இடர்பாடுகளுக்குப் பின் மீண்டும் தப்பிக்க வைத்தால் அண்ணனின் துரோகத்தால் மீண்டும் அவளை இழக்கிறான். இப்போது அவள் மும்பை தாதாவின் வீட்டில் சிக்கிக் கொள்கிறாள்.

அங்கிருந்து அவள் வந்து சேர்வாளா எனும் எதிர்பார்ப்பே நாயகனின் பிரதான எதிர்பார்ப்பாகிப் போகிறது.  நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான், வெல்கிறான், என படம் மசாலாத்தனமாய் முடிந்து போகிறது.

கதையாய் பார்க்கையில் சாதாரணமாய் தோன்றும் இந்தப் படம் மும்பையின் சேரியையும், அழுக்கையும், இந்தியாவின் மத வெறியையும், காவல் துறையின் கொடூர விசாரணைகளையும் வெளிச்சம் போட்டிருக்கிறது எனுமளவில் அழுத்தம் பெறுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று படம் எடுத்துப் பழக்கப்பட்டுப் போன நமது இயக்குநர்களை நிற்க வைத்து நமது வீட்டுக் கொல்லை எப்படி இருக்கிறது என்பதை ஒரு வெள்ளை விளக்கியிருக்கிறது.

சேரியில் பிறந்த ஒரு சிறுவன் வாழ்வில் சந்திக்கும் துயர நிகழ்வுகளும், எதிர்த்துப் பேசத் திராணியற்ற அவனுடைய இயலாமை நிலையின் உக்கிரமும் நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.

இஸ்லாம் தீவிரவாதிகளை மட்டுமே கைத்தட்டி வரவேற்கும் சமூகத்தில் இந்துத்துவ வெறியின் நிஜத்தை கண் முன் நிறுத்தி நமது புண்களை நமக்கே தொட்டுக் காட்டி நமது மதச்சார்பின்மையை வீரியத்துடன் விசாரிக்கிறது.

சிறுவர்களைப் பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் இந்தியாவில் சர்வ சுதந்திரமாகத் திரிகின்றனர் என்று நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது.

இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தத் திரைப்படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே எனது பதில்.

டீ விற்கும் பையன் என்பதற்காக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  அவமானப் படுத்தும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் செயல்கள் மிகைப்படுத்தப்பட்டவை.

“உண்மையான அமெரிக்கா பணம் தந்து அரவணைக்கும்” எனும் மேலை நாட்டு ஆதிக்க சிந்தனையின் திணிப்பு வெகு செயற்கை.

சிறுவர்கள் கையில் எப்படி ஒரு துப்பாக்கி கிடைத்தது என்பது நம்ப முடியாத புதிர். இப்படி குறைகளையும் நிறையவே அடுக்க முடியும்.

என்ன தான் இருந்தாலும் சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு எகிறிக் குதிப்பதெல்லாம் ஹிந்தி மசாலாத் தனத்தைத் தவிர்த்து சிலாகிக்க ஏதுமற்றது.

இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிவந்த ரஹ்மானின் இசை மௌனத்தையும் வீச்சுடன் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் படங்களுக்கே உரிய பாணியில் பின்னணி இசை சேர்த்திருப்பது உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். எனில்,ஹெய் ஹோ – பாடலுக்கான ஆஸ்கர், அட… இப்படிப் பார்த்தால் ரஹ்மானுக்கு எத்தனையோ ஆஸ்கர் கிடைத்திருக்கவேண்டுமே என தோன்ற வைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியிடவே வெகு சிரமப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று உலகெங்கும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கப்படுகிறது.உலக அளவில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாக உலக பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன, பத்தி பத்தியாக பாராட்டுப் பத்திரங்கள் வாசிக்கின்றன.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய கியூ அண்ட் ஏ நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை மிகத் திறமையாக இயக்கிய டேனி போயல் இந்தியத் திரையுலகுக்கு ஆஸ்கரின் கதவுகளை சற்று அகலமாகவே திறந்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..


ஸ்லம்டாக் பெற்றுள்ள ஆஸ்கர் விருதுகள்:

சிறந்த படம் : ஸ்லம் டாக் மில்லியனர்
சிறந்த இயக்குனர்-டேனி போயல்
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த பாடல் – “ஜெய் ஹோ…” – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த தழுவல் திரைக்கதை: சைமன் பியூஃபாய்
சிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்

சிறந்த இசை சேர்ப்பு – ரிச்சர்ட் பிரைகே & ரேசுல் பூகுட்டி
சிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்

நன்றி :  தமிழ் ஓசை, களஞ்சியம்

8 comments on “ஸ்லம் டாக் மில்லியனர், சர்வதேசத் திரையில் இந்திய அவலம்

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    Like

Leave a comment