மைக்கேல் ஜாக்ஸனின் இசை தான் ஓயாது என்று நினைத்தால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. என் தம்பி மைக்கேலை பணத்துக்காக கூட இருந்தவர்களே கொலை செய்து விட்டார்கள் என கண்ணீரும் கம்பலையுமாய் அவருடைய சகோதரி லே டோயா சில நாட்களுக்கு முன் கொளுத்திப் போட்ட திரி, சரவெடியாய் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கிறது.
போதாக்குறைக்கு மைக்கேல் ஜாக்ஸனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நீண்ட மௌனம் காப்பது பலருடைய மனதில் தீவிர சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏதோ பிரம்ம ரகசியம் போல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள மிக முக்கியமான தகவலை மைக்கேலின் நீண்டகால நண்பரான டெரி ஹார்வி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
மைக்கேலின் மரணத்துக்குக் காரணம் அவரது உடலில் அளவுக்கு அதிகமாய் செலுத்தப்பட்டிருந்த புரோபோஃபோல் என்னும் மருந்து தான் என்கிறது குடும்பத்தினர் செய்த இரண்டாவது “போஸ்ட்மார்ட்ட” ரிப்போர்ட். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இன்னும் சில தினங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என பகீர் தகவலை வெளியிடுகிறார் அவர்.
டிப்ரிவேன் தயாரிப்பாக வரும் இந்த மருந்து அறுவை சிகிச்சை நேரத்தில் நோயாளிகளை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆபரேஷன் தியேட்டருக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இந்த மருந்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் மைக்கேல் மரணமடைவதற்குச் சற்று நேரத்துக்கு முன் அவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டிருந்தது என்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் !
அப்படிப் பார்த்தால் மைக்கேலின் வீட்டில் வைத்து மைக்கேலுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தானே பொருள் ? ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது ? அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் ? கொண்டு வந்து கொடுத்தது யார் ? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல ! டி.இ.எ எனப்படும் டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஷ்ட்டிரேஷன் ( Drug Enforcement Administration) அமைப்பு.
அவர்களுக்கு இதில் என்ன அக்கறை என கேட்கிறீர்களா ? அமெரிக்காவில் எங்கெங்கே சட்ட விரோதமாக மருந்துகள் உலவுகிறதோ அங்கெல்லாம் குதித்து விசாரிப்பது தான் டி.இ.எ வின் தலையாய கடமை. அந்த விஷயத்தில் இவர்கள் எஃப்.பி.ஐ க்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். “அமெரிக்காவில் போலி மருந்துகள் தடைசெய்யப்பட்டன, திருப்பி அனுப்பப்பட்டன, அழிக்கப்பட்டன” என்றெல்லாம் அடிக்கடி வரும் செய்திகளுக்குப் பின்னால் கடுமையாய் உழைப்பவர்கள் இந்த டி.இ.எ அமைப்பினர் தான். 1973ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் துவங்கப்பட்டு இன்றைக்கு வெகுவாய் வளர்ந்திருக்கிறது இந்த அமைப்பு.
இவர்கள் மைக்கேல் மரணத்தின் பின்னணியை அலசக் களமிறங்கியிருப்பது மைக்கேலின் குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. மைக்கேலின் மரணம் ஒரு கொலை எனும் கண்ணோட்டத்தில் தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புபவர்களில் மைக்கேல் குடும்பத்தினரை விட இப்போது இவர்கள் தான் தீவிரமாய் இருக்கிறார்கள்.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், குற்றவாளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் போட்டியின்றிப் பெறுபவர்கள் இரண்டு டாக்டர்கள். ஒருவர் மைக்கேலின் பர்சனல் டாக்டர். கான்ராட் முர்ரே. இன்னொருவர் மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னும் ஒருவர் இந்த குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார் அவர் பெயர் விரைவில் தெரியவரும் என்கிறார் டெரி ஹார்வி.
விஷயம் கேள்விப்பட்டதும் டாக்டர் முர்ரே பதட்டமடைந்து “ஐயோ… நான் மைக்கேலின் உடலில் புரோபோஃபோல் மருந்தைச் செலுத்தவே இல்லை. எனக்கும் மைக்கேலின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்கள்” என புலம்பித் தள்ளியிருக்கிறார். “இன்னொரு முறை உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என காவல் துறை அணுகியபோது, இப்போதைக்கு முடியாது என தனது வக்கீல் மூலமாக மறுத்து போலீஸ் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் வார்த்திருக்கிறார்.
மைக்கேலின் கழுத்திலும், உடல் முழுவதும் சரமாரியாய் இருந்த ஊசி குத்திய தடங்கள் ஏதோ ஒரு மாபெரும் மர்மத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவே கருதுகின்றனர் மைக்கேலின் குடும்பத்தினர்.
டாக்டர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் காட்டுத் தீயாய்ப் பரவினாலும், லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். அப்படியெல்லாம் சட்டென ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போதைக்கு டாக்டர்களிடம் கேட்கப்பட்டிருப்பது விரிவான மருத்துவ அறிக்கைகள் மட்டுமே. யாரையும் இதுவரை சந்தேகப்பட்டு விசாரிக்கவில்லை. ஒன்றிரண்டு டாக்டர்கள் என்றல்ல, மைக்கேலுக்கு வைத்தியம் பார்த்த எல்லா டாக்டர்களிடமும் விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் அடுத்த கட்ட விசாரணைக்கான முடிவு எடுக்கப்படும்.
