சானியா மிர்சாவைத் தெரியுமா என்று யாராவது கேட்டால் அவரை ஒரு வேற்றுக் கிரக வாசிபோல பார்ப்போம். சரி.. இருக்கட்டும் தப்பில்லை. மேரி கோம் யாரென கேட்டால் ? அது யாருங்க மேரி கோம் ? கேள்விப்பட்ட பெயராய் இல்லையே என இழுக்கிறீர்களா ?
நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி கைகளால் போன மாதம் பெற்றவர். நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தேசிய அளவில் 10 தங்கப் பதக்கங்களும், சர்வதேச அளவில் 14 தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் பெற்றவர். இத்தனை சாதனைகள் செய்தும் பரபரப்பாகாமல் இருக்கும் இருபத்து ஏழு வயதான குத்துச் சண்டை வீராங்கனை.
வெற்றிக்கான வேட்கை இருந்தால் எதுவுமே தடையாகாது என்பதன் சமகால உதாரணம் தான் மேரி கோம். 1983 மார்ச் ஒன்றாம் தியதி மணிப்பூரின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார் மேரி கோம். தந்தை தோன்பு கோம், தாயார் சனீகம் கோம் இருவருமே வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் தான். வறுமையில் உழன்ற மேரியின் ஆரம்ப கால இலட்சியம் பதக்கங்கள் வாங்கிக் குவிப்பதல்ல, விளையாட்டில் பரிசுப் பணம் வாங்கி பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக ஓட்டப் பந்தயம், அது இது என எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார்.
அவளுடைய வாழ்க்கையை பாக்ஸிங் நோக்கி திருப்பி பெருமை தேடிக் கொண்டவர் பாக்ஸிங் வீரர் டிங்கோ சிங். இவரும் மணிப்பூர் காரர் தான். 1998ல் இவர் ஆசிய தங்கக் கோப்பையைப் பெற்று திரும்பிய போதுதான் மேரிக்குள்ளும் பாக்ஸிங் ஆசை படர்ந்தது. நன்றாக யோசித்து 2000ல் பாக்ஸிங் விளையாட்டில் நுழைந்தார். பாவம், கைக்குப் போடும் கிளவுஸ் வாங்க கூட பணமில்லாத சூழல் அவருக்கு. அனைத்தையும் சமாளித்தார். இரண்டே வாரங்கள் தான். விளையாட்டின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்! அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு அவரிடம். ஆனால் இவர் பாக்ஸிங் கற்றுக் கொள்வது வீட்டில் யாருக்குமே தெரியாது.
ஒரு நாள் எதேச்சையாய் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மேரியின் தந்தையின் கண்களின் தட்டுப்பட்டது ஒரு பெண்ணின். பதக்கத்துடன் சிரிக்கும் படத்தை உற்று உற்றுப் பார்த்தார். அது தன் மகளே தான். மேரி கோம் மாநில அளவில் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அது. அப்பாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனந்தப் படுவதற்குப் பதிலாக கோபம் முகத்தில் குதித்தது. நீ குத்துச் சண்டை போடறியா ? அப்புறம் யாரு உன்னை கல்யாணம் செய்வான் ? அடிபட்டா என்ன செய்வே ? என தந்தைக்கு பல கவலைகள். ஆனால் தாய் ஆதரவுக் குரல் கொடுத்தார்.
மேரிகோம் கலப்பையில் கை வைத்து விட்டார். உழாமல் திரும்பிச் செல்ல நினைக்கக் கூட இல்லை. அங்கே ஆரம்பித்த அவருடைய விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, அர்ப்பணம் இவையெல்லாம் இன்று அவரை இந்த இடத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அர்ஜூனா, பாரத ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ் விருதுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் உயரிய கேல் ரத்னா விருதையும் வழங்கி இந்திய அரசு மேரியை ஊக்கமூட்டியிருக்கிறது.
மணிப்பூரில் அமைதி உருவாகட்டும். அந்த அமைதி இந்தியா முழுதும் பரவி இந்தியாவே அமைதியாய் இருக்கட்டும். என விருதை வாங்கிய கையோடு ஏங்கினார் மேரிகோம். அதற்கு ஒரு பின்னணி உண்டு. 2006ம் ஆண்டு தனது பெரும் பாசத்துக்குரிய மாமனாரை துப்பாக்கிக் குண்டுக்கு பலிகொடுத்த துர்பாக்கியம் அவருக்குள் வலிக்கிறது. எனக்கு உதவி செய்ய வந்த மாமனாரை யாரோ கொன்று விட்டார்கள். ஏன் கொன்றார்கள் எனும் கேள்விக்கு இன்னும் விடையில்லை. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்று ஒவ்வோர் கணமும் பிரார்த்திக்கிறேன். மேரி கோமின் வார்த்தைகளில் துயரம் கூடு கட்டிக் குடியிருக்கிறது.
இந்திய அரசின் விருது கிடைத்த உற்சாகத்தில் இருக்கிறார் மேரி கோம். கூடவே அடுத்த மாதம் வியட்னாமில் நடைபெறப்போகும் போட்டிக்கான பரபரப்பும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இதை எல்லாவற்றையும் விட மிக ஆனந்தமான விஷயம் அவர் ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறார் என்பது தான். 2012ல் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பாக்ஸிங்கில் கலந்து கொள்ள மேரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இது என் வாழ்நாள் கனவு. இதில் வெற்றி பெற்று தேசத்தின் மார்பில் தங்கப் பதக்கம் குத்துவேன் என பரவசமாகிறார் மேரி.
