1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.
2. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும்
இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
3. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
4. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !
5. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.
6. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
7. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !
8. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை.
நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.
9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.
10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.
நன்றி : தேவதை
காதல் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.