இன்றைய நூதன மோசடிகள்…

எப்படிக் கவிழ்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடுபவர்களுக்குப் பஞ்சமேயில்லை. அதே அளவுக்கு, எப்படா வாய்ப்புக் கிடைக்கும் ஏமாறலாம் என அப்பாவியாய் இருப்பவர்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் உஷாராய் இருந்தால் எந்த பெரிய ஏமாற்றையும் எளிதில் கண்டு கொண்டு தப்பி விடலாம்.

பெரும்பாலான மக்களை அன்றும் இன்றும் வாட்டிக் கொண்டிருப்பது பைனான்ஸ் சமாச்சாரங்கள் தான். இதில் பல முகங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் கட்டுங்கள், ஆறு வருஷம் கழிச்சு யானை வரும் என்பது ஒரு வகை. உங்கள் பணத்துக்கு வட்டி நாப்பது சதவீதம் என சிலிர்ப்பூட்டுவது இன்னொரு வகை. கட்டுங்கள் உங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம் கிடைக்கும் என்பது சர்வதேச வகை. அப்பாடா, இப்போதான் சரியா ஒரு சேமிப்பு ஐடியா வந்திருக்கு என நீங்கள் நினைத்தால் சேமித்ததெல்லாம் போச்சு !

பைனான்ஸ் விஷயங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து மிரட்டுவது ரியல் எஸ்டேட் பிரச்சினைகள். அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கேட்கவே வேண்டாம். எப்படி ஏமாற்றுவது என்பதை ரூம் போட்டு யோசிப்பார்களோ என கேட்கத் தோன்றும். சேல் டீட் இருக்கிறது, பட்டா இருக்கிறது, அப்ரூவ்ட் லேண்ட் பழத்தில் ஊசி ஏற்றுவார்கள். கடைசியில் பார்த்தால் ஒரு இடத்தை நான்கு பேருக்கு விற்றிருப்பார்கள். அல்லது எல்லாமே போலியாய் தயாரித்த பத்திரமாய் இருக்கும்.

வழக்கமா இங்கே நாப்பது இலட்சம் போகும். ஒரு இடம் இருக்கு. இருபதுக்கு முடிச்சு தரேன். யார்கிட்டேயும் சொல்லாதீங்க. அப்புறம் போட்டிக்கு வந்துடுவாங்க என்றெல்லாம் ஒருவர் இழுக்கிறார் என்றாலே விவகாரம் தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இதை விட நல்ல இடம், இதை விட நல்ல விலைக்குக் கிடைக்காது என்று உங்களை நம்ப வைப்பதில் தான் இந்த புரோக்கர்களின் புத்திசாலித்தனமே இருக்கிறது. அவர்களுடைய வலையில் விழுந்து விட்டால், சிலந்தி வலையில் விழுந்த ஈயாகி விடுவீர்கள்.

திடீரென ஒருவர் தனியே அழைத்துப் போய் காது கடிப்பார். சுகம் அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு இருக்கு. வீட்டோட நம்பர் 8. உங்களைப் பார்த்தா நம்பர்ல நம்பிக்கை இல்லாதவர் போல தெரியுது அதான் சொன்னேன். நியூமராலஜி பிராப்ளம் இருக்கிறதனால ரேட் படியமாட்டேங்குது. ஒரு நாலஞ்சு இலட்சம் கம்மியாவே முடிச்சிடலாம் என்பார். அட, செம லாபமாச்சே என அட்வான்ஸ் கிட்வான்ஸ் கொடுத்து விடாதீர்கள். வியக்கும் வாய்க்கு அல்வா தான் மிஞ்சும்.

