நீங்கள் எந்த வகை தம்பதியர்… ?

“டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர். ஆண்டு தோறும் டைவர்ஸ் கணக்கு எகிறிக் கொண்டிருப்பதாய் சொல்கின்றன புள்ளி விவரங்கள். “ஒத்து வரலேன்னா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா” என்பது தான் லேட்டஸ்ட் அறிவுரை. என்னவாயிற்று இந்தியாவின் குடும்ப வாழ்க்கைக் கலாச்சாரத்துக்கு ?

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும் மனைவியும் வேலைக்கு ஓடும் யுகம் இது. நின்று பிரேக் பாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லை. இரவு உணவு பதினொரு மணிக்கோ பன்னிரண்டு மணிக்கோ ! ஒரு வகையில் இந்த பரபரப்பு தான் குடும்ப உறவுகளுக்கு எமனாய் வந்து முடிந்திருக்கிறது. முக்கால் வாசி நேரம் வீட்டுக்கு வெளியே வேலை. அப்பாடா என எப்போதாச்சும் நேரம் கிடைத்தால் டிவியில் உப்பு சப்பில்லாத ஏதோ ஒரு ஷோ. ஒரே வீட்டில் இருந்தாலும் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு என கணக்குப் போட்டுப் பாருங்கள். அங்கே தான் இருக்கிறது குடும்ப வாழ்வின் சிக்கல்.

கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் குடும்ப ஆலோசகர்.

முதல் வகை தம்பதியினர் “அமைதி தம்பதியர்”. அமைதி என்றதும் உம்மணாமூச்சியாய் இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். நிறைய பேசுவார்கள். “கந்தசாமில விக்ரம் பிச்சு உதறிட்டாரு இல்ல ? நாலு நாளா வெயில் மண்டையைப் பொளக்குதுப்பா., அமெரிக்காவில இந்த நேரம் ஸ்னோ. என்னவோ தெரியல ஈரான் வேற அணுகுண்டு தயாரிக்கப் போவுதாம்.”

இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிக் கொள்வார்கள். ஆனால் தங்களைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். “என்ன சோகமா இருக்கே ஏதாவது பிரச்சினையா” என அக்கறையாய் விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும் “ஒண்ணுமில்லையே” ன்னு சொல்லி விட்டால் ஓகே என விட்டு விடுவார்கள். ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர இவர்கள் இரண்டு வாழ்க்கை வாழ்பவர்கள். இரயில் தண்டவாளங்கள் போல. வாழ்க்கை சந்தோசமாகத் தான் போகும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் என்ன ? ஆத்மார்த்த புரிதலோ அன்போ இருக்காது. வீட்டுக்கு போனா ஒரு துணை உண்டு என சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

சண்டையைத் தவிர்க்கும்” தம்பதியர் இரண்டாவது வகை. “சரி விடும்மா .. நீ சொல்றது தான் சரி” என்பது இந்த வகை தம்பதியினரின் உரையாடல். நம்ம ஊர் கிராமத்து பெண்களை இந்த கூட்டத்தில் கன கட்சிதமாய் பொருத்தலாம். “தேவையில்லாம எதுக்கு சண்டை” என அடுத்தவர் சொல்வதை ஒத்துக் கொள்வது. இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் சைலண்டாகி விடுவது. இது தான் இவர்களுடைய வழக்கம். அன்னியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள் திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலண்டாகிவிடுவார்.

எப்போதும் சண்டை” மூன்றாவது வகை தம்பதியர். “ சாப்பாட்டுல ஏதோ குறையுதே ..” என்று எதார்த்தமாய்ச் சொன்னாலே “ ஆமா உங்க அம்மா சமைச்சா மட்டும் தான் உங்களுக்குப் புடிக்கும்” என்பது இந்த ரகம். அடுத்தவர் செய்வதிலுள்ள குற்றத்தை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது இங்கே சகஜம். இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். பெரும்பாலும் உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். இந்த தம்பதியரிர் நிம்மதியின்றி பெரும்பாலும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நட்புத் தம்பதியர்” நான்காவது வகையினர். நல்ல நட்புடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷுவல் கப்பிள் என்று சொல்லலாம். தாம்பத்ய நெருக்கம் இருக்காது. வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது. இவர்கள் பேச்சில் குறை வைக்க மாட்டார்கள். ஒபாமாவின் ஹெல்த் பிளான் முதல் ஒசாமாவின் அட்டாக் பிளான் வரை பேசுவார்கள். அலுவலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு அழுத்தமான குடும்ப உறவு அவர்களுக்கிடையே இருக்காது.

நெருக்கமான தம்பதியர்” ஐந்தாவது வகை. “இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்” என்பது வரை வெளிப்படையாய் பேசுவார்கள். எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். ஆனாலும் ஆழமான குடும்ப உறவும் புரிதலும் இருக்கும். இப்படி வாழ்வது வெகு கடினம். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும் தான் இதில் ஹைலைட். ரொம்ப ரொம்ப கொஞ்சம் தம்பதியர் தான் இந்த நிலையில் வருவார்கள். உண்மையில் பல தம்பதியர் இதை விரும்புவதே இல்லை.

