எஸ்.எம்.எஸ் ஐ வாசித்தால் முதலில் தலை வலி வருகிறது. பின் அந்த வலி மிகக் கடுமையான வலியாக மாறி மூளையில் இரத்தக் கசிவை உருவாக்கி விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த இரத்தக் கசிவு உயிரையே பறித்துக் கொள்கிறது.
இது மர்மக் கதையோ, அறிவியல் புனைக் கதையோ இல்லை உண்மை சம்பவம் என அடித்துச் சொல்கின்றனர் சிலர்.
இந்த பரபரப்பான செய்திகள் உலவிக் கொண்டிருப்பது எகிப்திலும், சவுதி அரேபியாவிலும்.
இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் இப்போதெல்லாம் எந்த எஸ்.எம்.எஸ் வந்தாலும் படிக்காமலேயே அழித்து விடுகின்றனராம். எஸ்.எம்.எஸ் வருமோ எனும் பயத்திலேயே கழிகிறதாம் பலருடைய வாழ்க்கை.
எகிப்திய அரசும், நலவாழ்வுத் துறை அமைச்சகமும் இப்படிப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களை அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் மறைமுகமாக எகிப்திய காவல்துறை இந்தக் கதையின் பின்னணியை தீவிரமாய் ஆராய்ந்து வருகிறதாம்.
முன்பெல்லாம் பதினைந்து காசு அஞ்சலட்டையில் நமக்கு கடிதங்கள் வரும். இந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்து பதினைந்து பேருக்கு அனுப்பாவிடில் உன் தலை சுக்கு நூறாகவோ நூற்று ஐம்பதாகவோ உடைந்து விடும் என.
பள்ளிக்கூட நாட்களில் இப்படிப் பட்ட கடிதங்கள் வந்ததனால் மிரண்டு போய் ஒளித்து ஒளித்து கடிதம் எழுதிய நண்பர்கள் பலர் எனக்கும் இருந்தார்கள்.
பதின் வயதுகளில் எனக்கு அப்படி வந்த முதல் கடிதத்தை கிழித்துப் போடும் போது எனக்குள்ளும் சிறு பயம் இருக்கத் தான் செய்தது ! பின் அது வேடிக்கையாய் மாறி, யாருக்கு அப்படிப்பட்ட கடிதம் வந்தாலும் என்னிடம் கொண்டு வந்து கிழிக்கச் சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் என்ன கிழிச்சேன் என்பதற்கு ஒரு பதில் இதுவாகவும் இருக்கலாம் என்பது எனது பள்ளிக்கூட சுவாரஸ்ய நினைவுகள்.
அஞ்சலட்டை என்பது, மின்னஞ்சலாகி, இப்போது எஸ்.எம்,எஸ் ஆகி இருக்கிறது. ஆவிகளைக் குறித்தும், வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்தும் கதை எழுதப் பிரியப்படுபவர்களுக்கு நல்ல தீனி… வெறென்ன சொல்ல ?
You must be logged in to post a comment.