Paranormal Activity : எனது பார்வையில்…

பேராண்மை நாடகத்தைப் பார்த்து போரடித்துப் போய் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான படத்தைப் பார்க்கலாமே என கையில் எடுத்தேன் இந்தப் படத்தை.

“தனியே பார்க்காதீர்கள், பயப்படாமல் பார்க்கவே மாட்டீர்கள்” என ஏகப்பட்ட பில்ட் அப்கள் இந்தப் படத்துக்கு. வழக்கமாக திகில் படங்களை இராத்திரி நேரத்தில், காதில் ஹெட் போன் மாட்டி தனியே அமர்ந்து போர்ட்டபிள் டிவிடி பிளேயரில் பார்ப்பது தான் வழக்கம். இந்தப் படத்துக்கு வந்த பில்ட் அப்களைப் பார்த்து பயந்து போய் பகலிலேயே பார்த்தேன். அதுவும் நாலுபேரை துணைக்கு வைத்துக் கொண்டு !

ஒரு கதாநாயகன், ஒரு நாயகி. இருவரும் ஒரு தனிமையான வீட்டில் இருக்கிறார்கள் என இலக்கணம் மாறாத பேய் கதைக் களம். படம் முழுக்க இந்த இரண்டு பேர் மட்டும் தான். ஒரு டாக்டர் இரண்டு சீன் வந்து எட்டிப் பார்ப்பார், ஒரு தோழி இரண்டு வாட்டி வந்து ஹாய் சொல்லிப் போவாள். அவ்ளோ தான் ! கதாநாயகிக்கு ஒரு சிக்கல். அவளை ஒரு பேய் துரத்துகிறது. எட்டு வயதிலிருந்து ஆரம்பமானது இந்தப் பிரச்சினை. எங்கே போனாலும் அந்தப் பேய் துரத்தும் என்பது தான் இதன் முடிச்சு. அதனால் வீடு மாறி ஓடிப் போய் தப்பித்து விட முடியாது.

“பேய் என்னதான் பண்ணுதுன்னு பார்ப்போமே” என வீடியோ கேமரா தூக்குகிறான் காதலன் மிக்கா. அவன் ஒரு ஹைடெக் ஹீரோ. படுக்கை அறையில் வீடியோ கேமரா வைத்து தூங்கும் போது என்ன நடக்கிறது என படம் பிடிக்கிறான். ( படுக்கை அறைக் காட்சிகள் நிறைந்த படம் என்று விளம்பரப் படுத்தலாம். பட்.. நோ ஜில்பான்ஸ் !! )

ஒவ்வொரு ராத்திரியாய் இந்த படம் பிடித்தல் நடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் பேய் கைவரிசை காட்ட ஆரம்பிக்கிறது. ஐ..மீன் அதே கதவு ஆடறது, விளக்கு எரியறது, சத்தம் கேட்கறது இத்யாதிகள் தான். (போங்கடா பேய்களா, செத்தப்புறம் கூட வித்யாசமா யோசிக்க மாட்டீங்களா ) இராத்திரி நடக்கும் விஷயங்களைக் காலையில் லேப்டாப்பில் பார்க்கிறார்கள் ஹீரோவும், ஹீரோயினியும். குய்யோ முய்யோ என பயப்படுகிறார்கள் (கவனிக்க… பயப்படறதெல்லாம் அவர்கள் தான், நாம் அல்ல )

கிளைமேக்ஸ்ல ஏதோ பெரிய சமாச்சாரம் இருக்கும் என நாம் பரபரப்பாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கடைசி வந்து விடுகிறது. அது கடைசி என்பதையே “the end” எனும் வாசகத்தை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது ! ஒருவேளை நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என புத்தாண்டு தீர்மானம் எடுத்திருக்கலாம் அதனால் அந்த முடிவை நான் சொல்லவில்லை.

இதை லோ பட்ஜெட் படம் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதே லோ பட்ஜெட் படங்களைக் கேவலப் படுத்துவதற்குச் சமம். செலவு நம்ம ஊர் குறும்படத்துக்கு ஆகும் செலவை விடக் குறைவு. வெறும் 15,000 டாலர்களாம். அதை வைத்துக் கொண்டு இதற்கு மேல் எதுவும் எடுக்க முடியாது தான். படு கேவலமான எடிட்டிங். உப்பு சப்பில்லாத டயலாக். சுவாரஸ்யமற்ற காட்சிகள், பெயருக்கு இசை என இழுவையோ இழுவை.

ஒரு மில்லி கிராம் அதிர்ச்சியைக் கூட தராத இந்தப் படத்தை எப்படி ஹிட் ஆக்கினார்கள் ? எப்படி 120 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார்கள் என்பது இயக்கிய ஓரென் பேலிக்கே வெளிச்சம்.

ஒரே ஆறுதல் படம் 80 நிமிடங்களில் முடிந்து விடுவது தான்.

 பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…