வயசோ 17, கொலையோ 30 !!!

 

girl

தமாஷ் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஒரு டீன் ஏஜ் பெண் சிரித்துக் கொண்டே “நான் 30 பேரைக் கொன்றிருக்கிறேன்” என்றால் யார் தான் நம்புவார்கள் ? ஆனால் கொன்ற நபர்களின் பட்டியலையும், கொலை செய்த நுணுக்கங்களையும் அவள் விவரிக்க ஆரம்பித்தபோது தான் பிரேசில் காவல் துறையே ஒட்டுமொத்தமாக அதிர்ந்தது.

தெருவில் சும்மா அடி தடியில் இறங்கியதால் கைதானவள் தான் இந்தப் பெண். சின்னப் பொண்ணு விசாரித்து அனுப்பி விடலாம் என்று தான் போலீஸ்காரர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “என்னம்மா தெருவில எல்லாம் சண்டை போடறே ? நீ யாரு ?” எனும் பார்மாலிட்டி கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவள், நான் ஒரு சீரியல் கில்லர். முப்பது ஆண்களைத் துடிக்கத் துடிக்க குத்திக் கொன்றிருக்கிறேன் என விவகாரமாய்ப் பேச ஆரம்பித்திருக்கிறாள்.

எனக்கு துப்பாக்கியைப் பிடிக்க தைரியமே இல்லீங்க. ஆனா ஒரு கத்தி கிடைச்சா சதக் சதக்குன்னு குத்தி ஒருத்தனை கொல்றதெல்லாம் எனக்கு கை வந்த கலை. என தேர்ந்த கொலையாளியின் லாவகத்துடனும், ஆரவாரத்துடனும் பேசியிருக்கிறாள் பிரேசிலின் சா போல் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண். கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்குத் தான் முதுகெலும்பில் குளிர் நதி ஓடியிருக்கிறது.

பஸ்ட் பஸ்டா ஒருத்தனை காலி பண்ணும்போ எனக்கு பதினைஞ்சு வயசு. அதுக்கு அப்புறம் ரொம்ப சுறுசுறுப்பாயிட்டேன். எப்படியும் இரண்டு மூணு வருஷம் தான் கொலை செய்ய முடியும். அப்புறம் பதினெட்டு வயசாயிடும் இல்லையா ? மேஜரானப்புறம் கொலை செஞ்சா தண்டனை பெருசா இருக்கும். அதனாலதான் இரண்டு வருஷத்துல சடசடன்னு 30 கொலை செஞ்சுட்டேன். இப்போ எல்லா உண்மையையும் ஒத்துக்கறேன். எனக்கு வயசு இப்போ பதினேழு தானே ? என சட்டத்தை நோக்கி கண்ணடிக்கிறாள் இவள்.

குற்றவாளி மைனராய் இருந்தால் அவர்களுடைய பெயரை வெளியிட பிரேசில் சட்டம் அனுமதிக்காது. எனவே இந்தப் பெண்ணின் பெயரையும் வெளியிட பிரேசில் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இருந்தாலும் மிகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும், திட்டமிட்டும் கொலைகளைச் செய்திருப்பதால் இவளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என்றே பிரேசில் காவலர்கள் விரும்புகின்றனர்.

“பார்க்க ரொம்ப அப்பாவியா இருக்கிறாள். இவள் சொல்வது உண்மை என்பதை எங்களால் முதலில் நம்பவே முடியவில்லை. தீர விசாரிச்சப்புறம் தான் நம்ப முடிஞ்சுது. கொலையை எப்படிச் செய்தேன் என்பதை அவள் நடித்துக் காட்டியபோது பதறிவிட்டேன் ” என சிலிர்க்கிறார் ஒரு காவல் அதிகாரி.

