ரியலா ? ரியாலிடி ஷோ ?

பாஸ்டியனுக்கு வயது 18. அவனுடைய காதலி தமாராவுக்கு வயது 16. அவர்களுடைய கையில் தவழ்கிறது பதினோரு மாத கைக் குழந்தை ஒன்று. இருவரும் அந்த குழந்தையைக் கவனித்துக் கொள்கிறார்கள், “ஆய்” போனால் கழுவுகிறார்கள், அழுதால் உணவு கொடுக்கிறார்கள், குளிப்பாட்டுகிறார்கள், தாலாட்டுகிறார்கள்.

சரி.. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா ?

அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் கையில் இருக்கும் குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

குழப்பமாய் இருக்கிறதா ? குழம்ப வேண்டாம். இந்த கேலிக்கூத்து நடப்பதெல்லாம் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு நடத்தும் இந்த “ரியாலிடி ஷோ” க்களில் தான்.

இந்த நிகழ்ச்சி நடப்பது ஜெர்மனியில். “”The Baby Borrowers” எனும் இந்த  ஷோ வில் ஒரு பதின் வயதுக் காதல் ஜோடிக்கு ஒரு குழந்தை கொடுக்கப்படுகிறது. உண்மையான குழந்தை !. அந்தக் குழந்தைக்கு நான்கு நாட்கள் அவர்கள் பெற்றோராய் இருந்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஷோ வின் மையக்கரு. அதை ஷோ தயாரிப்பாளர்கள் முழுமையாய் படம் பிடித்து தொலைக்காட்சியில் ரியாலிடி ஷோவாக ஒளிபரப்புவார்கள்.

“குழந்தை வளர்ப்பு” எனும் உன்னதமான ஒரு பணி கூட இன்றைக்கு மலினப்பட்டு, வியாபாரப் பொருளாக்கப் பட்டிருப்பதை வேதனையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

தாய்க்கும் குழந்தைக்குமான புனிதமான உறவைத் தடுத்து, கேமராவின் முன்னால் நான்கு நாட்கள் சம்பந்தமே இல்லாத ஏதோ இரண்டு பேருடைய கைகளில் ஏதுமறியாக் குழந்தையை ஒப்படைக்கும் பரிதாபமான நிலைக்கு ரியாலிடி ஷோக்கள் நம்மைக் கொண்டு வந்து விட்டதை அதிர்ச்சியுடன் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதே போன்ற ரியாலிடி ஷோ க்கள் உலகெங்கும் இன்றைக்கு புற்றீசல் போல குவிகின்றன. இங்கிலாந்திலுள்ள “பிக் பிரதர்” ஷோ வைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காரணம் அதில் சில்பா ஷெட்டி கலந்து கொண்டதும், இனவெறிப்பேச்சை அவருக்கு எதிராய் நடிகை ஜேட் பேசியதும் தான்.

பிரபலமான 12 நபர்களை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்து, அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளை கேமராவில் பதிவு செய்து ஒளிபரப்புவது இந்த ஷோ. ஒவ்வோர் வாரமும் அந்த குழுவிலிருந்து ஒவ்வொரு நபர் வெளியேற்றப்படுவார். ஒருவர் பின் ஒருவராக எல்லோரும் வெளியேறிய பின் கடைசியில் மிஞ்சும் நபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுவே இந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் கரு.

அடுத்தவன் வீட்டை ரகசியமாய் எட்டிப் பார்க்கும் நாகரீகமற்ற மனநிலையோ, அல்லது அடுத்தவன் அவமானப்படுத்தப்படும் போது மகிழ்ச்சியடையும் சைக்கோ மனநிலையோ தான் இந்த ஷோவைப் பார்க்கும் போதும் எழுகிறது. ஆனால் இந்த ஷோவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் ரியாலிடி ஷோ தான். அதுவும் விதவிதமான வடிவங்களில், வித விதமான வகைகளில். உதாரணமாக பழக்கமே இல்லாத சிலரை ஒரே இடத்தில் கூட்டிச் சேர்த்து ஏதேனும் செய்யச் சொல்வது, எங்கேனும் தங்கச் சொல்வது, என சில ரியாலிடி ஷோக்கள் நடக்கின்றன.

