2009 : படித்தவை, பார்த்தவை, கிழித்தவை…

திரும்பிப் பார்த்தல் ஒரு சுவையான அனுபவம். அதுவும் வருஷக் கடைசியில் உட்கார்ந்து என்னத்தை கிளிச்சோம் இந்த ஆண்டு என தலையைச் சொறிவது ரொம்பவே சுவாரஸ்யமானது.

இந்த வருடம் ஒரு வகையில் விஷுவல் வருஷமாகக் கழிந்திருக்கிறது. குறைந்த பட்சம் நூறு படங்கள் பார்த்திருப்பேன். பெரும்பாலும் ஆங்கிலப் ஹாலிவுட் படங்கள். மனதில் நின்ற படங்கள் ரொம்பக் குறைவு. சட்டென யோசித்தால் Breach ஞாபகத்துக்கு வருகிறது. தமிழில் ??? பொக்கிஷம் என்றால் பலர் கோபப்படலாம். பல குறும்படங்கள் பார்த்தேன். மனதில் நின்ற குறும்படம் என்றால் “அன்புடன் ஆசிரியருக்கு” எனும் குறும்படத்தைச் சொல்லலாம். நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் 79 வயதான ஒரு ஆசிரியைக்கு பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து உதவும் ஒரு நெகிழ்வான பதிவு அது. கண்கலங்காமல் படத்தைப் பார்த்து முடிப்பது சாத்தியமில்லை. இதைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுத நினைத்தேன். ம்… நினைப்பதையெல்லாம் எழுதிவிட முடிகிறதா என்ன ?

எப்பவுமே வாசிப்பில் கொஞ்சம் சோம்பேறி தான். இந்த ஆண்டும் ஒரு பத்தோ இருபதோ புத்தகங்கள் தான் வாசித்திருப்பேன். முதலாவது வாசித்த புத்தகம் எது என்பது ஞாபகத்தில் இல்லை. கடைசியாய் வாசித்தது தோழமை பதிப்பகம் வெளியிட்ட “மாவீரர்” நூல். பிரபாகரனின் பேட்டிகள், உரைகள் என அவருடைய கால் நூற்றாண்டு மனநிலையைப் பிரதிபலித்திருந்தது நூல். ஆங்கில நூல்களில் “Love can be spelled as T..I..M..E”. நேரமில்லை, நேரமில்லை எனும் ஓட்டத்தில் இழப்பது எது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த மரமண்டைக்குப் புரிய வைக்கிறது.

இந்த வருஷம் வெளியாவது ஒரே ஒரு புத்தகம். “அன்னை – வாழ்க்கை அழகானது” அருவி பதிப்பக வெளியீடு. அன்னை தெரசாவின் வாழ்க்கையை சில நுட்பமான காரண, காரிய, பின்புலங்களோடு சொல்லியிருப்பதில் வித்தியாசப்படுத்தியிருக்கிறேன். வாசிப்பவர்களை ஏமாற்றாது எனும் நம்பிக்கை எனக்குண்டு. (காக்கைக்கும் தன் குஞ்சு …)

பத்திரிகைகளில் எழுதியதைப் பொறுத்தவரையில் ரொம்பவே திருப்தியான வருடம் இது. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன் என விகடன் குழு பத்திரிகைகளில் மட்டுமே சின்னதும் பெரிதுமாக சுமார் நூறு படைப்புகள் எழுதியதில் பரம திருப்தி. சில கவர் ஸ்டோரிகளும் இதில் அடக்கம் என்பது ஸ்பெஷல் சந்தோசம். மற்றபடி வழக்கமாய் எழுதும் பெண்ணே நீ போன்ற பத்திரிகைகளில் பயணம் தொடர்கிறது.

பிளாக் வாழ்க்கையிலும் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்திருக்கிறது. அலசல் வலைத்தளம் 5 இலட்சம் வருகைகள், கவிதைச் சாலை 3 இலட்சம் வருகைகள் என சில மைல் கல்களை எட்டிப் பிடித்தது இந்த வருடம் தான். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எழுதினால் ஆரோக்கியமான நட்புகளும், வாசகர்களும் கிடைப்பார்கள் என மீண்டும் ஒரு முறை மனதுக்குள் எழுதிக் கொள்கிறேன். பதிவருக்கு காராசார மறுப்புக் கடிதம், ஆதிக்க சாதியின் அட்டகாசம், அவன் தானா நீ, அவருடைய லீலைகள், அவளுடே ராவுகள், ஹாட் கேலரி என்றெல்லாம் எழுதாமலேயே நிறைய நண்பர்கள், வாசகர்களைச் சம்பாதிக்கலாம் என்பதும் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைத்தளங்களும் பெரும்பாலும் நல்ல தளங்களாகவே இருப்பதில் இரட்டைத் திருப்தி.

வருஷத்துக்கு இரண்டு பேரையாவது பிளாக் ஆரம்பிக்கை வைத்து ‘யான் பென்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது என் கெட்ட பழக்கங்களில் ஒன்று. அது இந்த ஆண்டும் ஜெக ஜோதியாகவே நடந்து முடிந்ததில் சந்தோசம். டுவிட்டரில் போய் மாட்டிக் கொள்ளாமல் ஒரு வருடம் ஓடவேண்டும் என நினைத்ததும் நிறைவேறியிருக்கிறது.

பழைய நண்பர்கள் இன்னும் அதிகம் நெருங்கியதும், புதிய சிலர் நண்பர்களாக சேர்ந்து கொண்டதும் இந்த ஆண்டின் ஆனந்த சங்கதிகள். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நல்ல நண்பனை இன்னும் ஆழமாய் நேசிக்க முடிந்தது வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருக்கிறது. ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினால் (ஆசையைப் பாரு… ) அதில் கால்வாசிப் பக்கத்தை அவர் ஆக்கிரமிப்பார் என நினைக்கிறேன் !

நெருங்கிய தோழி ஒருத்தி தனது குழந்தையை எதிர்பாரா விபத்தில் பறிகொடுத்த வலி மட்டும் இந்த ஆண்டின் தீராத சோகம். அவருக்கு எதிர்காலம் பல மடங்கு வளங்களையும், மகிழ்வையும் கொடுக்கவேண்டும் எனும் பிரார்த்தனை, பிரார்த்தனைப் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது.

ஒரு நல்ல பத்திரிகையில் ஒரு தொடராவது எழுதி விட வேண்டும், சில நல்ல நூல்களை எழுதவேண்டும், நண்பர்களுடைய நட்பைத் தொடரவேண்டும், யாரையும் காயப்படுத்தாமல் கடந்து போகவேண்டும், எனும் எதிர்பார்ப்புகளுடன் எட்டிப் பார்க்கிறேன் T10 ஐ.. அதாவது டுவெண்டி டென் ஐ !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்ள்

0

சேவியர்