முதல் கொலை செய்த கத்தி அவளுக்கு ராசியான கத்தியாகிவிட்டது போல ! அதே கத்தியைக் கொண்டு தான் அத்தனை கொலைகளையும் அரங்கேற்றியிருக்கிறாள். ஆனால் எதற்காகக் கொலை செய்தாள் என்ற காரணம் மட்டும் தெளிவாக இல்லை.

ஆண்களை மட்டுமே கட்டம் கட்டிக் கொலை செய்திருப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு ஆண்களிடம் வெறுப்பு இருக்கலாமோ எனும் சந்தேகமும் எழுகிறது. ஆனால் அவள் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பணத்துக்காகவும், பழி வாங்கவும், நீதியை நிலைநாட்டவும் (?!) கொலைகள் செய்தேன் என்பதே அவளுடைய வாக்குமூலம்.

ஒருமுறை பார் ஒன்றில் தண்ணி அடித்துக் கொண்டிருந்தபோது ஒருவனுடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கோபத்தில் கையிலிருந்த பிராண்டி கிளாஸை அவள் மீது வீசியிருக்கிறான். அவ்வளவு தான். அவனுக்கு ஸ்பாட் வைத்துவிட்டாள் இந்தப் பெண். இப்படி ஒவ்வோர் கொலைக்குப் பின்னும் ஒவ்வோர் காரணங்களைச் சொல்கிறாள். இவள் கொலை செய்ததை நம்பும் போலீஸ், அவள் சொல்லும் கதைகளையெல்லாம் இன்னும் நம்பவில்லை. ஏதேனும் ஒரு கொலைகாரக் கும்பலின் வாடகைக் கொலையாளியாக இவள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகமே போலீஸுக்கு !

பிரேசிலுக்கு என்ன சாபமோ தெரியவில்லை. தொடர் கொலையாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு பதினாறு வயதான டீன் ஏஜ் பையன் ஒருத்தன் பன்னிரண்டு பேரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டான். கடைக்காரர் ஒருவர் கன்னத்தின் அடித்ததற்காக அவனைச் சுட்டுக் கொன்றதாக உற்சாகத்துடன் பேசி அதிர்ச்சியளித்தான்.

கடந்த வாரம் ஐம்பது வயதான வாலஸ் சோஸா எனும் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மாட்டினார். “அவரே குண்டு வைப்பாராம், அப்புறம் அவரே கரெக்டா போய் எடுப்பாராம்” ன்னு முதல்வன் படத்தில் வரும் வசனம் இவருக்கு செம பொருத்தம். கிரைம் தொடர் ஒன்றை நடத்தும் அவர், தன்னுடைய நிகழ்ச்சி பரபரப்பாய் பேசப்படவேண்டும் என்பதற்காக அவரே கொலைகளை நிறைவேற்றியிருக்கிறார். திட்டமிட்டு கொலையை அரங்கேற்றிவிட்டு, தனது டீமை காமராவுடன் முதல் ஆளா அங்கே அனுப்பி பரபரப்புகளைப் பதிவு செய்து வந்தார் அவர். கடந்த வாரம் வகையாக மாட்டிக்கொண்டார்.

இப்போ மாட்டியிருப்பது இந்த டீன் ஏஜ் பெண் ! மைனர் வயசு என்பதால் சட்டம் கடுமையாய் இருக்காது என்பதே டீன் ஏஜ் கொலையாளிகள் அதிகரிக்கக் காரணம் என்கின்றனர் பிரேசில் மக்கள். சட்டம் கடுமையாக வேண்டும், சின்ன வயசு என்பதற்காக திட்டமிட்ட கொலைகளை விட்டு விடக் கூடாது எனவும் ஆவேசப்படுகின்றனர்.

இந்தப் பெண்ணோ படு கூலாக இருக்கிறார். என்னோட கொலைகளைப் பார்த்து குடும்பத்தினர் அப்செட் ஆக மாட்டாங்கன்னு நினைக்கிறேன் என்கிறாள் சிரித்துக் கொண்டே.

0

மிழிஷில் வாக்களிக்க…

ஜூ.வி : ஈரமில்லாத ஈரான் சட்டம்.