ஒருவேளை டாக்டர்கள் மீது விசாரணை வந்தாலும் கூட அது கொலைக் குற்றம் எனும் கண்ணோட்டத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. மருந்தை மருத்துவமனைக்கு வெளியே பயன்படுத்தியது, வேறு பெயர்களில் வாங்கியது, அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தியது போன்ற வழக்குகளின் கீழ் தான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்கின்றனர் அவர்கள்.
இந்த லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகளின் பேச்சை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வெஸ்னா மாராஸ் எனும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர். இது போன்ற பல வழக்குகளுக்காக வாதாடிய அனுபவமுடையவர் அவர். டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பதும், அதன் மூலம் சில சிக்கல்கள் எழுவதும் சகஜமே. அதை பெரிய கிரிமினல் வழக்குகளாய் பார்க்க முடியாது என்பதும் உண்மை தான்.
ஆனால் மைக்கேலின் வழக்கில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. மைக்கேலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது புரோபோஃபோல் எனும் மருந்து. அதைப் பயன்படுத்த “அனெஸ்டீஷியன்ஸ்” க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒருவேளை டாக்டர் முர்ரே அந்த மருந்தை மைக்கேலின் வீட்டில் பயன்படுத்தியிருந்தால், அவர் அனெஸ்டீஷியனாய் இல்லாத பட்சத்தில் இது ஒரு கொலை வழக்காக மாறும் சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.
எது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் ஹாலிவுட் அதிரடித் திரைப்படம் போல காட்சிகள் பட் பட்டென மாறி விடாது. விசாரணைகள் முடியவும், சில முடிவுகள் வெளியே தெரிய வரவும் சில பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார் அவர்.
மைக்கேலின் மரண விவகாரம் இப்படி இருக்க, மைக்கேல் ஜாக்சனைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அடங்கிய பயோகிராபி ஒன்று அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.
மைக்கேல் ஒரு ஹோமோ ! அவருக்கு தோழிகள் கிடையாது ஆனால் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அவர்களைக் “குஷி”ப்படுத்துவது மைக்கேலுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களைப் போல உடையணிந்து வெளியே செல்வார். இவருக்காகவே சாதாரண மேன்ஷன்களில் காத்திருக்கும் ஆண்களுடன் உல்லாசமாய் இருப்பார் என மைக்கேலின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த நூல்.
“Unmasked: The Final Years of Michael Jackson “ எனும் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் ஹால்பர் தான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என அடித்துச் சொல்கிறார். மைக்கேல் தொடர்பு வைத்திருந்த பல ஆண்களை எனக்குத் தெரியும். ஆண்களுடன் உறவு வைக்கும் போது “இதோ… பாப் உலக மன்னன் உங்கள் லாலிபாப்பை….” என்று தான் ஆரம்பிப்பார் என மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு விவரிக்கிறார் மனுஷன்.
மைக்கேலின் ஆண் நண்பர்கள் பலரை நான் தனியே சந்தித்தேன். அதில் முக்கியமான ஒருவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் லாரன்ஸ். இவர் மைக்கேலுடன் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டில் வைத்து உறவு கொண்டதாய் வரி வரியாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
இப்படியெல்லாம் மைக்கேலின் அந்தரங்கத்தை நூலாக்கி காசு பார்த்தவர், இப்போது மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான் எனக் கூறியிருக்கிறார். தனக்குக் காவல் துறையில் ஏராளம் நண்பர்கள் உண்டு என்றும், மைக்கேலின் மரணம் கொலை எனும் கோணத்தில் தான் அணுகப்படுகிறது என்றும், மூன்று டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு விரைவில் நடக்கும் எனவும் தன் பங்குக்குப் பேசி பரபரப்பைக் கூட்டுகிறார் அவர்.
இதே இயான் ஹால்பர் தான் “மைக்கேலின் வாழ்க்கை” மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிட்டத்தட்ட நிஜமாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய கருத்துக்களும் சிறப்புக் கவனத்தில் பார்க்கப்படுகின்றன.
இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று புதிய திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார். மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். மைக்கேலின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இவர் தான் ‘பயலாஜிகல்’ அப்பாவாம். அதாவது இவருடைய உயிர் அணுக்களிலிருந்து தான் மைக்கேலுக்குக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனவம். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மைக்கேலின் மனைவியிடம் கேட்கட்டும், அதிலும் நம்பிக்கையில்லையேல் டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என அதிரடியில் இறங்கியிருக்கிறார் டாக்டர்.
ஆளாளுக்கு குற்றச்சாட்டுகளையும், பரபரப்புகளையும் கிளப்பிக் கொண்டிருப்பதால், நிம்மதியான அடக்கம் கூட கிடைக்காமல் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது மைக்கேல் ஜாக்ஸன் என்னும் பாப் இசை மன்னனின் உடல்!
ஃ
நம்ம கேப்டன் விஜயகாந்த் சார் அவர்கள அனுபினால் வெறும் 3 மணி நேரத்துக்குள்ள தப்பு பண்ணினது யாரு என்று கண்டு பிடிச்சுடுவாரு. 😀
LikeLike
நல்ல நகைச்சுவை உணர்வு ரிசாத் 😉
LikeLike