ஹாலிவுட் ATONEMENT : எனது பார்வையில்

கொஞ்சமும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்கும் சில படங்கள் உயிரை உலுக்கி எடுத்து விடும்.  அட்டோன்மெண்ட் திரைப்படம் அப்படிப்பட்ட ஒன்று என்று தைரியமாய்ச் சொல்லலாம். 

ஆத்மார்த்தமான ஒரு அழகிய காதல், யார் மீதும் எந்தப் பிழையும் இல்லாமல், ஒரு சிறுமியின் தவறான புரிதலால் உடைந்து போகிறது. 1935களில் இங்கிலாந்தில் நடக்கிறது கதை. செல்வத்தின் உச்சத்தில் இருக்கும் வீடு கதாநாயகியினுடையது. அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகன் தான் வசீகரமான கதா நாயகன். இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடுகிறது காதல்.

ஒரு நாள் சன்னல் வழியே ஒரு காட்சியைப் பார்க்கிறாள் நாயகியின் தங்கை. நம்மைப் போலவே, அவளும் அந்த நிகழ்வை முழுக்க முழுக்க தவறாய்ப் புரிந்து விடுகிறாள். போதாக்குறைக்கு தொடர்ச்சியாய் நடக்கும் அடுத்த இரண்டு நிகழ்வுகளும் கூட அவளுக்கு நாயகன் மீது தவறான அபிப்பிராயத்தையே ஏற்படுத்துகின்றன. தன் அக்காவுக்கு நல்லது செய்கிறோம் பேர்வழி என செய்யாத ஒரு பாலியல் தப்புக்கு சாட்சியாய் மாறி நாயகனை சிறைக்கு அனுப்புகிறாள். போர்க்காலம் வருகிறது. போர்க்களங்களில் நாயகனும், செவிலியாய் நாயகியும் என பிரிந்தே துயருறுகிறார்கள்.

தான் செய்தது தப்பு என்று சிறுமி உணரும் போது வாழ்க்கை எல்லாவற்றையும் கலைத்து பிய்த்து எறிந்திருக்கிறது. தீராத குற்ற உணர்வு கொத்தித் தின்ன, மன்னிப்பும் கிடைக்காமல் ஏங்குகிறாள் தங்கை.

காதலியிடம் செய்து கொடுத்த “மீண்டும் வருவேன்” எனும் சத்தியம் காதலனுக்கு உத்வேகமாய் இருக்கிறது. ஆனால் ஊனுடல் வலுவற்றதல்லவா ? போர்க்களத்திலிருந்து கிளம்ப வேண்டிய கடைசி நாளில் உயிரை விடுகிறான் நாயகன். கைகளில் காதலியின் பிரியங்கள் கடிதங்களாக. காதலி இன்னோர் விபத்தில் அன்றே இறந்து விடுகிறாள். துயரத்தின் கடைசித் துளியாய் அவர்களுடைய காதல் சின்னங்கள் மட்டும் மிஞ்சுகின்றன.

தங்கை சிறுவயதிலிருந்தே நன்றாக எழுதுவாள். துயரங்கள் துரத்த அவள் எழுதிக் கொண்டே இருக்கிறாள். மனதின் மூலையில் உறுத்திக் கொண்டே இருக்கும் நிஜக் கதையை தனது கடைசிக் கதையாக “அட்டான்மெண்ட்” என எழுதி முடிக்கிறாள். உண்மையில், முதலில் எழுத ஆரம்பித்து கடைசியாக முடிக்கிறாள் அந்த நாவலை. அந்த நாவலில் நாயகனும், நாயகியும் இணைகிறார்கள். ஆனந்தமாய் இருக்கிறார்கள். “நான் அவர்களுடைய ஆனந்தத்தை கெடுத்து விட்டேன். கதையிலாவது அவர்களை வாழவைக்கிறேன்” என கண்ணீருடன் பேட்டி கொடுக்க படம் முடிகிறது.

ஸ்தம்பித்துப் போன மனநிலையில் நீண்டநேரம் இருக்க வைத்த படம் இது. படத்தின் முதல் சிறப்பம்சம் நடிப்பு ! போட்டி போட்டுக் கொண்டு நடித்து இந்தப் படத்தை உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள். அதிலும் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்து ஆஸ்கரை அள்ளிக் கொண்டு போன வெனீசா ரெட்கிரேவ் நடிப்பு பிரமிப்பு !

சின்னச் சின்ன வியப்புத் திருப்பங்கள், பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகள், திடுக்கிட வைக்கும் சிறு சிறு பிளாஷ்பேக்ஸ் என ஒரு புதுமையான அனுபவம் இந்தத் திரைப்படம். ஆடை வடிவமைப்புகளில் மிரட்டி விட்டார்கள். குறிப்பாக கதாநாயகி ஒரே ஒரு காட்சியில் அணிந்து வரும் பச்சை நிற ஆடை இன்னும் கண்களுக்குள் !

இந்தத் திரைப்படத்தின் இயக்கம் மனதை வருடுகிறது. சஸ்பென்ஸ்கள் உடையும் சில காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். மெக் எவன்ஸ் நாவலின் அடிப்படையில் அமைந்த இந்தப் படத்தைஇயக்கியிருப்பது ஜோ ரைட்.  

சில படங்கள் மனதைத் திருடும். இந்தப் படம் தூக்கத்தையும் சேர்த்தே திருடுகிறது. 

தமிழிஷில் வாக்களிக்க…

8 comments on “ஹாலிவுட் ATONEMENT : எனது பார்வையில்

 1. இந்த திரைப்படத்தினை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. ( அந்த ஓரிரண்டு ஆங்கில வார்த்தைகளையும் தமிழில் எழுதினால் என்ன?). நான் தொடர்ந்து உங்களது திரைப்பட அறிமுகங்களை வாசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

  Like

 2. //இந்த திரைப்படத்தினை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. ( அந்த ஓரிரண்டு ஆங்கில வார்த்தைகளையும் தமிழில் எழுதினால் என்ன?). நான் தொடர்ந்து உங்களது திரைப்பட அறிமுகங்களை வாசித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.//

  நன்றி ஜீவேந்திரன்… 🙂

  Like

 3. //அழகான அனுபவ பகிர்வு அண்ணா. படத்தினை போல. படிக்கும் போதே மனதை பிசைகிறது…//

  நன்றி தம்பி….

  Like

 4. திரைப்படம் பார்த்து முடித்த பின் எனக்கு தோன்றிய உணர்வுகளை உங்களின் அழகிய எழுத்து நடையில் படித்தேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s