Iran prison 2“தலைவரே.. அவளுக்கு நாளை மரண தண்டனை “

“அதற்கென்ன …நிறைவேற்று”

“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”

“ஓ… அப்படியா… அப்போ வழக்கம் போல், இன்று இரவு அவளைக் கெடுத்து விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம் “

இது உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானின் சிறைகளின் சுவர்களும், அங்கே எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது. மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, போர்களில் ஈடுபடுவது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மஹ்மத் அஹ்மதின்ஜா. இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள்.

இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும், 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.

எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன். சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மா, எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோ, அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

பாசிஜ் குழு வில் எக்கச்சக்க சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டு”த் தொட்டு சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான். என்றவர் தொடர்கிறார்.

எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன். பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

கொஞ்ச நாட்கள் ஜெயிலில் பணியாற்றினேன். ஜெயிலில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

கன்னிப் பெண்களைக் கொல்ல சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவர்கள் கொல்லப்பட முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து கெடுக்கும்” பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை, இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம், கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள், தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு என கவலையுடன் முடிக்கிறார் அவர்.

அதிர வைக்கும் இத்தகைய பகிரங்க மனித உரிமை மீறல்களுக்கு எதிராய் ஏதேனும் தீர்வுகள் வருமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி !

0

 

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

பாத்ரூம்…… !!! : பெண்ணே நீ கட்டுரை

 public_toilet

“உலகிலேயே மிக நீளமான கழிப்பிடம் எது ?” எனும் கேள்விக்கு “இந்தியன் ரயில்வே” என்று ஒரு நகைச்சுவைப் பதில் உண்டு.

இது வெறுமனே சிரித்து விட்டுப் போக வேண்டிய நகைச்சுவையல்ல. இந்தச் நகைச்சுவைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற கனமான சோகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது கவனிக்கப்பட வேண்டியவர்களால் கவனிக்கப்படாமல் கண் மூடித் தனமாக நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை.

சிங்காரச் சென்னை மாநகரையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் இருக்கின்றன ? அவற்றில் எத்தனை சுத்தமாக இருக்கின்றன ? எத்தனை பாதுகாப்பாய் இருக்கின்றன ? தமிழகத்தின் தலை நகராம் சென்னையிலேயே இந்த நிலை எனில் புற நகரங்கள், சிறு நகரங்களின் கதைகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா ?

இந்த அவசரச் சிக்கலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. பயணங்களிலோ, குடும்பத் தேவைகளுக்காக நகரில் அலைய நேர்கையிலோ பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் அவர்கள் அவஸ்தைப்படுவது வாடிக்கை நிகழ்ச்சியாகி விட்டது.

ஆண்களைப் போல எந்த இடத்தையும் பொதுக் கழிப்பிடமாக்கிக் கொள்ள முடியாமல், நல்ல, பாதுகாப்பான, பொதுக் கழிப்பிடங்களுக்காக அவள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறாள். அப்படியும் நிலைமை கை மீறிப் போனால் வேறு வழியில்லாமல் ஏதேனும் அங்காடிகளிலோ, உணவகங்களிலோ சென்று உபாதையைக் கழிக்க வேண்டிய நிலை பெண்ணுக்கு.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் எனில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. பெண்ணுக்கே உரிய பல்வேறு சிக்கல்களினால் அவள் கழிப்பறைகளில் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரம் ஆண்களை விட மிக அதிகம்.

அதை உணர்ந்த அமெரிக்கா ஆண்களுக்கான ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்காய் இரண்டு கழிப்பிடங்கள் வேண்டும் என சட்டம் இயற்றியிருக்கிறது. உதாரணத்துக்கு நியூயார்க்கின் யாங்கீ ஸ்டேடியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், அங்கே ஆண்களுக்காய் இருக்கின்ற கழிப்பறைகள் 176.  பெண்கள் கழிப்பிடங்கள் 358 !