ஐ.ஓ.எஸ் (Infinity Optimal Solutions Pvt. Ltd) ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் மேரியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இட்டுள்ளது. கூடவே ஒலிம்பிக் கோல்ட் குவஸ்ட் அமைப்பும் மேரியை ஸ்பான்சர் செய்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஒலிம்பிக் எனும் கனவை நிஜமாவதை இப்போதே என் கண்களில் காண்கிறேன் என பூரிக்கிறார் மேரி.
மேரி பாக்ஸிங்கில் நுழைந்த பின் திரும்பிச் செல்தல் என்ற கேள்வியே எழவில்லை. அடுத்தகட்டத்தை நோக்கிய தேடல் மட்டுமே எப்போதும் அவரிடம். தினமும் சுமார் ஆறுமணி நேரம் கடுமையான பயிற்சி செய்கிறார். இப்படி முழு மூச்சாக பாக்ஸிங்கில் இருப்பவருக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள்!
கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் பதக்கம் வெல்வார் என அவரைத் தவிர யாருமே நம்பவில்லை. காரணம் சமீபத்தில் தான் இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தார். பயிற்சி எடுத்து வருடக்கணக்காகியிருந்தது. ஆனால் மேரி மட்டும் தன்னை நம்பினார். இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். விளைவு கைகளில் தங்கப் பதக்கம் ! இப்படி மேரி வாழ்வின் ஒவ்வோர் பக்கமும் நம்பிக்கைப் பாடங்களால் நிரம்பியிருக்கிறது.
அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு இப்போது வயது இரண்டு. தனது கேல் ரத்னா விருதை இரட்டைச் செல்வங்களுக்குத் தான் சமர்ப்பித்திருக்கிறார், ஒரு பாசமான அம்மாவாக !. எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது இவரது கணவர். குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் உற்சாகப் படுத்தும் இரட்டை வேலை அவருக்கு. “அத்தனை சுமைகளையும் சிரித்துக் கொண்டே சுமக்கும் அவர் என்னோட சிறகில்லாத தேவ தூதன் என்று” தழுதழுக்கிறாள் மேரி.
ஏழ்மை இலட்சியங்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதை நேரில் பார்த்தவர் மேரி. போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்த பின்பு தான் தனது பெற்றோருக்கு வசிக்க ஒரு இடத்தை வாங்க இவரால் முடிந்திருக்கிறது. வறுமையில் வாடிக்கொண்டிருந்த தனது உடன்பிறப்புகளுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் பெற்ற பணத்தையெல்லாம் இன்வெஸ்ட் செய்யும் மனநிலை இந்த வெள்ளை மனசுக்காரிக்கு இல்லை.
தனது பரிசுப் பணத்தில் பாதியையாவது ஏழை விளையாட்டு வீரர்களுக்கு செலவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். “எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி “ என அவர் ஆரம்பித்த பயிற்சி நிலையம் அவருடைய உன்னத மனதின் உதாரணம். அங்கே ஏழை விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி நடக்கிறது. வெளியூரிலிருந்து வரும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சியுடன் சேர்த்து தங்குமிடம், உணவு எல்லாமே இலவசம் ! எல்லாம் தனது சொந்தப் பணத்திலிருந்து தான் செலவழிக்கிறார். சுமார் 20 பேர் இங்கே பயிற்சி பெற்று வருகிறார்கள். “ இந்தியாவில் கிரிக்கெட்டும், டென்னிசும் தவிர வேறு விளையாட்டுகளே இல்லையா” எனும் இவருடைய கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
மேரி விருது வாங்கியதில் இங்குள்ள மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். மேரியை அவர்கள் ஒரு அன்னையாகப் பார்க்கிறார்கள். “எங்கள் கோச் உயரிய விருதை வாங்கியதில் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவர் எங்களுக்கு கோச் அல்ல, வழிகாட்டும் தெய்வம்…” என கண் கலங்குகிறார் இங்கே பயிலும் நாகிசா எனும் மாணவி.
உறுதியான இலட்சியத்துடனும், உயர்ந்த உள்ளத்துடனும் வாழும் மேரியின் ஒலிம்பிக் கனவும் நனவாகட்டும்.
ஃ
உயர்ந்த லட்சியங்கள் நிறைவேறிக் கொண்டே வருகிறது. மேலும் கனவுகள் நிறைவேறட்டும். மேரி கோமைப் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கட்டும். வாவ்த்திக் கொண்டே இருப்போம்.
LikeLike
வாழ்த்திக் கொண்டே இருப்போம்
LikeLike
அன்புச்சகோதரி மேன்மேலும் பதக்கங்கள் பல பெற்று நம் நாட்டுக்கு பெருமை தேடித்தரட்டும்… இது போல் மாணிக்கங்களை பற்றி தகவல் அளித்த நண்பருக்கு நன்றி!
LikeLike
really amazing….thank you
LikeLike
//அர்ஜூனா, பாரத ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ் விருதுகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் உயரிய கேல் ரத்னா விருதையும் வழங்கி//
பாரத ரத்னா? சரியான விவரம்தானா?
LikeLike
நன்றி தமிழ் சரவணன்.
LikeLike
வருகைக்கு நன்றி நித்தில்..
LikeLike
நன்றி குட்டிசாமி
LikeLike