கணவன் மனைவியரிடையே மனம் விட்டு பேசிக்கிற பழக்கம் இருந்தா போதும், மத்ததெல்லாம் தானா அமைந்து விடும். உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம் மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்பது. தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நினைச்சீங்கன்னா, நோ யூஸ்.

அதேமாதிரி கொஞ்சம் பொறுமை வேணும். பேசறவங்களைப் பேச விடணும். முழுதாகப் பேசி முடிக்கும் முன் “முடிவு சொல்கிறேன் பேர்வழி” என குதிக்கக் கூடாது. கிளைமேக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா. உரையாடலை முழுமையாய் கேளுங்கள், பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இன்னொரு தடவை கேக்கிறதிலும் தப்பில்லை. ஈகோவை தூக்கி தூர எறியுங்கள். கோ…கோ.. ஈகோ ன்னு சொல்லுங்க. தோல்விகள் கூட காதலில் வெற்றிகளே என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்.

அடிக்கடி பேசுங்கள். சும்மா ஹாய், பை பேச்சுகளெல்லாம் குடும்ப வாழ்க்கைல உதவாது. தினமும் பேசுங்கள். மனம் விட்டு பேசும் தம்பதிகள் டைவர்ஸ் கேட்டு ஓட மாட்டாங்க.

ஒரு முக்கியமான விஷயம். பேசறதுக்கு முன்னாடி நிலைமையை கொஞ்சம் பாத்துக்கோங்க. பார்ட்டி டென்ஷனாய் இருந்தால் கொஞ்சம் அமைதியா போறது உசிதம். எதேச்சையா சொல்ற சமாச்சாரம் கூட குத்தலா தோணும். மௌனம் கூட உணர்வுகளின் உரையாடல் தான்.

“கல்யாணம் ஆன புதுசில அடிக்கடி வெளியே போவோம்.. இப்பல்லாம் எங்க … “ ங்கற நிலமை வரக் கூடாதுங்க ! அப்பப்போ வெளியே போயிட்டு வாங்க. பழைய சமாச்சாரங்களை சுவாரஸ்யமா பேசுங்க. காதல் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும்.

இன்னொரு விஷயம். உங்களுக்குள்ளே பேசிட்டிருக்கும்போ தேவையில்லாம மூன்றாவது நபரை குத்தம் சொல்லாதீங்க. அது சுத்திச் சுத்தி பிரச்சினையில கொண்டு விடும். வேலில போறதை எதுக்கு… வேணாம் விட்டுடுங்க.

கணவன் மனைவிக்கு கொஞ்சம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம் தப்பில்லை. குறிப்பா சில நம்பிக்கைகள் உங்க துணைக்கு இருக்கலாம். சாமி போட்டோல முழிக்கிறது மாதிரி. அதை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணாதீங்க.

உரையாடல் எப்பவும் ஸ்மூத்தா இருக்காது. ஏதாச்சும் பிராப்ளம் இருந்தா திறந்த மனதோட யோசிங்க. “நீ சொல்றது தான் தப்புன்னு” சட்டுன்னு குற்றம் சுமத்தாதீங்க. குற்றங்கறது அனுமர் வால் போல நீண்டுகிட்டே இருக்கும் !

பேசும்போ மனசார உண்மையைப் பேசுங்க. நீங்க பேசறது பொய்யின்னு தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம் எப்பவுமே உரையாடல் ஹெல்தியா இருக்காது.

திடீர் திடீர்ன்னு கொஞ்சம் சர்ப்ரைஸ் குடுங்க. சின்னச் சின்ன பரிசுகள், சின்னச் சின்ன வாழ்த்துகள், சின்னச் சின்ன பாராட்டுகள் இவையெல்லாம் ரொம்ப முக்கியம். அதேமாதிரி என்ன முடிவு எடுத்தாலும் இரண்டு பேருமாப் பேசி முடிவெடுங்க.

உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க. நிறைய பேரு பேசறதைக் கேட்பாங்க. ஆனா கவனிக்க மாட்டாங்க. அதென்ன வித்தியாசம் ?

வீட்டுக்குள்ள கிரைண்டர் ஓடுது. அந்த சத்தத்தை நாம கேட்கிறோம் ஆனா, கவனிக்கிறதில்லை. ஆனா நம்ம பார்ட்னர் பேசறதை நாம கவனிக்கணும். என்ன சொல்கிறார் ? என்ன மனநிலையில் சொல்கிறார் ? என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் ? என்பதெல்லாம் கவனிச்சா தான் புரியும். உங்க வாழ்க்கைத் துணையை எந்த அளவுக்கு நேசிக்கிறீங்க என்பதை இந்த கவனிப்பு காட்டிக் கொடுக்கும் ! அதிகம் கவனித்தால், அதிகம் நெருக்கமாயிடுவீங்க. குடும்ப வாழ்க்கை வலுவடையும். அடுத்தவரைப் பாராட்டும் மனநிலை உருவாகும்.

இதையெல்லாம் மனசுல வெச்சிருந்தா இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் உங்க குடும்ப வாழ்க்கையை யாரும் அசைக்க முடியாது.

நன்றி : அவள் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்

 lubnaஇப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

journalists_activists_and_politicians_detained_inஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் lubna12லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

neelima-35பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

 ( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்)

 

 

 

  

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்…… நன்றி !