தலைவலியைத் துரத்த எளிய வழி !!!

Cycle 

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்என்பார்கள். காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும். அதிலும் மைகிரைன் தலைவலி எனும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுடைய வலி மிகக் கொடுமையானது.

ஒருபக்கமாக நூலிழையில் ஆரம்பித்து தலையெங்கும் விரிந்து பரவி சுழற்றிச் சுழற்றி அடிக்கும் மைக்ரைன் தலைவலியை எப்படி வராமல் தடுப்பது என குழம்பித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

அதாவது, வீட்டில் இருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான எண்ணத்தினால் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சியானது தலைவலி வரும் வாய்ப்பை 90 விழுக்காடு வரை குறைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

“அது எப்படிங்க ?” என வினவினால், நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது உங்கள் உடலில் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. எண்டோர்பின்கள் வலி நிவாரணியாக செயல்படும் என்பதால் தலைவலி வராமலும் அது தடுத்து விடுகிறது என மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மூளைக்கும் நல்லது என ஏற்கனவே மூட்டை மூட்டையாய் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுடைய மூளையே வலுவானதாக, நினைவாற்றல் அதிகம் கொண்டதாக இருக்கும் என அமெரிக்காவில் முன்பு ஒரு பெரிய ஆய்வு முடிவு வெளியாகியிருந்தது.

மைகிரைன் தலைவலியும் மூளையை மையப்படுத்தியதே என்பதனால் அந்த ஆராய்ச்சி முடிவும் இந்த நேரத்தில் ஒப்புமைக்கு உகந்ததாகிறது.

நிரந்தரத் தீர்வு என்பது கடினமான மைகிரைன் தலைவலிக்கு சைக்கிள் ஓட்டும் இனிமையான உடற்பயிற்சியே நிவாரணமளிக்குமெனில் அது மகிழ்ச்சியான செய்தி தானே !