உலக அளவிலான IPC (International Plumbing Code) யும் பெண்களுக்கும் ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 எனும் விகிதத்தில் இருப்பது மிகவும் நல்லது, தேவையானது என அறிவுறுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. நமது நாட்டிலோ 1:1 எனும் விகிதத்தில் கூட கழிப்பிடங்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

புள்ளி விவரங்களை வெட்கத்துடன் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது நமது தேசம். இன்னும் 50 விழுக்காடு பள்ளிக் கூடங்களில் சிறுமிகளுக்கென தனியான கழிப்பிட வசதி இல்லை என்கிறது மாவட்ட உயர்கல்வி தகவலின் (DISE) 2007 – 2008 ம் ஆண்டின் புள்ளி விவரக் கணக்கு ஒன்று.  பள்ளிக் கூடங்களிலேயே இந்த நிலமையெனில் பொது இடங்களில் கேட்கவும் வேண்டுமா ?

கி.மு 2500 களிலேயே இந்தியாவில் மக்கள் அமர்ந்து பயன்படுத்தக் கூடிய, சுட்ட செங்கற்களால் ஆன, பாதாளச் சாக்கடைகளோடு இணைந்த கழிப்பிடங்கள் இருந்தன என்கிறது ஹரப்பா அகழ்வாராய்ச்சி. அதுவும் ஒவ்வோர் வீட்டுக்கும் ஒவ்வொரு கழிவறை இருந்திருக்கிறது. அப்படியெனில் உலகிலேயே கழிப்பிட வசதிகளில் முதன் முதலில் அசத்திக் காட்டிய நாடு இந்தியா தான். ஆனால் இப்போதைய நிலமை ?

உருவாகி சில  நூறு ஆண்டுகள் மட்டுமே ஆன அமெரிக்கா போன்ற நாடுகளெல்லாம் இன்று கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை விஷயங்களில் தன்னிகரில்லாமல் இருக்க, பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாமோ வெறும் வரலாறுகளைப் புரட்டுவதிலும், வீண் பெருமை பேசுவதிலும் மட்டுமே தன்னிறைவு அடைந்திருக்கிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது.

இன்றைக்கு உலக அளவில் 2.6 பில்லியன் மக்கள் சரியான கழிப்பிட வசதி இல்லாமல் இருக்கிறார்கள். இதில் 1.3 பில்லியன் மக்கள் இந்தியாவையும், சீனாவையும் சார்ந்தவர்கள். கி.மு 2500 ல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கழிப்பிடம் !. கி.பி 2009 ல் 80 சதவீதம் மக்களுக்கு சரியான கழிப்பிட வசதி இல்லை !!. இதுவே கழிப்பிட விஷயத்தில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி.

இந்தியாவில் வருகின்ற 80 விழுக்காடு நோய்களுக்கும் கழிவு கலந்த தண்ணீரே காரணமாகிறது என இந்தியாவின் கழிப்பிடப் பெருமையை அறிக்கை மூலம் பறைசாற்றுகிறது உலக நலவாழ்வு நிறுவனம் (WHO). உலகிலேயே பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் மூன்றாவது நாடு நமது இந்தியா என பெருமையடிப்பதில் என்ன அர்த்தமிருக்கப் போகிறது ?

சரியான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இல்லை. இருக்கும் கழிப்பிடங்களில் சுத்தம் என்பது சுத்தமாய் இல்லை. சுத்தமில்லாத கழிப்பிடங்களில் பாதுகாப்பாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை. இது தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான பொதுக்கழிப்பிடங்களின் இன்றைய நிலை.