நடிகைகளை வைத்தும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையை வைத்தும் நடத்துகின்ற ரியாலிடி ஷோக்கள் அமெரிக்காவில் மிகப் பிரபலம். தொட்டதுக்கெல்லாம் ரியாலிடி ஷோ நடத்தும் மேலை நாடுகளில் டேட்டிங் போவதற்கெல்லாம் கூட ரியாலிடி ஷோ இருக்கிறது.

“சீட்டர்ஸ்” எனும் ரியாலிடி ஷோ ஏமாற்றுத் தனங்களை வெளிப்படுத்துவதற்காக என கிளம்பி பல குடும்பங்களின் நிம்மதியை குலைத்திருக்கிறது. கணவன் மனைவியிடையே சந்தேகம் ஏற்பட்டால் கூட அவர்களில் ஒருவரை ரகசியமாய் கண்காணித்து படமெடுத்து அதை உலகுக்கே காண்பிப்பது இந்த ஷோவின் குறிக்கோள்.

இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் என்றால், இந்தியாவில் நிலமை இன்னும் மோசம். மேலை நாட்டில் மழையடித்தால் இந்தியாவுக்குக் காய்ச்சலடிக்கும் எனும் நிலமையே இங்கே. எல்லாவற்றையும் வால் பிடித்துப் பார்க்கும் ரியாலிடி ஷோக்கள் இந்தியாவிலும் நிரம்பிவிட்டது.

வாரம் முழுதும் ஏதேனும் ஒரு ரியாலிடி ஷோ என தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை கொட்டுகின்றன. ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சி துவங்கினால் உடனே அனைத்து தொலைக்காட்சிகளும் அதன் வால் பிடித்து அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்து விடுகின்றன.

ஏதேனும் ஒரு தொலைக்காட்சி ஒரு உரையாடல் நிகழ்ச்சியை நடத்தினால் அதே போன்ற நிகழ்ச்சி உடனே மற்ற தொலைக்காட்சிகளின் நிகழ்சிப் பட்டியலிலும் இடம் பெற்று விடுகிறது.  பாட்டு பாடுவது, நகைச்சுவை சொல்வது, விளையாட்டுகள் நடத்துவது என எல்லா முகங்களுடனும் நடக்கின்றன ரியாலிடி ஷோக்களின் தாண்டவம்.

வட இந்தியத் தொலைக்காட்சி ஒன்று சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்துகிறது. திருமணம் என்பது எத்தனை முக்கியமானது, அது நீண்டகால உறவின் அஸ்திவாரம் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஷோவிலேயே திருமணம் முடிவு செய்யப்படும் கேலிக் கூத்தெல்லாம் இன்றைக்கு பரவிக் கொண்டிருக்கின்றன.

கொஞ்ச நாட்களுக்கு முன் குழந்தைகளுக்கான ஒரு பாடல் ஷோ வில் தோற்றுப் போன குழந்தைகளெல்லாம் அழுது கொண்டும், அவமானப்பட்டும் மேடையிலிருந்து இறங்கி வரும் நிகழ்ச்சியைப் பார்த்தபோது மனம் துடித்துப் போனது.

தோல்வி என்பது அவமானகரமானது, வெற்றி மட்டுமே அங்கீகரிக்கப்படக் கூடியது எனும் தவறான சிந்தனையை இந்த ரியாலிடி ஷோக்கள் அவர்களுடைய மனதில் அழுத்தமாய் எழுதியிருக்கின்றன. குழந்தைகள் எத்தனை கவனமாய் வளர்க்கப்பட வேண்டியவர்கள். எத்தனை கவனமாய் கையாளப்படவேண்டியவர்கள். அவர்களை சபையிலே நிற்கவைத்து அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்.

குழந்தைகள் இத்தகைய ஷோக்களில் பங்குபெறும் போது மிக அதிக அளவில் மன அழுத்தமடைகிறார்கள். அவர்களுடைய தன்னம்பிக்கை, எதிர்காலம் எல்லாமே உடைந்து சுக்கு நூறாகிப் போகக்கூடிய வாய்ப்பு இந்த ரியாலிடி ஷோக்களால் உருவாகிறது. இப்போது சொல்லுங்கள், ஷோ தயாரிப்பாளர்கள் செல்வம் சேர்க்க உங்கள் செல்வங்களின் வாழ்க்கையைப் பலியிடுவீர்களா ?

