மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

சந்தி உற்சாகமாக இருந்தாள். மாலை நேர சன்னலின் வழியே வழக்கமான சூரியன் இன்று ரொம்பவே அழகாய்த் தெரிந்தான். காரணம் அருகில் கணவன் ரமேஷ்.

வசந்திக்கு இது இரண்டாவது ஹனிமூன். முதல் கணவன் சங்கருடன் ஆறு மாதங்கள் படாத பாடுபட்டு இப்போது தான் விடுதலை. எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதற்கெடுத்தாலும் சண்டை என கவலையில் போனது அவளுடைய முதல் வாழ்க்கை. விவாகரத்து வாங்கி எல்லாவற்றையும் முடித்து வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இப்போது புதிய வாழ்க்கை, புதிய கனவுகள் என அவளுடைய சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன.

திடீரென வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. முதல் கணவனிடமிருந்து. தான் தவறு செய்தது போல மறுமுனையில் சங்கர் கண்ணீர் விட்டான். இவளைப் பிரிந்து வாழ முடியாது என புலம்பினான். அவனுடைய குரல் அவளை அசைத்தது. அவளுடைய உற்சாகமெல்லாம் வடிந்து போக சட்டென அமைதியானாள்.

“யார் போன்ல” ரமேஷ் கேட்டான்.

“அ..அவர் தான்… சங்கர்” குரல் தடுமாறியது, கண்கள் கலங்கின.

“ஓஹோ… பழைய புருஷன் ஞாபகம் அழ வைக்குதோ ? அப்புறம் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டே” ரமேஷின் குரலில் கோபம் குதித்தது.

அந்த ரம்மியமான மாலைப் பொழுது வசந்தியின் புதிய வாழ்க்கையில் ஒரு கீறலாய் விழுந்து விட்டது. ரமேஷின் தேவையற்ற சந்தேகப் பார்வையும் வசந்தியின் மீது விழ அவளுடைய புதிய திருமண வாழ்க்கையும் நொண்டியடிக்க ஆரம்பித்தது. 

“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதெல்லாம் ரொம்பவே பழசாகிப் போச்சு. “உள்ளார்ந்த நேசம் இல்லையேல் டைவர்ஸ்” என்பது தான் இப்போதைய வாழ்க்கை.

மண முறிவுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒரு கோணத்தில் மண முறிவுகள் பலவீனமான குடும்ப உறவின் வெளிப்பாடுகள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், அகந்தை களைதல் எனும் பல விஷயங்களில் நிகழும் தோல்வி. அர்ப்பணித்தல் இல்லாததன் அடையாளம். 

இன்னொரு கோணத்தில் மணமுறிவுகள் தைரியத்தின் சின்னங்களாகவும் பார்க்கலாம். இது ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள். சமூகத்தின் பல துறைகளில் பட்டையைக் கிளப்பும் பெண்கள் வீடுகளில் அங்கீகாரம் கிடைக்காவிடில் என்ன செய்வது ?. குடும்பம் என்பது முதலாளி தொழிலாளி சமாச்சாரமல்ல. கணவன் மனைவி உறவு என்பது சர்வாதிகார – அடிமை உறவு நிலையுமல்ல. எனவே உண்மையான புரிதல் இல்லையா ? பிரிதலே நல்லது என பெண்களும் பேச ஆரம்பிக்கின்றனர்.  

ஆனால் சமூகம் தனது வழக்கமான புராணத்தைத் தான் பாடிக் கொண்டிருக்கிறது. ரொம்பவே நாசூக்காக, ஹைடெக் வாசனையுடன். “பொண்ணு சரியில்லே” என்பது தான் பெரும்பாலான டைவர்ஸ்களின் முனகல்கள். இதில் எவ்வளவு சதவீதம் உண்மை என்பது கணவர்களின் மனசாட்சி சொல்லும். சமூகத்தின் நரம்புகளில் இன்னும் ஆணாதிக்க ரத்தம் தான் வேகமாகப் பாய்கிறது என்பதன் உதாரணம் இது. ஆண்களின் இயலாமையை மறைக்க பெண்களின் நடத்தை மேல் ஒரு சந்தேகத்தைப் போட்டு விட்டால் போதுமே !  

