வைகோ வை வாழ்த்தும் குமரிமாவட்ட காங்கிரசார் !

vaikoobama_01குமரிமாவட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போய் கிடக்கிறது. காங்கிரசின் கோட்டையான குமரிதொகுதியை இந்த முறை காங்கிரசுக்குக் கொடுக்காமல் திமுக வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறது.

“நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என்று சொல்லி வந்த கலைஞருக்கு குமரியிலும் திமுகவின் ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் எனும் உந்துதல் ஒரு காரணமாய் இருக்கலாம்.

ஆனால் அதுவே குமரி மாவட்ட காங்கிரஸ்காரர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் நிலவரப்படி, காங்கிரஸ் திமுக வுக்காக குமரியில் உண்மையாய் உழைப்பார்கள் என்று சொல்ல முடியாது.

குமரியில் ஜெயிக்கும் கட்சியே மத்தியில் ஆட்சியை அமைக்கும் என்பது காலங்காலமாய் நிகழும் ஒரு செண்டிமெண்டும் கூட.

கிறிஸ்தவர்கள் நிரம்பியிருக்கும் குமரியில் எப்போதுமே கிறிஸ்தவர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள் வெற்றி பெறுவதே வழக்கம். பா.ஜ.க வின் வெற்றிக்குக் கூட கிறிஸ்தவர்களிடையே மற்ற வேட்பாளர்கள் மேல் அப்போது எழுந்த  அதிருப்தியே காரணம். அப்போது ஆலயங்களில் சுற்றறிக்கைகளில் கூட பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு கோரப்பட்டது.

கிறிஸ்தவ வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள குமரியில் 23 – விழுக்காடு புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள், 26 விழுக்காடு கத்தோலிக்கர்கள், 16 விழுக்காடு கடலோர வாக்குகள் என மூன்று பிரிவாக இருக்கிறது.

இதில் பெல்லார்மினை நிறுத்தியிருப்பதன் மூலம் கத்தோலிக்கர்களுடைய வாக்குகளைக் கவர்ந்து விடலாம் என்பது கம்யூனிஸ்ட்களின் எண்ணம். ஆனால் கடந்தமுறை பெல்லார்மின் செயல்பாடுகளின் மேல் அதிருப்தியே அங்கு நிலவுகிறது. இதனால் ஸ்காட் கல்லூரிப் பேராசிரியரை நிறுத்தி விடுவார்களோ என கலங்கிப் போயிருந்த எதிர்கட்சிகளுக்கு கம்யூனிஸ்டின் இந்த முடிவு மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது.

தேமுதிக வேட்பாளர் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களின் கணிசமான வாக்குகளைப் பெறப்போவது திண்ணம். ஏனெனில் வேட்பாளர் தென்னிந்தியத் திருச்சபையில் பிரபலப் புள்ளி !

இத்தகைய சூழலில் காங்கிரஸ்- திமுக மோதிக்கொள்வது தன் தலையில் தானே மண்வாரிப் போடுவது, அல்லது மற்ற கட்சியினருக்கு வரம் வழங்குவது என எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.

இந்த சூழலில் தான் வை.கோ விருதுநகரில் போட்டியிடுவது குமரி மாவட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

விருதுநகரில் வை.கோவைத் தோற்கடிக்க இளங்கோவனைக் களமிறக்க திமுக கேட்டுக் கொண்டது. ஆனால் இளங்கோவனுக்கு அதில் விருப்பமில்லை. வை.கோவை எதிர்த்து வெற்றி பெறமாட்டோம் எனும் நம்பிக்கையா, அல்லது வைகோ வின் ஈழ ஆதரவும், இளங்கோவின் முழு எதிர்ப்பும் எதிர் எதிர் துருவங்களாகிவிடும் எனும் அச்சமோ ஏதோ ஒன்று இளங்கோவனைத் தடுக்கிறதாம்.

ஒபாமா மற்றும் அம்மாவின் ஆதரவு பெற்ற வைகோ ன்னா சும்மாவா ?

காங்கிரஸ் காட்டிய வேறு சில பெயர்கள் திமுகவுக்கு சற்றும் உடன்பாடு ஏற்படவில்லையாம். எனில் திமுக தானே அந்தத் தொகுதியில் போட்டியிட்டு அழகிரியின் “ஒத்துழைப்போடு” விருதுநகரை வசப்படுத்திவிட வேண்டும் என முனைப்புடன் இருக்கிறதாம்.

ஏற்கனவே பல வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த குமரி மாவட்ட காங்கிரஸ், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குமரியைக் கேட்கிறது. திமுக வோ, தென்சென்னையைக் கொடுக்கலாம் என பேசுகிறது.

இருந்தாலும் தனி இன்வெஸ்டிகேஷன் குழு குமரியில் கூடாரமடித்து, மீண்டும் வேட்பாளரை மாற்றினால் குமரியில் நிலை என்ன ? மக்கள் ஆதரவு கிடைக்குமா ? காங்கிரஸ் திமுக இனைந்து பணி செய்யுமா போன்ற பல விஷயங்களை அலசி, ஆராய்ந்து காயப்போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வை.கோ நல்லா இருக்கணும் என குமரி காங்கிரஸ்காரர்கள் வாயார வைகோவை வாழ்த்துகிறார்களாம்.

என்னவோ, விஷயம் ரொம்ப நாள் அமுங்கியே கிடக்காது இல்லையா ?