ஹாலிவுட் சினிமா : அவதார் !!!

 

அவதார் ! ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை தூக்கமிழக்கச் செய்கிறது இந்த மந்திர வார்த்தை. டிசம்பர் 18ம் தியதி வெளிவரப் போகும் இந்த 3D சயின்ஸ் பிக்ஷன் சினிமா தான் இப்போதைய ஹாட் டாக். உலகெங்கும் வெளியான  இந்தத் திரைப்படத்தின் டிரைலர்கள் இந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்குக் கிளறி விட்டிருக்கிறது. டிரைலர் வெளியான வெப்சைட்களெல்லாம் மில்லியன் கணக்கில் கிளிக் வாங்கி பரபரப்பூட்டுகின்றன. இந்தப் படத்தை இயக்குவது ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்தப் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா ? டைட்டானிக் திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே. 

டெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 300 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்.

திரை ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் ஈர்த்திருக்கும் இந்தப் படத்தின் கதை தான் என்ன ?

கதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி  உயரம், நீளமான வால், நீல நிற தோல்,  பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான். உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள்.

அந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதை வெள்ளித் திரை சொல்லுமாம்.

சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார்.  ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம். 

அவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான  ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு. அவர் இயக்காத டெரிமினேட்டரின் மூன்றாம் நான்காம் பாகங்கள் ஊத்திக் கொண்டதும் உலகறிந்த உண்மையே.

இவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம். 

நடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் ! அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 40 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 60 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ்.

சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம்.

டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர்.

டைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.7 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவானதன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன்.

அவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள். இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான இடங்களில் அவதார் டிசம்பர் பதினெட்டாம் தியதி வெளியாகிறது. இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை எனும் ஏகப்பட்ட பில்டப்களுக்கான பதில் அப்போது தெரிந்துவிடும்.

சேவியர்

தமிழிஷில் வாக்களிக்க…

32 comments on “ஹாலிவுட் சினிமா : அவதார் !!!

 1. டைட்டானிக் திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவர் மட்டுமா?… அதை “அமுக்கி”.. “கவிழ்த்து”, அந்த “டப்பா” க்குள்ளிருந்து சுளை சுளையாய்ப் பணம் பார்த்தவராச்சே!… சும்மாவா?… 🙂
  ஆமாம் நல்ல Science Fiction and Fantasy /Animation Movie….
  theaterஇல் Trailer பார்த்தேன்!… வியந்தேன்!… வார்த்தைகள் இல்லை!

  இந்தப் படத்தைப் பார்க்கக் கொடுக்கப்படு 3D polarised glasses இலுள்ள lense மூலம் நம் இரு கண்களும் வேறுபட்ட…it means “that your left eye and right eye can see different images shown simultaneously on the screen” என்று கூறுகிறார்கள்…. ஆவலைத் தூண்டும் இப்படம் உலகமெங்கும் ஒரே நாளில் திரையிட இருப்பதால் இங்கு ஜேர்மனியிலும் 17.12.2009 இல் பார்க்க உத்தேசித்துள்ளேன்…. 🙂
  சுடச் சுட “கால..நேர அலை”களுக்கேற்ப செய்திகளைப் பதிவாக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் சேவியர்!

  Like

 2. நன்றாக இருக்கிறது. நம்ம விஷ்னுவை பேஸ் பண்ணி முயற்சி செய்யப்பட்டது என விகடனில் படித்து தேடி வந்தேன்.

  Like

 3. //நன்றாக இருக்கிறது. நம்ம விஷ்னுவை பேஸ் பண்ணி முயற்சி செய்யப்பட்டது என விகடனில் படித்து தேடி வந்தேன்//

  நன்றி.. விகடனில் நான் தான் எழுதினேன் 😀

  Like

 4. //இந்தப் படத்தைப் பார்க்கக் கொடுக்கப்படு 3D polarised glasses இலுள்ள lense மூலம் நம் இரு கண்களும் வேறுபட்ட…it means “that your left eye and right eye can see different images shown simultaneously on the screen” என்று கூறுகிறார்கள்//

  வாவ்… புத்தம் புதிய தகவல்….

  Like

 5. மிகுந்த எதிர்பார்ப்பபை ஏற்படுத்திவிட்டீர்கள். நிச்சயம் பார்த்துவிடுகிறேன் (மனசாட்சி – வெங்காயம், இன்னும் 2012டே பாக்கல நீ)

  Like

 6. இந்தப் பதிவு இப்படத்தை பார்க்க வேண்டும் என்று உணர்ச்சிகளை கிளப்பிவிட்டது..
  பதிவுக்கு நன்றி

  Like

 7. நன்றி சகோதரன் வலைதளம்.

  மிக சிறப்பு.

  இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கடந்தாலும், இன்றைய பாசுமதி உரிமை போல, நாளை கருவேப்பிலை உரிமை போல, மொத்த இதிகாச இலக்கியங்களில் உள்ள நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் காசும் பார்த்தும், நாம் வாய் மூடாமல் அவர்களை பார்த்துக்கொண்டும் தான் இருக்கப்போகிறோம்.

  அன்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்தினர்.
  இன்று நம்மிடம் உள்ளதையே எடுத்து நம்மிடம் பணம் வாங்கிக்கொள்கின்றேன்.

  உழைப்பு அவர்களிடம். உரிமை நம்மிடம். இடைவெளி விடும் சமயத்தில் கொரிக்கும் பாப்கான் தான் நாம்.

  http://deviyar-illam.blogspot.com

  Like

 8. //இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கடந்தாலும், இன்றைய பாசுமதி உரிமை போல, நாளை கருவேப்பிலை உரிமை போல, மொத்த இதிகாச இலக்கியங்களில் உள்ள நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் காசும் பார்த்தும், நாம் வாய் மூடாமல் அவர்களை பார்த்துக்கொண்டும் தான் இருக்கப்போகிறோம்.

  அன்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்தினர்.
  இன்று நம்மிடம் உள்ளதையே எடுத்து நம்மிடம் பணம் வாங்கிக்கொள்கின்றேன்.

  உழைப்பு அவர்களிடம். உரிமை நம்மிடம். இடைவெளி விடும் சமயத்தில் கொரிக்கும் பாப்கான் தான் நாம்
  //

  சிந்திக்க வேண்டிய சமாச்சாரம் தான் !

  Like

 9. //இந்தப் பதிவு இப்படத்தை பார்க்க வேண்டும் என்று உணர்ச்சிகளை கிளப்பிவிட்டது..
  பதிவுக்கு நன்றி

  //

  பாருங்கள். ஒரே வாரத்தில் 200 மில்லியன் டாலர் வசூலாகும்னு கூட்டிக் கழிச்சு கணக்கு போடறாங்க 🙂

  Like

 10. விகடனில் உங்க பேரை சரியா கவணிக்காம விட்டுட்டேன். எழுதுனுது நீங்க தான் சொன்னதும் தான், கவணித்தேன்.

  இதை வலைப்பூவில் சொல்வதற்குள் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி!.

  Like

 11. சந்தர்பம் கிடைத்தால் இப் படத்தை திரையருங்குகளில் ஒருமுறை பாருங்கள்..
  ஆஹா என்ன கற்பனை, என்ன ஒளிபதிவு,
  இப்படத்தின் உருவாக்கப் படத்தை பார்க்க இந்த இணைப்பை சொடுக்குக :

  Like

 12. super film . i have seen 2 times. it will be continue .
  what a imagination . here 3d is not available . even though its too good
  love is in any where

  Like

 13. நேற்று திருவனந்தபுரம் பத்மனாபா தியேட்டரில் அவதாரை ஆங்கிலத்துடன் பார்த்தேன்.( நமக்கு சொந்த ஊர் நாகர்கோவில் தியேட்டரில் சாதரணமாகவே அவதார் ரிலீஸ் ஆனதால் 3 டியில் பார்க்கவேண்டி திருவனந்தபுரம் சென்றேன்). 3டி யில் பார்க்கும் போது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப்போகிறோம். முக்கால் வாசி கிராபிக்ஸ் தான் என்றாலும் திரையில் பார்க்கையில் நாமும் வாய்பிளந்துதான் போகிறோம். அந்த டிராகன், லொக்கேசன் எல்லாமே பிரமிப்புதான்.
  வாழ்க்கையில் மறக்கமுடியாத பட வரிசையில் இதுவும் ஒன்று. தேங்ஸ் ஜேம்ஸ் கேமரூன்.

  திருவட்டாறு சிந்துகுமார்

  Like

 14. அட ! திருவட்டார் சிந்து குமார் !! மார்த்தாண்டத்தில் உங்களை ஒரு முறை சந்தித்த நினைவு !!! வருகைக்கு நன்றிகள்.

  Like

 15. //சந்தர்பம் கிடைத்தால் இப் படத்தை திரையருங்குகளில் ஒருமுறை பாருங்கள்..
  ஆஹா என்ன கற்பனை, என்ன ஒளிபதிவு,
  //

  ஆமா !

  Like

 16. I watched this movie in I-Max 3D.It’s an unexplainable experince, and felt like we lived in that situations.
  Fantastic movie.

  Like

 17. அபாரமான உழைப்பு. கற்பனை. கிறங்கடிக்கிறது. நடிகர்களுக்கும் கிராபிக்ஸுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. நம்ம படங்களில் திணிப்புகள் மூலம் குறைகளை கண்டு பிடிக்கலாம். இங்கே அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் படைத்திருப்பதே சாதனைதான்.

  http://www.ajeevan.com

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s