சிலர் திருட்டுக் காதலுக்காக அழகான குடும்ப வாழ்க்கையை சிதைக்க நினைப்பார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். மறு மணங்கள் மரணங்களினாலோ, சரி செய்ய முடியாத சிக்கல்களாலோ நிகழலாம். ஆனால் திருட்டுத் தனமான ஆசைகளுக்காக சிதைவது அவலம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் இத்தகைய சூழல் ஏற்பட்டால் அது குழந்தைகளின் அமைதியான வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடும். கூடவே அந்த குற்ற உணர்வு உங்களையும் துரத்தித் துரத்தி நிம்மதியற்ற எல்லைக்குள் தள்ளி விடும்.

மணமுறிவு எனும் முடிவை யாரும் ஒரு நிமிடத்தில் எடுத்து விடுவதில்லை. ஆற அமர யோசித்து வேறு வழியில்லையேல் மட்டுமே எடுக்கின்றனர். ஆனால் அதன் பின் நடக்கும் இரண்டாவது திருமணங்கள் பல வேளைகளில் பெண்களை ரொம்பவே நிலைகுலைய வைத்து விடுகிறது. ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள், சிக்கல்களுக்கிடையே காலம் தள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடுகிறது. அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். மறுமணம் ரொம்ப நல்ல விஷயம். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுத்தபின் பெண்கள் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு ரொம்பவே அவசியம். மண முறிவு தரும் மனக் காயங்களும், சமூக சிக்கல்களும் அதீத கனம் வாய்ந்தவை.

இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

  1. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் மிச்சம் மீதிகளை செட்டில் செய்வது தான். உங்கள் கணவரைப் பிரிந்து வாழ முடியுமா என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் உறுத்தாமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். மன ரீதியாக முடிவெடுத்துவிட்டீர்களெனில் பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது சட்ட ரீதியான, குடும்ப ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளையும் நிகழ்த்தி விடுங்கள். உங்கள் புதிய வாழ்க்கை “ரொம்பப் புதிதாய்” இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
  2. எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்” எனும் சிந்தனையைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். கடந்த திருமண பந்தம் எப்படிச் சென்றது என்பதை மிக மிக அமைதியாக ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் தரப்பில் என்னென்ன பிழைகள் இருந்தன என்பதை கொஞ்சமும் தயவு தாட்சண்யமில்லாமல், பாரபட்சமில்லாமல் அலசுங்கள். அந்த பிழைகளை அடுத்த முறை செய்யப் போவதில்லை எனும் முடிவை எடுங்கள். இது மிகவும் முக்கியம்.
  3. “என்னம்மா இப்படி ஆயிடுச்சே” என குசலம் விசாரிக்க வரும் பழைய உறவின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விலக்கி விடுங்கள். நீங்கள் புதைத்துப் போட்டவற்றை தோண்டி எடுத்து வேடிக்கை காட்ட பலரும் விரும்புவார்கள். உங்கள் புதிய வாழ்க்கையின் தோல்வி பழைய உறவுகளுக்கு ரொம்பவே உங்கள் பழைய சிந்தனைகளையும், வலிகளையும் கிளறும் எந்த உறவையும் அனுமதிக்காதீர்கள்.
  4. முதல் திருமணத்தில் நீங்கள் இழந்ததாய் நினைத்ததைப் பெறப் போகும் வாழ்க்கை தான் இரண்டாவது திருமணம். “இருந்ததும் போச்சே” எனும் நிலை வரவே கூடாது என்பதில் கவனம் தேவை. அதற்காக உங்கள் வருங்காலக் கணவரைப் பற்றி முழுமையாய் கொள்ளுங்கள். அவசரம் கூடவே கூடாது. அவருடைய கடந்த காலம், குடும்பம், சூழல், சிந்தனைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது என்று சற்றே சந்தேகம் எழுந்தாலும் விட்டு விடுங்கள். முழுமையான நம்பிக்கை, சந்தேகமற்ற மனம் இரண்டும் மிக மிக முக்கியம்.
  5. உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய விருப்பங்கள், செயல்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், உரையாடல் வகைகள், மதம், குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பலவற்றைக் குறித்த தெளிவும் ரொம்ப அவசியம்.திருமணம் ஏன் தோல்வியடைந்தது. எவையெல்லாம் உங்களைக் காயப்படுத்தும், எவையெல்லாம் உங்களை மகிழ்விக்கும், எவையெல்லாம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்பதையெல்லாம் பேசுங்கள். திருமணத்துக்குப் பின் விரும்பத் தகாத ரகசியங்கள் வெளியாவது குடும்ப உறவைப் பாதிக்கும்.
  6. என்னதான் உலகம் பற்றித் தெரிந்த அறிவுள்ளவராய் இருந்தாலும் ஒரு கவுன்சிலிங் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சிந்தனைகள் சரிதானா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேனும் இது உதவும். எனவே நல்ல மேரேஜ் கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டு தெளிவு பெறுங்கள். நீங்களும் உங்கள் வருங்காலக் கணவருமாக திருமணத்துக்கு முந்தைய “பிரீ மேரிடல்” கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டால் சூப்பர்.
  7. புதிய திருமணம் செய்து கொண்டால் ஒரு புதிய இடத்துக்குப் போங்கள். புது வீடு, புதிய அக்கம் பக்கம், புதிய சூழல் என அமைவது ரொம்ப நல்லது. பழைய சிந்தனைகளும், கசப்புகளும் உங்களை கலவரப்படுத்தாமல் இருக்க இது உதவும்.
  8. அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். புதிய பொழுது போக்குகள், புதிய பழக்கங்கள் என உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் உற்சாகமற்றவராகவோ, குற்ற உணர்வுடையவராகவோ உங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.
  9. சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால் சிந்தியுங்கள். அவை உங்களால் முடியும் என்றால் ஆனந்தமாய் ஒத்துக் கொள்ளுங்கள். முடியாதவற்றை முடியும் என்று சொல்லி பிரச்சினையில் உழல வேண்டாம்.

10.  முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தைகளின் நலனின் அக்கறை கொள்பவர் கணவராக வருவது முக்கியம். கணவரின் குடும்பத்தினரின் மனநிலையும் இதில் ரொம்ப அவசியம். பழைய குடும்ப வாழ்க்கையில் குழந்தையின் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம். உங்களுடைய திருமண தேடுதல்கள் குழந்தைகளின் மனநிலையையோ, எதிர்காலத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

11. மறுமணங்களில் உள்ள ஒரு சிக்கல் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் எழும். குழந்தைகளுக்கா கணவனுக்கா ? மனைவி தனக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமென்பது கணவனின் விருப்பமாய் இருக்கும். பிள்ளைகளோ தங்களுக்கே அம்மா முக்கியத்துவம் தரவேண்டும் என ஆசைப்படுவார்கள். இதில் அழகான பேலன்ஸ் செய்ய முடிந்தால் வாழ்க்கை நலமாகும்.

12.  மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த செய்தி எல்லாம் கொஞ்சகாலம் தான். அப்புறம் போரடித்துப் போய் அந்த வாய்களெல்லாம் புதுசாக வேறு அவலை மெல்லக் கிளம்பிவிடும்.  

 இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம் என்கின்றன சர்வதேசப் புள்ளி விவரங்கள். எனவே இரட்டைக் கவனம் ரொம்பவே அவசியம். 

