தலைவலியைத் துரத்த எளிய வழி !!!

Cycle 

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்என்பார்கள். காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும். அதிலும் மைகிரைன் தலைவலி எனும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுடைய வலி மிகக் கொடுமையானது.

ஒருபக்கமாக நூலிழையில் ஆரம்பித்து தலையெங்கும் விரிந்து பரவி சுழற்றிச் சுழற்றி அடிக்கும் மைக்ரைன் தலைவலியை எப்படி வராமல் தடுப்பது என குழம்பித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது, வீட்டில் இருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான எண்ணத்தினால் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சியானது தலைவலி வரும் வாய்ப்பை 90 விழுக்காடு வரை குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

“அது எப்படிங்க ?” என வினவினால், நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது உங்கள் உடலில் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. எண்டோர்பின்கள் வலி நிவாரணியாக செயல்படும் என்பதால் தலைவலி வராமலும் அது தடுத்து விடுகிறது என மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மூளைக்கும் நல்லது என ஏற்கனவே மூட்டை மூட்டையாய் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுடைய மூளையே வலுவானதாக, நினைவாற்றல் அதிகம் கொண்டதாக இருக்கும் என அமெரிக்காவில் முன்பு ஒரு பெரிய ஆய்வு முடிவு வெளியாகியிருந்தது.

மைகிரைன் தலைவலியும் மூளையை மையப்படுத்தியதே என்பதனால் அந்த ஆராய்ச்சி முடிவும் இந்த நேரத்தில் ஒப்புமைக்கு உகந்ததாகிறது.

நிரந்தரத் தீர்வு என்பது கடினமான மைகிரைன் தலைவலிக்கு சைக்கிள் ஓட்டும் இனிமையான உடற்பயிற்சியே நிவாரணமளிக்குமெனில் அது மகிழ்ச்சியான செய்தி தானே !

 

குளிர்பானக் குட்டிச் சாத்தான் !

 

genelia-20தாகத்துக்குத் தண்ணீர் மோர், இளநீர் என்ற வளமான காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து இன்றைய இளைஞர்களின் கைகளில் கோக் பாட்டில்களாகவும், பெப்ஸி கேன்களுமாகவும் உருமாறியிருக்கிறது.

போதாக்குறைக்கு ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெரிய பெரிய ஜம்போ பாட்டில்களும் குறைந்த விலைக்கே கிடைப்பதனால் எங்கேனும் குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெரிய பாட்டில்கள் சிலவற்றைத் தூக்கிச் சுமப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

2007ம் ஆண்டைய புள்ளிவிவரத்தின் படி உலக அளவில் 552 பில்லியன் லிட்டர்கள் குளிர்பானங்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது தனிநபர் சராசரி 83. இன்னும் சில வருடங்களில் இந்த தனிநபர் சராசரி 100 லிட்டர்கள் எனுமளவுக்கு உயரும் என்கிறது பதட்டப்பட வைக்கும் புள்ளி விவரம்.

இப்படி எதற்கெடுத்தாலும் கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை உள்ளே தள்ளுவதால் நம்முடைய எலும்புகள் பலவீனமடையும் எனவும், மிதமிஞ்சிப் போனால் உடல் உறுப்புகள் செயலிழக்கக் கூட வாய்ப்புகள் உண்டு எனவும் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றனர் கீரீஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நாம் குளிர்பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றோம். அதன் விளைவுகள் எல்லா இடங்களிலும் தெரிகின்றன. பல் நோய்கள், எலும்பு நோய்கள், நீரிழிவு போன்ற நோய்கள் குளிர்பானங்களைக் குடிப்பதனால் வருகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர் மோஸஸ் எலிசாப்.

குளுகோஸ், புரூட்கோஸ், காஃபைன் போன்றவையே குளிர் பானங்களில் அதிகமாய் காணப்படும் மூலக்கூறுகள். இவையே பல்வேறு சிக்கல்களுக்கு காரணகர்த்தாக்கள்.

