சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம் !

 

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1

தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.

மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.

சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.

மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.

அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

பயமற்ற சூரியக் குளியல்…

 

10

மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வரும் பலரும் கடற்கரையோரங்களில் குறைந்த பட்ச ஆடைகளோடு சூரிய ஒளிக் குளியலில் லயித்திருப்பது சகஜம்.

நமது நாட்டிலும் சூரியக் குளியல் மற்றும் சூரிய ஒளியில் ஓய்வு எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.

இந்த சூரியக் குளியலில் பல்வேறு நன்மைகள் உண்டு. மிக முக்கியமான நன்மை வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி. அதேபோல இந்த சூரியக் குளியலில் பல்வேறு தீமைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சன் பர்ன்” எனப்படும் வெப்பத்தினால் உடலில் தோல் சிவந்து போய் கொப்புளங்களோ, புண்களோ வருவது.

சிலருக்கு மிகவும் மிருதுவான தோல், விரைவில் சிவந்து போய்விடும். சிலருடைய தோல் வெப்பத்தை அதிகம் கிரகித்துக் கொள்ளும். இது தான் சூரியக் குளியல் நடத்துவோரின் மிகப்பெரிய சிக்கல்.

எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம், எப்போது நிழலில் போகவேண்டும் ? போதுமான அளவு வெயிலில் இருந்து விட்டேனா என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே என கலங்கியிருந்த சூரியக் குளியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.

சின்ன ஒரு பிரேஸ்லெட் போன்ற இந்த மெல்லிய ஸ்டிரிப் ஒன்றை நமது கைகளில் கட்டிக் கொண்டால் நமது உடல் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான வெயில் தாக்கும் போது இந்த ஸ்ட்ராப் “பிங்க்” நிறமாக மாறிவிடுகிறதாம்.

வெயிலிலுள்ள புற ஊதாக்கதிர்களின் அளவைக் கிரகித்தும், நமது தோலின் தன்மையை அறிந்தும் இந்த கருவி செயல்படுகிறதாம்.

சூரிய வெப்பம் தாக்கிவிடுமோ எனும் பயத்தில் தேவையற்ற கிரீம்களை உடலில் பூசிக்கொள்வதோ, தேவையான அளவு வெயிலை ரசிக்க முடியாமல் போவதோ இதன் மூலம் முழுமையாக தவிர்க்கப்படும் என்பது சிறப்புச் செய்தியாகும்.

புற உதாக் கதிர்களின் தாக்கம் பல வகை தோல் புற்றுநோய்களுக்குக் கூட காரணமாகி விடுகிறது, இந்த எளிய ஸ்ட்ராப், நம்மை எச்சரிக்கை செய்வதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் அதிகமாய் தாக்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

மிகவும் மலிவாக, ஒரு சில ரூபாய்கள் எனும் விலையில் இந்தப் பொருள் விற்பனைக்கு வர இருக்கிறது.

கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் இந்த கண்டு பிடிப்புக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

“ஹேர் டை” : ஆபத்தாகும் அழகுப் பொருள் !

 215 வயதான கர்லா ஹேரிஸ் க்கு நடனப் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டொரு நாளில் நடனப் போட்டி. போட்டியில் அழகாய் தெரிய வேண்டும் எனும் உந்துதலால் தனது அழகிய நேரான கூந்தலுக்கு கொஞ்சம் வர்ணம் சேர்க்க விரும்புகிறாள் சிறுமி கர்லா.

லோரியல் நிறுவனத்தின் தயாரிப்பான கூந்தல் நிறமியை வாங்கி வருகிறாள். லோரியல் என்பது பாரிசை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் உலகிலேயே மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டுக்கு வந்து, தனது தலையில் கொஞ்சமாய் தலையில் அந்த “ஹேர் டை” யை தேய்க்கிறாள். கொஞ்சம் எரிச்சல், அரிப்பு வருவது போலத் தோன்றுகிறது. ஏன் அரிக்கிறது என யோசித்துக் கொண்டே தனது வேலையை முடித்துக் கொள்கிறாள்.

இரவில் நிம்மதியாய் தூங்கி, மறுநாள் காலையில் உற்சாகமாய் எழும்பிய சிறுமி, தனது பல வண்ணக் கூந்தல் எப்படி மிளிர்கிறது என கண்ணாடியில் பார்த்தபோது அதிர்ந்து போகிறாள். அவளுடைய முகம் ஒரு பூசணிக்காய் போல வீங்கியிருக்கிறது. !!

