நகைக் காலம் vs குகைக் காலம்

“கம்ப்யூட்டர் காலத்தில் தான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள். முன்பெல்லாம் சமூகத்தில் நிலவியது முழுக்க முழுக்க ஆணாதிக்கமே” எனும் கொள்கை கொண்டவர்களா நீங்கள் ? அப்படியானால் அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றி வையுங்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

கற்கால மனிதனின் குகை ஓவியங்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். இந்த ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன என்பதில் இதுவரை ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை. சிலர் இது பொழுது போக்குக்காக கற்கால மனிதன் கிறுக்கியவை என்கிறார்கள், சிலர் இல்லையில்லை இவை அக்கால மனிதனின் மத அடையாளங்கள் என்கின்றனர். வேறு சிலரோ இவையெல்லாம் எதிர்காலத்துக்காக கற்கால மனிதன் வரைந்து சொல்லும் குறியீட்டுச் செய்தி என்கின்றனர்.

இப்படி ஆளாளுக்கு குகை ஓவியங்கள் குறித்து வாதிட்டாலும் எல்லோரும் ஒன்றுபடும் விஷயம் ஒன்றுண்டு. இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் ஆண்கள் என்பது தான் அது. இப்போது அந்த நம்பிக்கைக்கும் எதிராக பளிச் தகவலுடன் களமிறங்கியிருக்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டீன் ஸ்னோ.

வியக்க வைக்கும் இத்தகைய குகை ஓவியங்கள் எல்லாம் எல்லோரும் நினைப்பது போல ஆண்களின் கைவண்ணத்தில் வந்தவையல்ல, இவற்றை வரைந்ததில் பெண்களின் பங்கும் கணிசமானது. என்பது தான் இவரது சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு

குகை ஓவியங்களைக் குறித்து ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள், பல்வேறு நாடுகளில், பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டிருந்தாலும் இதுவரை யாரும் குகை ஓவியங்களை வரைவதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று சொன்னதில்லை. சொன்னது என்ன இந்த ஓவியங்களை ஒரு பெண் வரைந்திருக்கலாமா என யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை என்பது தான் ஆச்சரியமூட்டும் உண்மை.

இந்த ஆராய்ச்சியின் மூலம் உலகப் பெண்களின் பாராட்டுக்குச் சொந்தக்காரராகியிருக்கும் பேராசிரியர் டீன் ஸ்னோ பிரான்சிலுள்ள பீச் மார்லே மற்றும் கார்காஸ் குகைகளிலுள்ள ஓவியங்களை நுணுக்கமாய் ஆராய்ந்த போது தான் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்தாராம்.

முதலில் நம்பாமல் மீண்டும் மீண்டும் பல்வேறு விதமாக, பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தபோதுதான் அவருடைய சந்தேகம் வலுவடைந்து கடைசியில் இப்படி ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறார்.

இருபத்தையாயிரம் ஆண்டுகளாய் அமைதியாய் இருக்கும் இந்த குகை இது வரைக்கும் ஆண்களின் ஏகபோக கலை விளக்கமாய் மட்டுமே இருந்து வந்தது. முதன் முறையாக இப்போது தான் இது பெண்களின் கலை விளக்கமாகவும் பரிமளித்து புதிய முகம் காட்டுகிறது.

இந்த குகை ஓவியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது புள்ளிக் குதிரைகள் ஓவியம். இந்த புள்ளிக் குதிரைகளை வரைந்ததில் பெரும் பங்கு பெண்களுடையதே என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. குகைகளில் உள்ள “கை” பதிவுகளிலும் பெண்களின் கைகள் நிச்சயம் இருக்கின்றன, வண்ணங்களைத் தீட்டியதிலும் பெண்களுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கிறது என அடித்துச் சொல்கிறார் அவர்.

கைகளின் தன்மை, அளவு , நளினம் , பெண்மை உட்பட பல்வேறு விதங்களில் இந்த ஆராய்ச்சியை அவர் நடத்தியிருக்கிறார். போதாக்குறைக்கு கற்கால மனிதனின் கை ஓவியங்களுடன், தற்கால பெண்களின் கைகளை ஒப்பிட்டும் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

குகைக்காலப் பெண்களின் கைகளுக்கும், நமது நகைக்காலப் பெண்களுடைய கைகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பது அவர் தரும் கொசுறுச் செய்தி.

இந்த ஆராய்ச்சியின் சிறப்பு வெறுமனே குகை ஓவியங்களில் பெண்களின் பங்களிப்பைச் சொல்வதல்ல, மாறாக பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகம் நினைத்திருந்த, அல்லது உறுதியாய் நம்பிக்கொண்டிருந்த பெண்கள் குறித்த சிந்தனைகள் தவறு என்பதைச் சொல்வதே என்பது கவனிக்கத் தக்கது.

பிரான்ஸ் நாட்டுக் குகைகளுடன் டீன் ஸ்னோ தனது வேலையை முடித்துக் கொள்ளவில்லை. அங்கிருந்து ஸ்பெயின் நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற எல்காஸ்டிலோவுக்குப் பயணமானார். அங்குள்ள குகை ஓவியங்களிலும் பெண்களின் பங்களிப்பு குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

உலகெங்கும் உள்ள பழைய குகை ஓவியங்களை ஆராய்ந்து ஒட்டு மொத்தமாய் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்த பெண்களின் சமூகப் பங்களிப்பைக் குறித்து கண்டுபிடிப்பதே அவருடைய ஆவல், எண்ணம், இலட்சியம் எல்லாம்.

பாலியோலிதிக் காலம் என அழைக்கப்படும் சுமார் 20,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் பெண்களின் ஆதிக்கம் நாம் நினைப்பதை விட பல மடங்கு ஆரோக்கியமாக இருந்திருக்கிறது என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர்.

இது வரை ஆண்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட பழைய ஆய்வுகளைத் தூசு தட்டி, புதிய கோணத்தில் மீண்டும் ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தினால் வியக்க வைக்கும் மேலும் பல புதிய உண்மைகள் வெளிவரக் கூடும்.

நன்றி : பெண்ணே நீ.