இந்த ரியாலிடி ஷோக்களுக்கு நீதிபதிகளாய் இருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் ஏதோ எல்லாம் தெரிந்த கடவுளின் குளோனிங் வடிவங்களாகவே தங்களை பாவித்துக் கொள்கிறார்கள். நேர்மையான விமர்சனம் சொல்கிறேன் எனும் சாக்கில் அவர்கள் அவிழ்த்து விடும் தத்தக்கா பித்தக்கா தத்துவங்களும், நேரடித் தாக்குதலும் பங்கு பெறுபவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுகின்றன.

கேரளாவில் கொடிகட்டிப் பறக்கும் “பாடகர்” நிகழ்ச்சிகள் ஏதும் சிறந்த பாடகர்களை உருவாக்குவதில்லை என வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறார் கேரள அரசின் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.ஜெயசந்திரன்.

தேவையற்ற ரியாலிடி ஷோக்களில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு பள்ளிக்கூடங்களும் தடை விதிக்கவேண்டும். கல்வியுடன் கலாச்சாரம் ஒழுக்கம் இவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை பள்ளிக்கூடங்களுக்கு உண்டு.

இன்னொரு முக்கியமான விஷயம், இமை கொட்டாமல் பரபரப்புடன் நீங்கள் பார்க்கும் வாக்கு வாத நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திரைமறைவில் செய்யப்படும் தீவிர ஒத்திகைக்குப் பின் நடத்தப்படும் நாடகங்களே!

ஒரு தலைப்பைக் கொடுத்து அதற்கு என்னென்ன பதில்கள் சொல்லப்பட வேண்டும், எப்படி உணர்ச்சி பூர்வமாக பேசவேண்டும், எப்படி கை அசைக்கவேண்டும் என்பன உட்பட எல்லாமே முன்னமே அட்சரம் பிசகாமல் செய்து பார்க்கப்படுகிறது.

அப்படி ஒளிபரப்பாகும் அரங்கங்களைத் தான் நாம் “அடடா… ஆஹா… ஐயோ…அப்படியா..” என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பார்க்கிறோம் என்பதை உணர வேண்டும்.

நமது நேரத்தை விழுங்கி, நமது பணத்தை விழுங்கி, நமது குழந்தைகளின் நிம்மதியை விழுங்கி கூடவே நமது கலாச்சாரத்தையும் விழுங்குகின்றன இத்தகைய ஷோக்கள்.

சினிமாவின் குத்துப் பாட்டு ஓடுகிறது. குழந்தைகள் அந்தப் பாடலுக்கு ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து பெரியவர்களைப் போல ஆடுகிறார்கள். அவர்களுடைய உடைகளிலும் மழலைத் தன்மையை மறைத்து சினிமா நடிகர்களை நகலெடுக்கும் உத்வேகம் !

எப்படித் தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர் அனுப்பி வைக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, இங்கே குழந்தைகளுக்கான நிகழ்ச்சியாய் இருப்பதில்லை. பெரியவர்களுடைய நிகழ்ச்சியை சிறுவர்கள் நடத்துவது போல இருக்கிறது.

ஒவ்வோர் போட்டியிலும் பார்வையாளர்களை எஸ்.எம்.எஸ் அனுப்ப ஊக்குவித்து அதன் மூலம் கணிசமான வருவாயை இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பெற்று விடுகிறார்கள். என்பது இங்கே கவனிக்கத் தக்கது. எஸ் எம் எஸ் அனுப்புபவர்களில் சிலருக்கு பரிசு, பங்கு பெறும் வாய்ப்பு என்றெல்லாம் வலை விரிப்பது நம் பையில் இருக்கும் காசை லாவகமாய்ப் பிடுங்கிக் செல்ல மட்டுமே.

கவர்ச்சிகரமாக ஆரம்பித்து டி.பி.ஆர் ரேட்டிங்கை எகிற வைத்து, அதன் மூலம் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சுருட்டுவதே இந்த ரியாலிடி ஷோக்களின் உள் நோக்கம். மற்றபடி நீங்கள் நினைப்பது போல தமிழகத்திலுள்ள மக்களின் திறமையை உலகுக்கு உணர்த்துவதல்ல.

வாழ்க்கையின் அர்த்தத்தையும், புனிதத்தையும் இந்த ரியாலிடி ஷோக்கள் கொன்று குவிக்கின்றன. மக்களுடைய ரசனையும் இந்த ஷோக்களினால் அகல பாதாளத்தில் கொன்று குவிக்கப்படுகிறது. அடுத்த முறை தொலைக்காட்சியில் ஒரு ஷோ ஓடும் போது “இது கதை வசனம் எழுதப்பட்டு நிகழ்த்தப்படும் நிகழ்ச்சி“ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி : பெண்ணே நீ…

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

Advertisements

11 comments on “ரியலா ? ரியாலிடி ஷோ ?