அழகு சாதனப் பொருட்கள் ஆபத்தையும் தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஒரு சிறு உதாரணம் தான் மேற்கூறிய இந்த நிகழ்வு.

அந்த ஹேர் டை யில் நச்சுப் பொருளான PPD எனும் வேதியல் பொருள் இருந்ததே இந்த ஒவ்வாமைக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. இந்த பொருள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.1

 

உலகின் மாபெரும் நிறுவனத்தின் பொருட்களிலேயே இந்த விஷத் தன்மை இருக்கிறதெனில் மற்ற பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் என அதிர்ந்து போயிருக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.

வெறுமனே வீக்கம் வந்துவிட்டு விலகிப் போகும் சமாச்சாரம் என்று இதை தள்ளி விட முடியாது. இந்த வீக்கம் பெரிதாகி நாக்கு, தொண்டை போன்றவை அளவுக்கு அதிகமாகி வீங்கி விட்டால் உயிருக்கே ஆபத்து என்பது அச்சுறுத்தும் உண்மையாகும்.

” விஷப் பொருள் இருக்கிறது என்று தெரிந்தும் அதை அனுமதிப்பது என்பது அந்த நிறுவனத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கும் செயல். இனிமேல் என் வாழ்நாளில் ஹேர் டை எனும் பேச்சுக்கே இடமில்லை” என கலங்கிப் போய் கூறுகிறாள் சிறுமி.

ஹேர் டை உபயோகிப்பவர்களில் 7.1 விழுக்காடு மக்களுக்கு ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுவதாக 2007ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

இந்த அழகுப் பொருட்களிலெல்லாம் எந்த அச்சுறுத்தலும் இல்லை, மக்கள் இதைத் தைரியமாகப் பயன்படுத்தலாம் என லோரியல் நிறுவனம் தனது மறுப்பில் தெரிவித்துள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் நிகழ்வுகளைப் பொதுமைப் படுத்தக் கூடாது என்பது அவர்களின் வாதம். எனில் எதையும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது நமது விருப்பம் !

 

 

 

வேட்பாளர்களை கதிகலங்க வைக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட்கள் !

7karunanidhi1அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர் தேர்வுக் குளறுபடி உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் இன்னும் யாரை எங்கே நிறுத்தலாம் எனும் முடிவுக்கே வராமல் குய்யோ முய்யோ என கூச்சல் போட்டு கட்சியின் மானத்தையே வாங்கிக் கொண்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலை விட வேட்பாளர் தேர்வே அவர்களுக்கு பெரும் சவாலாகிக் கொண்டிருக்கிறது !

மதிமுக, பாமக, போன்ற “வேறு வழியில்லா” கட்சிகள் ஏற்கனவே நினைத்து வைத்திருந்தவர்களை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

தனிக் கட்சிகளால் அப்படி ஒதுங்க முடியவில்லை. திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அதிமுக அதிரடியாக மாற்றி பரபரப்பை ஏற்படுத்த, தே.மு.தி.க தனது மதுரை வேட்பாளரை மாற்ற அடுத்த மாற்றத்துக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க!

மூன்று நான்கு வேட்பாளர்களை தி.மு.க மாற்றலாம் எனும் செய்தி திமுக வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது.

அதில் முக்கியமானவர், தன் படத்துக்கு, தானே போஸ்டர் ஒட்டி, தானே டிக்கெட் எடுத்துக் கொடுத்து, படம் பார்க்க வருபவர்களுக்கு தன் செலவில் பிரியாணியும் வாங்கிக் கொடுக்கும் “நாயகன்” ரித்தீஷ் !  “அவருக்கெல்லாம் சீட் கொடுத்து தலைமை எங்களை  அவமானப்படுத்தும் என நினைக்கவில்லை” என கொதித்துப் போய் திரிகின்றனர் காலம் காலமாய் திமுகவுக்கு விசுவாசமாய் உழைத்து வந்த ராமநாதபுரம் பகுதி தொண்டர்கள்.

தூத்துக்குடி வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை மீது மக்களிடையே ஆதரவே இல்லை. ஒரு செக்ஸ் டாக்டர்ப்பா அவரு என கிண்டலடிப்பதிலேயே மக்கள் குறியாக இருக்கிறார்களாம். சி.ஐ.டி ரிப்போர்ட் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை.