பொதுக் கழிப்பிட சுகாதாரத்துக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு டாலர் பணத்துக்கும் ஏழு டாலர் சமமான பொருளாதார வளர்ச்சி சமூகத்தில் உருவாகும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். சுகாதாரமான கழிவறைகள் நலமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

உலக மயமாதலும், வணிக மயமாதலும், தனியார் மயமாதலும் எதுவும் இந்தியாவின் கழிப்பிடத்தின் தரத்தை இம்மியளவும் முன்னேற்றவில்லை என்பதே நிஜம். சரியான வரையறைகளோ, வழிமுறைகளோ, திட்டங்களோ இல்லாமல் இந்தியாவில் பொதுக் கழிப்பிட திட்டங்களெல்லாம் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உழலும் பெண்ணுக்கு மேலும் ஒரு சுமையாகவே மாறியிருக்கிறது.

0

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

ஜூ.வி : அமெரிக்க அதிர்ச்சி !

k1கல்லறைப் பயணத்துக்கும் காசில்லை

“சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அண்ணன் தற்கொலை பண்ணிகிட்டார். ஏதோ பணக் கஷ்டத்துல இருந்திருக்கார் போல. தலையில துப்பாக்கியை வெச்சு சுட்டிருக்கார். உயிர் போயிடுச்சு. அவரோட அறையில இருந்து உங்க அட்ரஸ் கிடச்சுது. இப்போ அவரோட உடல் இங்கே மார்ச்சுவரில தாஇருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” மெதுவாய் பேசுகிறது குரல்.

“ஐயோ..என் அண்ணனா ? இறந்துட்டாரா ?” மறுமுனையில் பெண்ணின் குரல் பதறுகிறது.

“ஆமாம்மா. உடம்பு இங்கே தான் இருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” குரல் மறுபடியும் அமைதியாய் ஒலிக்கிறது.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். பின் இறுகிய குரல் விசும்பலுடன் பேசத் துவங்குகிறது

“என் கிட்டே பணமே இல்லை. அவரோட இறுதிச் சடங்கை செய்ய எனக்கு வசதியும் இல்லை. அவரோட இறுதிச் சடங்கை நீங்களே செஞ்சுடுங்க. கொஞ்சம் அன்போட செய்யுங்க பிளீஸ்…” அழுகையுடன் மறுமுனை போன் வைக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு அவார்ட் திரைப்படத்தில் வரும் சோகக் காட்சியல்ல. ஆப்பிரிக்கா, சோமாலியா போன்ற நாடுகளின் குடிசைகளிலிருந்து ஒலிக்கும் குரலுமல்ல. இந்த குரல் ஒலிப்பது சாட்சாத் அமெரிக்காவிலிருந்து ! இது ஒரு அபூர்வ நிகழ்வும் அல்ல. இப்படிப் பட்டப் பேச்சைத் தினமும் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எவர்கிரீன் கல்லறைத் தோட்ட நிர்வாகி ஆல்பர்ட் காஸ்கின்

உலகின் வல்லரசு. பெரிய அண்ணன். நிலவுக்கே கூட சட்டென போய்வரக் கூடிய வசதி. நினைத்த நேரத்தில் வேண்டாத நாட்டின் தலையில் குண்டு போடக் கூடிய கர்வம். வரிசை வரிசையாய் கண்ணாடி மாளிகைகள். டாலர் கட்டுகள். கோட் சூட்டுகள். இப்படிப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன அமெரிக்கா இப்போது நொடிந்து கிடக்கிறது.

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சில ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லியிருந்தால் அது முதல் பரிசு பெறக் கூடிய நகைச்சுவையாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கோ அது கசப்பான உண்மையாகியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளுக்குத் தான் ஆரம்பித்தது முதல் சிக்கல். யாருமே பணம் திருப்பிக் கட்டாமல் வங்கிகள் திவாலாயின. காட்டுத் தீயாய் பரவிய இந்த அழிவு, பிற வங்கிகள், ஆட்டோ மொபைல், கிரெடிட் கார்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. இந்த டிராகனின் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப் பிழைத்தவை வெகு சொற்பமே. காய்ந்து போன இலைகளைப் போல வேலைகளிலிருந்து மக்கள் உதிர ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் வேலையில்லாமல் பரிதவிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 10 சதவீதம் பேர் !

ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் கொண்டாட்டம் என இருந்த அமெரிக்கர்களுக்கு வேலையில்லையேல் என்ன செய்வதென புரியவில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட கையில் பணமில்லாமல் புலம்ப வேண்டிய நிலமை. வேலை இருந்த வரைக்கும் கம்பெனி மருத்துவக் காப்பீடு கொடுத்து வந்தது. வேலையில்லையேல் கைக்காசை வைத்துக் கொண்டுதான் அதையும் வாங்க வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லையேல் எப்படி மருத்துவக் காப்பீட்டுக்கு மாதா மாதம் பிரீமியம் கட்டுவது ?

மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவ மனைக்குப் போனால் அவ்வளவு தான். தீட்டித் தள்ளி விடுவார்கள். இன்றைய தேதியில் சுமார் 57 சதவீதம் அமெரிக்கர்கள் தேவையான் மருத்துவக் காப்பீடு வாங்கப் பணமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது “காமன்வெல்த் ஃபண்ட்” நடத்திய ஆய்வு.

மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு விபத்தோ, பெரிய நோயோ வந்துவிட்டால் சாவு ஒன்று தான் முடிவு. அமெரிக்காவில் சமீப காலமாக நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கும் காரணம் இந்த திடீர் ஏழ்மையே. தற்கொலைகளுடனும் எல்லாம் முடிந்து போவதில்லை. அவற்றைத் தொடர்கின்றன அடக்கம் செய்யக் கூட முடியாத துயரக் கதைகள். விபத்திலோ, நோயிலோ பலியான சகோதரர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என பல உடல்களால் நிரம்பி வழிகின்றன மார்ச்சுவரிகள்.

“பணமில்லை, நீங்களே இறுதிச் சடங்கைச் செய்யுங்களேன் பிளீஸ்” என கண்ணீருடன் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம். இறுதிச் சடங்கு செய்யவேண்டுமென்றால் செலவு அப்படி இப்படி சுமார் 10,000 டாலர்கள் ஆகிவிடும். அதை அரசாங்கம் செய்துவிட்டால் சாம்பலை மட்டும் ஒரு மாதம் கழிந்து சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செலவு சுமார் 350 டாலர்கள் மட்டுமே.

“என்னிடம் அப்பாவை எரிக்கக் கூட பணம் இல்லை என மகன் சொல்கிறான். மகனை எரிக்கப் பணம் இல்லை என்று அம்மா சொல்கிறார். இப்படி ஒரு கொடூரமான துயரத்தை நான் சந்தித்ததேயில்லை என நிலைகுலைந்து போய் பேசுகிறார் டேவிட் ஸ்மித் எனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர இன்வெஸ்டிகேட்டர்.

“பன்னிரண்டு வருடங்களாக “இறுதிச் சடங்குகளை நடத்தும் குழு”வின் இயக்குனராக இருக்கிறேன். இதுவரை இப்படி அதிக எண்ணிக்கையில் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததே இல்லை. இறுதிச் சடங்குகளை நடத்த எல்லோருமே விரும்புகிறார்கள், ஆனால் பாவம் வசதியின்றித் தவிக்கிறார்கள்” என பதறுகிறார் பாப் ஆச்சர்மான்

இப்படி அடுக்கடுக்காய், திகில் நிரம்பிய, பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருப்பது கலிபோர்னியாவின் முன்னணி நாளிதழான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். கையில் பணமில்லை. வாழ வழியில்லை. அப்படியே செத்துப் போனால் கூட இறுதிச் சடங்கு செய்யவும் பணமில்லை. இப்படி அடுக்கடுக்கான துயரங்களுடன் தான் நகர்கிறது இன்றைய அமெரிக்கர்களின் வாழ்க்கை.

தமிழிஷில் வாக்களிக்க…