நகர்ப்புறங்களில் திடீர் திடீரென முளைக்கும் சிட்டி கட்டி தங்கம் வாங்குவது, பாத்திரம் வாங்குவது, பட்டுப்புடவை வாங்குவது என பலவும் மோசடிகள் தான். ஒன்றுகில் உங்கள் பணத்தை அபேஸ் செய்வார்கள். அல்லது உதவாக்கரை பொருளை உங்கள் தலையில் கட்டி வைத்து விட்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இந்த சாதாரண ஏமாற்றுகளுக்கு அடுத்தபடியாக வந்திருப்பது ஹைடெக் மோசடிகள். இந்த ஹைடெக் மோசடிகளின் கதைகளைக் கேட்டால் புல்லரிக்கும். இப்படியெல்லாம் கூட ஏமாற்ற முடியுமா என நீங்கள் வியந்து போகும் படி இருக்கும் பல ஏமாற்று வித்தைகள்.

திடீரென உங்கள் மின்னஞ்சல் கதவை ஒரு மெயில் தட்டும். வாவ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். உங்களுக்கு ஐந்து இலட்சம் டாலர் பணம் கிடைத்திருக்கிறது. அதை அனுப்ப ஜஸ்ட் ஐம்பதாயிரம் ரூபாய் நீங்கள் அனுப்பவேண்டும். உங்கள் வங்கி எண், விலாசம் எல்லாம் குடுங்கள். என குஷிப்படுத்தும். “ஆஹா, வந்தாள் மஹாலட்சுமி ..” என குதித்தால் நீங்கள் அம்பேல். சைலண்டாக அந்த மின்னஞ்சலை டெலீட் செய்தால் நீங்கள் அறிவாளி.

கண்காட்சி, பொருட்காட்சி எங்கேயாவது போவீர்கள். தினசரி குலுக்கலில் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு உங்கள் அட்ரஸ் எழுதிப் போடுவீர்கள். பார்த்தால் மறு நாள் மாலையிலேயே போன் வரும். எடுத்தால் மறு முனை பாராட்டும். “வாழ்த்துக்கள்… நீங்க எங்க குலுக்கலிலே பரிசு வாங்கியிருக்கீங்க. அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. சரி சரி, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபா டிடி எடுத்து இந்த அட்ரஸுக்கு அனுப்புங்க. உங்களுக்கு பரிசும், சிங்கப்பூர் போக நாலு டிக்கெட்டும் கிடைக்கும்..” என சரமாரி கதை வரும். தெய்வத்துக்கு நாலு தோப்புக் கரணம் போட்டு விட்டு பணத்தோடு டிடி எடுக்க பேங்கிற்கு ஓடினால் நீங்கள் காலி ! கட்பண்ணிக் கடாசி விட்டு வேலையைப் பார்த்தீர்களென்றால் அறிவாளி.

திடீரென உங்களுக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு லிங்க். லிங்கைக் கிளிக் செய்தால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பக்கம் வரும். உங்கள் விலாசம், தொலைபேசி எண், இத்யாதி எல்லாவற்றையும் எழுதுங்கள். இது எங்கள் வருடாந்திர ஆடிட். என மெசேஜ் இருக்கும். உண்மையில் அது போலி சைட். மெயில் அட்ரசில் சில எக்ஸ்டா எழுத்துக்களுடன் உல்டா பண்ணியிருப்பார்கள். நீங்கள் அவசரப்பட்டு உடனே பாஸ்புக், கிரெடிட் கார்ட், பின் நம்பர் என சர்வத்தையும் எண்டர் பண்ணினால் கிளீன் போல்ட். வங்கிக்குப் போன் செய்து விஷயத்தை உறுதிப்படுத்தினால் நீங்கள் சமர்த்து.

வீட்டிலிருந்தபடியே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிக்க வேண்டியது இந்தப் பொருள் தான். தயாரிக்கும் பொருளை நாங்களே மாதா மாதம் வந்து வாங்கி கொள்வோம். பேனாவை எப்படிச் செய்வது என்பதை அறிய சிடி, புத்தகம், எல்லாம் அனுப்புவோம். தேவைப்படுவோருக்கு வீட்டில் வந்தே செய்முறை விளக்கமும் சொல்லித் தருவோம். முப்பதாம் தியதிக்குள் ரிஜிஸ்டர் செய்யுங்கள். பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள். என கடிதம் வரும். அப்பாடா நமக்கொரு விடிவு காலம் என நினைத்தால் அது முடிவு காலமாகிவிடும். கொஞ்சம் யோசித்தால் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம்.