அதிக கோக் உட்கொள்வதனால் உடலிலுள்ள பொட்டாசியம் அளவு குறைந்து போய்விடுகிறது. இதை மருத்துவம் ஹைப்போகலேமியா என பெயரிட்டு அழைக்கிறது. இந்த சூழல் வரும்போது உடலின் தசைகள் வலுவிழந்து போய்விடுகின்றன என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கோக் போன்ற குளிர்பானங்களில் உள்ள சருக்கரையின் அளவு சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, சிறுநீரகம் அதிக பொட்டாசியத்தை  வெளியேற்றி, உடல் பொட்டாசியம் குறைவான சூழலுக்குத் தள்ளப்பட்டு என சங்கிலித் தொடர்ச்சியாய் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் குண்டாதல், பல் நோய்கள், எலும்புருக்கி நோய் போன்ற பரவலான நோய்களுடன் எலும்புகளையும் வலுவிழக்கச் செய்து விட்டு நமது வீட்டு பிரிட்ஜ்களில் சாதுவாய் அமர்ந்திருக்கிறது இந்த சர்வதேசச் சாத்தான் !

முட்டைப் பிரியர்களுக்கோர் நற்செய்தி….

Egg3

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .

கொசுக்களால் ஒரு மலேரியா விளம்பரம் !

Hitlar1

 

உலகெங்கும் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. உலகெங்கும் பல்லாயிரம் உயிர்களை ஆண்டுதோறும் அழித்துக் கொண்டிருக்கும் இந்த நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் பல்வேறு நாடுகளில் இல்லை.

எப்படியாவது வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்து இந்த நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என நினைத்த ஸ்பானிஷ் விளம்பர நிறுவனம் ஒரு புதுமையான உத்தியைக் கண்டு பிடித்தது !

மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் படங்களைக் கொண்டே ஓவியம் வரைவது எனும் சிந்தனை அடிப்படையிலான அந்த உத்தி பார்வையாளர்களை வியக்க வைக்கிறது !

“ஆப்பிரிக்கா டைரக்டோ” எனும் அமைப்பு மூலம் நடத்தும் மலேரியா நோய்க்கான இந்த விளம்பரப் படங்கள் வியப்புணர்வையும், விழிப்புணர்வையும் ஒரு சேர நிகழ்த்துகின்றன.

உதாரணமாக ஹிட்லரின் உருவப் படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது அதன் கீழே வாசகம் “மலேரியாவைப் போல அதிக உயிர்களைக் கொல்ல யாராலும், எதுவாலும் முடியாது !

மனிதனின் மூதாதையார் இதோ….

Fossil 

ஆதாம், பிரம்மா என மதங்கள் முதல் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஞ்ஞானம் அதையெல்லாம் நம்பத் தயாராய் இல்லை.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதையே விஞ்ஞானம் பொதுவாக ஏற்கிறது. எனில் குரங்குகள் எங்கிருந்து வந்தன ? அதன் மூதாதையார் யார் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையாய் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது இந்த உலர் எலும்புக் கூடு.

இந்த உயிரி வாழ்ந்த காலம் சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனும் செய்தி வியப்பூட்டுகிறது.

குரங்குகள், மனிதன் போன்ற அனைத்துக்குமே முன்னோடியாக இருக்கக் கூடும் இந்த உயிரி என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

உலகிலுள்ள உயிரிகள் இரண்டு மாபெரும் பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு குரங்கு, மனிதன் என மாறியது, இன்னொரு பிரிவு லெமூரியர்கள், இதர ராட்சத விலங்குகள் என மாறியது. இந்த உயிரி அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞான பாஷை பேசுகின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த எலும்புக் கூடு ஒரு பெண் உயிரியின் எலும்புக் கூடு எனவும், இதற்கு மனிதர்களுடைய இயல்புகள் பல இருந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த எலும்புக் கூடைக் கொண்டு மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை இந்த எலும்புக் கூடு விளக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

சமூகத்துக்குப் பயனளிக்கும் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நல்லது தான் !