 1. //அடுத்தவன் அவமானப்படுத்தப்படும் போது மகிழ்ச்சியடையும் சைக்கோ மனநிலையோ தான் இந்த ஷோவைப் பார்க்கும் போதும் எழுகிறது.//
  😦 அண்மையில் தமிழகத் தொலைக் காட்சி ஒன்றில் (எதில் என்பதும், என்ன நிகழ்ச்சி என்பதும் மறந்து போய் விட்டது) பார்த்தது. கண்ணாடிக் கூண்டினுள் பெண்களைப் கையெல்லாம் விலங்கு மாட்டி படுக்க வைத்து (படுத்துக் கொள்ள மட்டுமே இடம் இருக்கு), அவர்கள்மேல் கரப்பான்பூச்சி, எலிகள் எல்லாம் கொட்டப்படுகிறது. பார்க்கவே முடியாமல் ஓடி விட்டேன். இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென எப்படித்தான் தோன்றுகின்றதோ தெரியவில்லை 😦

  Like

 2. நன்றாக உள்ளது. ஆனால் இந்த உலகம் திருந்துமா?. திருந்தவே மாட்டார்கள்.

  Like

 3. சிறுவயதிலேயே குழந்தைகள் பெற்று அதைப் பெற்றோரிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டு விடும் இளம் தாய்மார்கள் இந்த விதத்திலாவது (வாடகைக் குழந்தை மூலம் 2 நாட்களோ 3 நாட்களோ) குழந்தை வளர்ப்புக்குத் தம்மைத் தயார்படுத்துவது வரவேற்கத்தக்கதென்றே நினைக்கிறேன்…
  ஆனால் “ரியாலிடி ஷோ”கள் எனும் பெயரில் மற்றவர்களை அவமானப்படுத்தும், அடுத்தவர் மனங்களைக் காயப்படுத்தும் Big Brother உம் அதுபோன்ற ஏனைய “ஷோ”களும் தடைசெய்யப்பட, தடுக்கப்பட வேண்டியவையே!

  ஒருவரின் கண்ணீரிலோ, அவமானங்களிலோ, துன்பத்திலோ இன்பம் காண்பவர்கள் மனிதர்களென்று சொல்லத் தோன்றவில்லை…. இதிலெல்லாம் பொருளீட்டும் வர்த்தகர்களை எந்த வர்க்கத்தில் சேர்ப்பது?….
  “எளியாரை வலியார் தண்டித்தால்….வலியாரை தெய்வம் தண்டிக்கும்”….
  அடுத்தவர் மனதை, உணர்வை மதிக்கத் தெரிந்தவனே மனிதருள் மாணிக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் சேவியர்…. சமூதாய அக்கறைமிக்க உங்கள் பார்வையின் பணிதொடர வாழ்த்துகிறேன்!

  Like

 4. இமாதிரியான நிகழ்ச்சிகள் நடத்த காரணம் இந்த நிகழ்ச்சிகளை பார்பவர்கள் தான். ஒரு நிகழ்ச்சிள் SMS வாக்குகள் எடுக்கப்படும் போது கோடிகணக்கான பார்வையாளர்கள் SMS செய்கிறார்கள் இது யாருடைய தவறு?
  சில நிகழ்ச்சிகளில் பாடகர் தெரிவுக்காக SMS வாக்குகள் எடுக்கப்படுகின்றது வாக்காலர்களோ தம் ஊரினருக்கு அல்லது நண்பர்களுக்கு வக்களிகின்டர்கள். எத்தனையோ திறமை சாலிகள் இதுபோன்ற நடவடிக்கைகளால் தட்டிக்களிகப்படுகின்றார்கள். இந்தமாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பிரபலமான நடுவர்கள் ஹஹா,
  என்ன கொடுமை சரவணா !

  Like

 5. இதற்கெல்லாம் விடிவே கிடையாது. மக்களுக்கு பொறுப்புணா்வும், விழிப்புணா்வும் வரும்வரை!

  Like

 6. //அவருக்கு வலிக்குமா தெரியாது,
  எனக்கும் இதை வாசிப்பவருக்கும் நிச்சயம் வலிக்கும்!./

  நன்றி சுபா…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s