உங்கள் முகவெட்டு நன்றாக இருக்கிறதா ? உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள். போட்டோ டெஸ்டில் பாஸாகி விட்டால் புதிதாக எடுக்கப்போகிற படத்தில் நீங்கள் தான் ஹீரோ/ஹீரோயின். புகைப்படங்களையும், எண்ட்ரீ பீஸாக வெறும் ஐநூறையும் அனுப்புங்கள். முகவரி இது தான் என ஒரு கோடம்பாக்கம் சந்து வந்து நிற்கும். அனுப்பினால் அவ்ளோ தான். எப்படியெல்லாமோ உங்கள் வாழ்க்கை திசைமாறி சீரழிய வாய்ப்பு உண்டு.

நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென உங்களுக்கு ஒரு போன் வரும். நான் உங்கள் கவிதைகளைப் படித்து பிரமித்துவிட்டேன். நான் இயக்குனர் லொடுக்கு பாண்டி. நான் ஒரு புது படம் தயாரிக்கிறேன். படத்தின் பெயர் “நிலாவில் மழை”. ஒரு பாட்டு எழுத வேண்டியிருக்கு. சுஜாதாம்மா தான் பாடறாங்க. மேடைல பாடற மாதிரி கான்சப்ட் அது. தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு. உங்களுக்கு சினிமா பாட்டு எழுத வருமா ? என தூண்டில் நீளும். ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுங்க, படம் வெளியானதும் பணத்தை நிச்சயம் தந்திடுவேன் என்பார்கள். ஆஹா.. உலகப் புகழ் என நினைத்தால் அம்பேல்.

திடீரென ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் டேக்ஸ் ரீபண்ட் பணம் நாற்பத்திரண்டாயிரத்து எழுநூறு ரூபாய். நீங்க 2450 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்புங்க. எந்த பெயருக்கு செக் அனுப்ப வேண்டும் என்பதை ஒரு முறை கன்பர்ம் செய்யுங்கள். என்றெல்லாம் கதை விடும். என்னடா இது கூப்பிட்டு கூப்பிட்டு கவர்மெண்ட் காசு குடுக்குது என நினைத்தால் நீங்கள் காலி.

வெளிநாட்டுல வேலை வேணுமா என கத்தரிக்காய் மாதிரி கூவிக் கூவி விற்கும் ரகம் ரொம்ப ஆபத்து. துபாய், பஹ்ரைன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் சமீப கால கூக்குரல் மலேஷியா. ஏதோ ஒரு பெரிய ஆயில் கம்பெனி பெயரில் இந்த வேலை ஏலம் நடக்கும். நீங்கள் பணத்தை ஆன்லைனில் அனுப்பிக் கொடுக்க வேண்டும். அப்பாடா, இப்போதான் தெய்வம் கண்ணைத் தொறந்திடுச்சு என மொத்தத்தையும் அடகு வெச்சு பணம் கட்டினீங்கன்னா அவ்ளோ தான். உஷாரா கவுன்சிலேட், கம்பெனி என எல்லா இடத்துலயும் தீர விசாரிச்சீங்கன்னா நீங்க சமத்து !

ஏமாற்று என்பது மூட்டைப் பூச்சி போல, ஒண்ணை நசுக்கினா எங்கிருந்தோ ஒன்பது வந்து சேரும். எனவே கவனமாய் இருக்க வேண்டியது நம்ம பொறுப்பு. இவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

1. திடீர் பணம், புகழ் போன்றவை வருகிறது எனும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும் போது அதிக கவனம் அவசியம்.

2. “உடனே” என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப் படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. “முன் பணம்” கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத் தான் இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவப்பட்ட நபர்களிடம் விவாதிக்க தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்த தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்த தளம் லிஸ்ட் ஆகிறதா, என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது !

7. சஞ்சலம் தான் முதல் எதிரி. “ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே….” என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட்கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்ட்டை பிளாக் செய்யலாம். அதை யாரும் பின்னர் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கை தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் செய்யுங்கள். ஆன்லைனில் ஏதாவது பத்திரிகை, குரூப், பிளாக் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசைகாட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து ஆன்லைனிலேயே படித்து ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல போலி பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. உஷார். பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகளை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம் தான் வேஸ்ட்.

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் “உதவி” பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களுக்கே கொடுங்கள். நேரில் கொடுப்பதை விட சிறப்பானது வேறில்லை.

22 comments on “இன்றைய நூதன மோசடிகள்…

  1. எப்புடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ….
    நம்ம தான் சூதானமா இருக்கணும்…

    நீங்க நல்ல விழிப்புணர்வு தரும்படியா எழுதீருக்கீங்க…வாழ்த்துகள்.

    நீங்க Rs.20000/- DD எடுத்து அனுப்புங்க…இதை ஒரு படமா எடுத்துருவோம்….:-))))))

    Like

  2. எல்லோரையும் அன்புடன் “உஷார்” படுத்தும் அன்புள்ளத்துக்கு வாழ்த்துகள்!

    இந்த விளையாட்டுகளுக்கெல்லாம் நான் போறதே இல்லப்பா…. எனவே தலை தப்பிடுச்சுசுசுசு…. 😉

    Like

  3. //நீங்க Rs.20000/- DD எடுத்து அனுப்புங்க…இதை ஒரு படமா எடுத்துருவோம்….:-))))))/

    ஹா…ஹா…ஹா… சூப்பர் 😀

    Like

  4. //எல்லோரையும் அன்புடன் “உஷார்” படுத்தும் அன்புள்ளத்துக்கு வாழ்த்துகள்!

    இந்த விளையாட்டுகளுக்கெல்லாம் நான் போறதே இல்லப்பா…. எனவே தலை தப்பிடுச்சுசுசுசு
    //

    ஷாமா வா கொக்கா 😀

    Like

  5. நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு..
    என்னதான் இருந்தாலும் ஏமாறுறவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவங்க இருந்துட்டுதான் இருபாங்க..
    சமீபத்துலதான் நான் 15 லட்சம் ரூபா ஏமாந்துட்டு இருக்கான் 😦
    பதிவுக்கு நன்றி

    Like

  6. மொத்தமாக உம்ன்னு படிக்க வச்சுக்கிட்டே இருந்தீங்க. ரோஸ்விக் அந்த குறையை போக்கி விட்டார்.

    தேவியர் இல்லம் திருப்பூர்

    Like

  7. //மொத்தமாக உம்ன்னு படிக்க வச்சுக்கிட்டே இருந்தீங்க. ரோஸ்விக் அந்த குறையை போக்கி விட்டார்.

    தேவியர் இல்லம் திருப்பூர்

    //

    😀

    Like

  8. /சமீபத்துலதான் நான் 15 லட்சம் ரூபா ஏமாந்துட்டு இருக்கான் //

    ஐயோ என்னாச்சு ? நிலம் சமாச்சாரமா ?

    Like

  9. அவுஸ்திரேலிய போறதுக்கு கட்டின பணம்..
    நிலம் சமச்சரங்கள விட இந்தமாதிரியான போலி ஏஜன்சிகள் ல ஏமாறுறதுதான் அதிகம். .. 😦

    Like

  10. //அஅவுஸ்திரேலிய போறதுக்கு கட்டின பணம்..
    நிலம் சமச்சரங்கள விட இந்தமாதிரியான போலி ஏஜன்சிகள் ல ஏமாறுறதுதான் அதிகம்

    //
    நெசம் தான். ஏன்னா அது தான் கடைசி கட்ட மனிதனையும் எட்டிப் பிடிக்கிறது.

    Like

Leave a comment