இன்னொன்று கள்ளக்குறிச்சி, அங்கே ஆதிசங்கரருக்கு மவுசு இல்லையாம்.

நான்காவது குமரி !

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது தான் இன்றைய நிலமை. அங்குள்ள காங்கிரஸ் மக்கள் அவ்வளவு தூரம் கொதித்துப் போயிருக்கின்றனர். எனவே ஹெலன் டேவிட்சனை மாற்றிவிட்டு வைகோ போட்டியிடப் போகும் விருதுநகருக்கு திமுக தனது இடத்தை மாற்றலாமா எனவும் யோசிக்கிறது.

இந்த மாற்றங்களையெல்லாம் கொளுத்திப் போடுவது சி.ஐ.டி ரிப்போர்ட்கள். மதுரையையே பெரும்பாலும் மையமாக வைத்து இயங்கும் இந்த சிஐடி குழுக்கள் தொகுதிகளில் சென்று கண்டறிந்து வரும் செய்திகள் பலவும் அரசியல் தலைமை இடங்களைக் கதி கலங்க வைக்கிறதாம்.

எப்படித் தான் இவர்களெல்லாம் பல அடுக்கு கண்களில் மண்ணைத் தூவி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தார்கள் என்பதே தலைமைகளின் தலையை உலுக்கும் பிரச்சனையாகியிருக்கிறது.

ஆங்காங்கே மாறிக்கொண்டிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றவர்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தில்லு முல்லு செய்து போலி ரிப்போர்ட்களைத் தயாரித்து தலைமையின் கண்ணில் மண்ணைத் தூவியவர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்களாம்.

இந்த மாற்றங்கள் மீது கலைஞருக்கு உடன்பாடில்லையாம். ஆனால் அழகிரியும், ஸ்டாலினும் இந்த மாற்றங்கள் வராவிடில் தேவையில்லாமல் தோல்வியை விரும்பி அழைப்பது போல் ஆகிவிடும் என அழுத்தம் கொடுக்கின்றனராம். விஷயம் ரொம்ப நாள் உள்ளுக்குள்ளேயே இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு !

மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !

புரோகோலி புசியுங்கள்

broccoli 

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.

ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.

புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.

புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.

இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.

அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.

இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே !

0

வைகோ வை வாழ்த்தும் குமரிமாவட்ட காங்கிரசார் !

vaikoobama_01குமரிமாவட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போய் கிடக்கிறது. காங்கிரசின் கோட்டையான குமரிதொகுதியை இந்த முறை காங்கிரசுக்குக் கொடுக்காமல் திமுக வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறது.

“நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என்று சொல்லி வந்த கலைஞருக்கு குமரியிலும் திமுகவின் ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனும் உந்துதல் ஒரு காரணமாய் இருக்கலாம்.

ஆனால் அதுவே குமரி மாவட்ட காங்கிரஸ்காரர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் நிலவரப்படி, காங்கிரஸ் திமுக வுக்காக குமரியில் உண்மையாய் உழைப்பார்கள் என்று சொல்ல முடியாது.

குமரியில் ஜெயிக்கும் கட்சியே மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்பது காலங்காலமாய் நிகழும் ஒரு செண்டிமெண்டும் கூட.

கிறிஸ்தவர்கள் நிரம்பியிருக்கும் குமரியில் எப்போதுமே கிறிஸ்தவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள் வெற்றி பெறுவதே வழக்கம். பா.ஜ.க வின் வெற்றிக்குக் கூட கிறிஸ்தவர்களிடையே மற்ற வேட்பாளர்கள் மேல் அப்போது எழுந்த  அதிருப்தியே காரணம். அப்போது ஆலயங்களில் சுற்றறிக்கைகளில் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு கோரப்பட்டது.

கிறிஸ்தவ வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள குமரியில் 23 – விழுக்காடு புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள், 26 விழுக்காடு கத்தோலிக்கர்கள், 16 விழுக்காடு கடலோர வாக்குகள் என மூன்று பிரிவாக இருக்கிறது.