“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.

 

EFG103

 

பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.

மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.

படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.

போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.

பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.

இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 12சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்

 

 

 

ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.

 

சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் …  என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.

கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !

 

இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )

 

 

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

ஒட்டக வரலாற்றில் முதன் முறையாக….

one

உயிரிகளைப் பிரதியெடுக்கும் குளோனிங் முறைக்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இன்றும் உலகின் பல பாகங்களிலும் அதன் முயற்சிகளும், தொடர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.

டோலி எனும் ஆட்டுக்குட்டி குளோனிங் முளையைத் துவக்கி வைத்தது. இப்போது உலகிலேயே முதன் முதலாக ஒட்டகம் ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒட்டகம் துபாயிலுள்ள ஒட்டக விருத்தி நிலையத்தில் உலகை வியப்புடன் பார்க்கிறது.

கோடிக்கணக்கான ஒட்டகங்கள் வாழ்ந்த இந்த பூமியில் இந்த ஒட்டகம் ஒரு புதிக சகாப்தத்தின் முதல் சுவடாய் வந்திருக்கும் உண்மையை அறியாமலேயே தாயுடன் விளையாடுவதை விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

ஒரு பெண் ஒட்டகத்தின் செல்லில் இருந்து பிறவி எடுத்துள்ள இந்த ஒட்டகத்துக்குப் பிறந்த நாள் ஏப்பிரல் 8.

திமுகவுக்கு 30 இடங்கள் ! சி.ஐ.டி ரிப்போர்ட்டால் அதிமுக அதிர்ச்சி !

 karunanidhi3

தமிழகம் முழுவதும் தேர்தல் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொழுத்த வேட்டை அடித்திருப்பது சி.ஐ.டி ரிப்போர்ட் தயாரிப்பவர்களுக்குத் தான் போலிருக்கிறது.

இந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு ? இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் ? நேற்று எனது நிலை என்ன ? இன்று அவனது நிலை என்ன ? என எல்லா இடங்களிலிருந்தும் வந்து குவியும் “பிசினஸ்” கால்களால் பிஸி யின் உச்சத்தில் இருக்கின்றனர் அவர்கள்.

தேர்தல் துவங்கிய நேரத்தில் திமுக வுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்திருந்த அவர்கள் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் அதிமுக கூட்டணியின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த அறிக்கைக்குப் பின் திமுக சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஓடியது. கலைஞரும் உற்சாகக் கட்டுரைகளை உடன் பிறப்புக்களுக்காய் அள்ளி வீசினார். சுதாரித்து ஓடிய திமுக கையிலெடுத்த ஆயுதம் அரசு ஊழியர்கள்!

அரசுப் பணியாளர் அமைப்புகள் அனைத்தையும் சந்தித்து, வெளிப்படையான ஆதரவு கேட்டும், அதிமுக காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பட்டியலிட்டும் விவாதங்கள் நிகழ்ந்தன.

அரசு அலுவலர்கள் அமைதியாய் இருந்தால் அவர்கள் அதிமுக ஆதரவாளர்கள் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டு விடும் இதன் மூலம் திமுக வலுவிழந்து போகும் என தகவல்கள் பரிமாறப்பட்டு அவர்களை லாவகமாக திமுகவின் பக்கம் இழுத்திருக்கின்றனர்.

அரசு அலுவலர்களும் தங்கள் தழும்புகளைத் தடவிக்கொண்டே திமுகவுக்கு ஆதரவளிக்க உறுதியளித்தார்களாம்.

கூடவே ஈழத் தமிழர் பிரச்சாரம், தமிழ் செல்வன் மறைவுக் கவிதை, அது இது என எல்லா பிரயோகங்களையும் திமுக நாலா புறங்களிலும் வீசி முடிந்தவரைக்கும் மீன்பிடிக்க முயல்கிறது.

