திமுகவுக்கு 30 இடங்கள் ! சி.ஐ.டி ரிப்போர்ட்டால் அதிமுக அதிர்ச்சி !

 karunanidhi3

தமிழகம் முழுவதும் தேர்தல் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொழுத்த வேட்டை அடித்திருப்பது சி.ஐ.டி ரிப்போர்ட் தயாரிப்பவர்களுக்குத் தான் போலிருக்கிறது.

இந்தத் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு ? இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் ? நேற்று எனது நிலை என்ன ? இன்று அவனது நிலை என்ன ? என எல்லா இடங்களிலிருந்தும் வந்து குவியும் “பிசினஸ்” கால்களால் பிஸி யின் உச்சத்தில் இருக்கின்றனர் அவர்கள்.

தேர்தல் துவங்கிய நேரத்தில் திமுக வுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பித்திருந்த அவர்கள் கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் அதிமுக கூட்டணியின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த அறிக்கைக்குப் பின் திமுக சுதாரித்துக் கொண்டு மீண்டும் ஓடியது. கலைஞரும் உற்சாகக் கட்டுரைகளை உடன் பிறப்புக்களுக்காய் அள்ளி வீசினார். சுதாரித்து ஓடிய திமுக கையிலெடுத்த ஆயுதம் அரசு ஊழியர்கள்!

அரசுப் பணியாளர் அமைப்புகள் அனைத்தையும் சந்தித்து, வெளிப்படையான ஆதரவு கேட்டும், அதிமுக காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பட்டியலிட்டும் விவாதங்கள் நிகழ்ந்தன.

அரசு அலுவலர்கள் அமைதியாய் இருந்தால் அவர்கள் அதிமுக ஆதரவாளர்கள் போல ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டு விடும் இதன் மூலம் திமுக வலுவிழந்து போகும் என தகவல்கள் பரிமாறப்பட்டு அவர்களை லாவகமாக திமுகவின் பக்கம் இழுத்திருக்கின்றனர்.

அரசு அலுவலர்களும் தங்கள் தழும்புகளைத் தடவிக்கொண்டே திமுகவுக்கு ஆதரவளிக்க உறுதியளித்தார்களாம்.

கூடவே ஈழத் தமிழர் பிரச்சாரம், தமிழ் செல்வன் மறைவுக் கவிதை, அது இது என எல்லா பிரயோகங்களையும் திமுக நாலா புறங்களிலும் வீசி முடிந்தவரைக்கும் மீன்பிடிக்க முயல்கிறது.

வடமாநிலத் தலைவர்களின் தமிழகப் பிரச்சாரம் போன்றவையும் திமுகவை வலுப்படுத்தியிருக்கிறதாம்.

எதிரணி தரப்பில் பெரும்பாலும் நிகழும் தனிமனிதத் தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லையாம். அதிலும் கலைஞரின் உடல்நலக் குறைபாடை விமர்சித்த பேச்சுகள் மக்கள் மத்தியில் எதிர் அலையையே உருவாக்கியிருக்கிறதாம்.

இப்படி நடந்த களேபர மாற்றங்களினால் இடைப்பட்ட வாரத்தில் தடுமாறிய திமுக மீண்டும் எழுந்து முப்பது இடங்களைப் பிடிக்கக் கூடிய நிலையில் இன்றைக்கு இருக்கிறதாம்.

இப்படி அக்கு வேறு ஆணி வேறாக தமிழகம் முழுவதும் உள்ளம் தகவல்களுடன் வந்திருக்கும் சி.ஐ.டி ரிப்போர்ட் திமுகவினரை மேலும் உற்சாகமாய் களம் காண வாய்ப்பளித்திருக்கிறது. அதிமுகவினரோ திடீர் அதிர்ச்சியில் உள்ளனராம்.

அதிலும் குறிப்பாக பா.ம.க வுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்கள் மட்டுமே என அறிக்கை கூறியிருப்பதும், பாமக தொகுதி ஒன்றில் தேமுதிக வெல்ல வாய்ப்பு உண்டு என அறிக்கை சொல்லியிருப்பதும் மருத்துவரின் வயிற்றில் பாதரசம் கரைக்கிறதாம்.

என்ன சி.ஐ.டி ரிப்போர்ட்டோ ? மலியும்போ சந்தைக்கு வந்து தானே ஆவணும் !. இன்னும் ஓரிரு வாரங்களில் தெரியத் தான் போகிறது.

ஜெயிப்பது நாடகமா, சினிமாவா என்பது !