இதில் பெல்லார்மினை நிறுத்தியிருப்பதன் மூலம் கத்தோலிக்கர்களுடைய வாக்குகளைக் கவர்ந்து விடலாம் என்பது கம்யூனிஸ்ட்களின் எண்ணம். ஆனால் கடந்தமுறை பெல்லார்மின் செயல்பாடுகளின் மேல் அதிருப்தியே அங்கு நிலவுகிறது. இதனால் ஸ்காட் கல்லூரிப் பேராசிரியரை நிறுத்தி விடுவார்களோ என கலங்கிப் போயிருந்த எதிர்கட்சிகளுக்கு கம்யூனிஸ்டின் இந்த முடிவு மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது.

தேமுதிக வேட்பாளர் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களின் கணிசமான வாக்குகளைப் பெறப்போவது திண்ணம். ஏனெனில் வேட்பாளர் தென்னிந்தியத் திருச்சபையில் பிரபலப் புள்ளி !

இத்தகைய சூழலில் காங்கிரஸ்- திமுக மோதிக்கொள்வது தன் தலையில் தானே மண்வாரிப் போடுவது, அல்லது மற்ற கட்சியினருக்கு வரம் வழங்குவது என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.

இந்த சூழலில் தான் வை.கோ விருதுநகரில் போட்டியிடுவது குமரி மாவட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

விருதுநகரில் வை.கோவைத் தோற்கடிக்க இளங்கோவனைக் களமிறக்க திமுக கேட்டுக் கொண்டது. ஆனால் இளங்கோவனுக்கு அதில் விருப்பமில்லை. வை.கோவை எதிர்த்து வெற்றி பெறமாட்டோம் எனும் நம்பிக்கையா, அல்லது வைகோ வின் ஈழ ஆதரவும், இளங்கோவின் முழு எதிர்ப்பும் எதிர் எதிர் துருவங்களாகிவிடும் எனும் அச்சமோ ஏதோ ஒன்று இளங்கோவனைத் தடுக்கிறதாம்.

ஒபாமா மற்றும் அம்மாவின் ஆதரவு பெற்ற வைகோ ன்னா சும்மாவா ?

காங்கிரஸ் காட்டிய வேறு சில பெயர்கள் திமுகவுக்கு சற்றும் உடன்பாடு ஏற்படவில்லையாம். எனில் திமுக தானே அந்தத் தொகுதியில் போட்டியிட்டு அழகிரியின் “ஒத்துழைப்போடு” விருதுநகரை வசப்படுத்திவிட வேண்டும் என முனைப்புடன் இருக்கிறதாம்.

ஏற்கனவே பல வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த குமரி மாவட்ட காங்கிரஸ், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குமரியைக் கேட்கிறது. திமுக வோ, தென்சென்னையைக் கொடுக்கலாம் என பேசுகிறது.

இருந்தாலும் தனி இன்வெஸ்டிகேஷன் குழு குமரியில் கூடாரமடித்து, மீண்டும் வேட்பாளரை மாற்றினால் குமரியில் நிலை என்ன ? மக்கள் ஆதரவு கிடைக்குமா ? காங்கிரஸ் திமுக இனைந்து பணி செய்யுமா போன்ற பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து காயப்போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வை.கோ நல்லா இருக்கணும் என குமரி காங்கிரஸ்காரர்கள் வாயார வைகோவை வாழ்த்துகிறார்களாம்.

என்னவோ, விஷயம் ரொம்ப நாள் அமுங்கியே கிடக்காது இல்லையா ?

வயது 17 ! குழந்தைகள் 7 !!

 pamela

பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.

அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !

வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.

pamela21

குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.

பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !

தூக்கமே வரலையா ?

 sleep

தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் தொடர்புண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் தூக்கத்துக்கும் தற்கொலைக்கும் கூட தொடர்பு உண்டு என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

“படுத்தால் தூக்கம் வர ரொம்ப நேரமாகிறது, தூக்கம் வந்தாலும் நிம்மதியான தூக்கமா இருப்பதில்லை, அதிகாலை மூணு மணிக்கு முழிச்சா அப்புறம் தூக்கமே வரதில்லை….” என புலம்பும் மக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனும் உந்துதலுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கின்றது இந்த ஆய்வு.

ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 88 இலட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். ஒவ்வோர் தற்கொலைக்குப் பின்னாலும் பல தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. ஒரே முயற்சியில் பெரும்பாலும் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.