வடமாநிலத் தலைவர்களின் தமிழகப் பிரச்சாரம் போன்றவையும் திமுகவை வலுப்படுத்தியிருக்கிறதாம்.

எதிரணி தரப்பில் பெரும்பாலும் நிகழும் தனிமனிதத் தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லையாம். அதிலும் கலைஞரின் உடல்நலக் குறைபாடை விமர்சித்த பேச்சுகள் மக்கள் மத்தியில் எதிர் அலையையே உருவாக்கியிருக்கிறதாம்.

இப்படி நடந்த களேபர மாற்றங்களினால் இடைப்பட்ட வாரத்தில் தடுமாறிய திமுக மீண்டும் எழுந்து முப்பது இடங்களைப் பிடிக்கக் கூடிய நிலையில் இன்றைக்கு இருக்கிறதாம்.

இப்படி அக்கு வேறு ஆணி வேறாக தமிழகம் முழுவதும் உள்ளம் தகவல்களுடன் வந்திருக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட் திமுகவினரை மேலும் உற்சாகமாய் களம் காண வாய்ப்பளித்திருக்கிறது. அதிமுகவினரோ திடீர் அதிர்ச்சியில் உள்ளனராம்.

அதிலும் குறிப்பாக பா.ம.க வுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்கள் மட்டுமே என அறிக்கை கூறியிருப்பதும், பாமக தொகுதி ஒன்றில் தேமுதிக வெல்ல வாய்ப்பு உண்டு என அறிக்கை சொல்லியிருப்பதும் மருத்துவரின் வயிற்றில் பாதரசம் கரைக்கிறதாம்.

என்ன சி.ஐ.டி ரிப்போர்ட்டோ ? மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !. இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியத் தான் போகிறது.

ஜெயிப்பது நாடகமா, சினிமாவா என்பது !

இது தாண்டா டூ வீலர் !

 

twoகொஞ்ச தூரத்துல இருக்கிற கடைத் தெருவுக்குப் போகவேண்டும். ஆனால் கார் எடுத்துக் கொண்டு செல்ல முடியாத ஒரு நிலை. சின்னதா ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்குமே என மனதுக்குள் சிந்தனை ஓடும்.

நகர் முழுதும் வாகன நிறுத்தம் ஒரு மிகப்பெரிய சவால். வண்டி சின்னதா இருந்தா நிறுத்தியிருக்கலாம் என புலம்பல் தெறிக்கும்.

எரிபொருள் பர்சை எரித்து விடுகிறது, கொஞ்சம் செலவு குறைவான வண்டி இருந்தால் நன்றாக இருக்குமே என பெருமூச்சு வழியும்.

இந்த அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்குரிய ஒரு புது வகையான இருசக்கரக் கார் ஒன்று வரப்போகிறது.

பக்கத்து தெருக்களில் சுற்றவும், அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று வரவும் , அதிக தூரமற்ற இடங்களுக்கு பயணிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படும் இந்த வாகனம் மின் சக்தியில் இயங்கப்போகிறது என்பதும், சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். உயர் ரக சமநிலைத் தொழில் நுட்பம் _mg_6017இருசக்கரத்தில் இந்த வாகனம் நிலைகொள்ளவும் வேகமாய் இயங்கவும் துணை செய்கிறது.

உயர் கணினி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ள இந்த வாகனம், விபத்துகள் ஏற்படும் சூழலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருக்குமாம்.

அளவில் சிறிய வியக்க வைக்கக்கூடிய வடிவத்தில் குறைந்த செலவில் ஓடும் இந்த வாகனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் ஒரு கார்வாங்கும் விலையில் இந்த வாகனம் மூன்று நான்கு வாங்கலாம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

oneசெக்வே மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த வாகனம் விற்பனைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம் !