கோபம் கொல்லும்

anger-how-5

பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.

கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

அப்படியானால் ஆரோக்கியம் சிறப்பாக இல்லையென்றால் ? இந்த விழுக்காடு இருபத்து ஐந்து என எகிறுகிறதாம்.

நல்ல திடகாத்திரம், ஒழுங்கான உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கம் எல்லாம் இருந்தாலும் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லையெனில் அதோ கதி தான் என்பதையே இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

கோபப்படும் போது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்சிசால் எனும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் ஒரு காரணி என இதற்கான மருத்துவ விளக்கத்தை எளிமையாய் தெரிவிக்கிறார் ஆராய்ச்சியின் தலைவர் யோய்சி சிந்தா.

இதைக் குறித்து அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி கோபம் எப்படி இதயத்திலுள்ள மின் அமைப்பைப் பாதிக்கிறது எனும் கோணத்தில் நடந்தது.

அந்த ஆய்வின் முடிவு, கோபம் இதயத்தின் மின் நிலையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கி விடுகிறது என நீள்கிறது. இவை மாரடைப்புக்குக் காரணமாகி விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 40000 சடுதி மரணங்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் விளையாட்டுகள் இந்த நிலையற்ற மின் அதிர்வுச் சிக்கலை பல கோடி இதயங்களில் உருவாக்கி விடுகின்றன. இப்படி ஒரு சில தேசங்களை ஒட்டு மொத்தமாக ஒரு இறுக்கமான நிலைக்குள் தள்ளும் போது மாரடைப்புகள் அதிகரிக்கின்றன என தெரிவிக்கிறார் அமெரிக்க மருத்துவர் லாம்பெர்ட்.

கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே விடவேண்டியவை மது, புகை மட்டுமல்ல கோபமும் கூடத் தான் என்பதைக் கவனத்தில் கொள்வோம் !