ஒவ்வோர் சாவுக்குப் பின்னாலும் நாற்பது முறை கூட “தற்கொலை முயற்சிகள்” நடந்திருக்கின்றனவாம். இப்படிப்பட்ட தற்கொலை முயற்சிகளுக்கு இந்த தூக்கமின்மையும் ஒரு முக்கியமான காரணமாகிவிடுகிறது.

சரியான தூக்கமின்மை பல்வேறு காரணங்களால் வருகிறது. மன அழுத்தம், உடல் நலமின்மை தொடங்கிய பல்வேறு காரணங்களால் வரும் தூக்கமின்மை தெளிவற்ற மனநிலைக்கு மனிதனைத் தள்ளி, தற்கொலை சிந்தனையைத் தூண்டி விடுகிறது என்பதே மருத்துவர்களின் கூற்று.

இதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பது தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் தற்கொலை சிந்தனைக்கும், தூக்கமின்மைக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீரோடோனின் எனும் வேதியல் பொருள் தான் மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது, அந்த வேதியல் பொருளின் நிலையற்ற தன்மைக்கு இந்த தூக்கமின்மை ஒரு முக்கியக் காரணமாகிவிடுகிறது. எனவே தான் இந்த தற்கொலை சிந்தனைகள் தலை தூக்குகின்றன என்கிறார் மருத்துவர் டானியல் பிரீமென்.

எனினும், தூக்கமின்மையில் தவிக்கும் எல்லோருக்குமே தற்கொலை சிந்தனைகள் வரவேண்டுமென்பதில்லை. உலகெங்கும் தற்கொலை சிந்தனை கொண்டவர்களை விட தூக்கமின்மையால் தவிக்கும் மக்கள் மிக அதிகம் என்பது கவனிக்கத் தக்கது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கம் மிகவும் இன்றியமையாயது என தொடர்ச்சியாய் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நிம்மதியான தூக்கத்துக்கு நேரம் ஒதுக்குவதும், அதற்காக மனதை இலகுவாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவேண்டும் என்பதும் கவனிக்கவேண்டிய செய்திகளாகும்.

தற்கொலை செய்யும் கடல் வாழ் உயிரினங்கள்

2-2627 

 

 

 

 

 

 

 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் தற்கொலை செய்வதை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா ? படு பயங்கர அதிர்ச்சியூட்டும் இந்த தற்கொலையில் உயிரிழந்திருக்கின்றன ஏராளம் டால்பின்கள் மற்றும் சுறா மீன்கள்.

கூட்டம் கூட்டமாக கடற்கரையோரமாக வருகின்றன டால்பின்கள், பின்பு அங்கேயே மரணித்து விடுகின்றன. சுறா மீன்களும் அப்படியே !

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் காரணம் புரியாமல் விழிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆளுக்கொரு கணிப்பை வெளியிடும் அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகள் ஏராளம் ஏராளம்.

beached-whales-australia-photo3463

கடலுக்கு அடியில் உள்ள ஏதேனும் மாற்றங்கள் இத்தகைய கூட்டுத் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கலாம் என்பது பலர் சொல்லும் கருத்து !

இந்த வாரம் மட்டும் சுமார் எண்பது சுறா மீன்கள் மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையோரமாக வந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன !

கடற்கரையோரமாக வரும் சுறாமீன்களையும் டால்பின்களையும், மீண்டும் கொண்டு கடலுக்குள் விடும் மீட்புப் பணியும் இந்த இடங்களில் மும்முரமாய் நடைபெற்று வருகின்றன.

இந்த வாரம் நிகழ்ந்த இந்த தற்கொலை கடந்த சிலமாதங்களில் மட்டும் ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஐந்து நிகழ்வுகளிலுமாக சுமார் 500 சுறா மீன்கள் மடிந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

whale1

ஆஸ்திரேலியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன. இங்கிலாந்துப் பகுதியில் இறந்து போன டால்பின்களைப் பரிசோதித்தபோது அவை அதிக அளவில் மண்ணை அள்ளி உண்டதாக தெரியவந்திருக்கிறது.

இந்த தற்கொலைகளுக்கான காரணம் என்ன ?

மாசு படும் கடலா ? ஆழ்கடல் பயங்கரங்களா ? ஆழ்கடல் உயிரிகளினால் ஏற்பட்ட பயமா ? இல்லை ஏதேனும் அதிர்வலைகளின் பாதிப்பா ? என குழம்பிப் போயிருக்கிறது விஞ்ஞானம், நம்மைப் போலவே !

6-1814