நன்றி : பெண்ணே நீ…

தமிழிஷில் வாக்களிக்க…

21 comments on “மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

  1. ்மறுமணம் பற்றி நல்ல கருத்துக்களைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.மறுமணம் செய்பவர்கமள் யோசிக்க வேண்டிய ஒன்று. நன்றி.

    Like

  2. //“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதெல்லாம் ரொம்பவே பழசாகிப் போச்சு. “உள்ளார்ந்த நேசம் இல்லையேல் டைவர்ஸ்” ……//

    நல்ல அறிவுரை சொன்னிங்க..
    பதிவுக்கு நன்றிகள்

    Like

  3. டைவேர்ஸ் மிகவும் கவலைக்கிடமானது தான்… ஆயினும் உள்ளார்ந்த நேசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்வா?…
    காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒவ்வொரு உயிருக்கும் அத்தியாவசியம்.
    மணவாழ்க்கை அன்பாக அமைந்து விட்டால் … அதுவே மோட்சம்!!…நன்றி சேவியர்!

    Like

  4. //டைவேர்ஸ் மிகவும் கவலைக்கிடமானது தான்… ஆயினும் உள்ளார்ந்த நேசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்வா?…
    காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒவ்வொரு உயிருக்கும் அத்தியாவசியம்.
    மணவாழ்க்கை அன்பாக அமைந்து விட்டால் … அதுவே மோட்சம்!!…நன்றி சேவியர்!

    //

    100% உங்கள் கருத்தே நமது கருத்தும் 🙂

    Like

  5. divorce, in one way a liberation, but another way it a big tide, ellathaiyium purati potuvidum! it demands a lot before,after ,and for a divorce !

    Like

  6. படிக்கிறதுக்கு interest..ஆ இருக்கணுங்கிற்துக்காகவே … அழகான பொண்ணு photo போட்ருக்கீங்க. but information is good. Thanks.

    Like

  7. /படிக்கிறதுக்கு interest..ஆ இருக்கணுங்கிற்துக்காகவே … அழகான பொண்ணு photo போட்ருக்கீங்க. but information is good. Thanks//

    அட ராமா !

    Like

  8. Romba nandri annaa,

    Nan Marumanam seyya thayarana pothuthan intha visayatha pathen. Enakku muthal manam, nan manakka pora ponnukku ithu rendu, itha mothalla paduchu kattaporen.

    Againly Thanks.

    Like

  9. //Romba nandri annaa,

    Nan Marumanam seyya thayarana pothuthan intha visayatha pathen. Enakku muthal manam, nan manakka pora ponnukku ithu rendu, itha mothalla paduchu kattaporen.

    Againly Thanks
    //

    கட்டுரை தனது பணியைச் செய்தது என நினைக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றிகள் பகிர்ந்து கொண்டமைக்கு

    Like

  10. நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது இக்கட்டுரையில். பலர் வாழ்க்கையில் புத்துணர்வும் புத்தொலியும் கொடுக்கும் என்று நம்புவோம். நன்றி.

    Like

  11. My Name is K.Nesamni, I have 2 son (one is 6 years and another one is 9 months) now my wife died on 02.08.11due to Brain tumour (since 3 years). Now I am only 36 years (pls any one can advice for 2nd marriage. Really I am affriad about my 2nd marriage, but at present on other way. pls advice .
    Iam a CSI christian

    Like

  12. My Name is K.Nesamni, I have 2 son (one is 6 years and another one is just 10 months) now my wife died on 02.08.11due to Brain tumour (since 3 years). Now I am only 36 years (pls any one can advice for 2nd marriage. Really I am affriad about my 2nd marriage, but at present I dont want to get 2nd marriage.
    pls send your advice thro mail me email id is nesam_787@yahoo.co.in

    Like

  13. நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது இக்கட்டுரையில். பலர் வாழ்க்கையில் புத்துணர்வும் புத்தொலியும் கொடுக்கும் என்று நம்புவோம். நன்றி.

    //
    நன்றி ! 🙂

    Like

Leave a comment