BUCKET LIST : எனது பார்வையில்

பணத்தின் உச்சத்தில் வாழும் ஜேக் நிக்கல்ஸனுக்கு சொந்தம், பந்தம், நல்லது, கெட்டது, வெந்தது, வேகாதது இத்யாதி சமாச்சாரங்கள் ஏதும் கிடையாது. ஜஸ்ட் பணம் தான் வாழ்க்கை. நாலுதடவை டைவர்ஸ் ஆன கிழம் அது.

சாதாரண வசதியுடன் வாழும் மார்கன் ஃப்ரீமென் குடும்பஸ்தன். பொறுப்பான கணவன், அப்பா. டிரேட் மார்க் மார்கென் கேரக்டர், த பிளாக் இண்டலிஜெண்ட் ! இருவரும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்குகிறார்கள். அது நிக்கல்சனுடைய மருத்துவமனை. நிக்கல்ஸன் கொண்டு வந்த காஸ்ட் கட்டிங் பிளான் அவருக்கே சிக்கலாய் மாறிவிடுகிறது. மார்கனுடன் ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல். இருவரும் நீ யாரோ, நான் யாரோ என்று இருக்கிறார்கள். மார்கன் ஒரு பேப்பரில் பக்கெட் லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கிறார். பக்கெட் லிஸ்ட் என்பது சாகும் முன் வாழ்க்கையில் என்னென்ன செய்யவேண்டுமெனும் விருப்பப் பட்டியல்.

போதாத காலம் ஐ..மீன் காலம் போதவில்லை. அவர்கள் இருவரும் உயிர் வாழப் போவது இன்னும் சில மாதங்கள் தான் எனும் திடுக் செய்தி தெரிய வருகிறது. இரண்டு பேரும் கேன்சர் நோயாளிகள். நிக்கல்சனின் உதவியாளர் வந்து உங்களை எரிக்கவா, புதைக்கவா ? பணத்தை என்ன செய்யப் போறீங்க என்றெல்லாம் கடுப்படிக்கிறார். இதெல்லாம் வேலைக்காவாது, மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது நம்ம விருப்பம் போல வாழ்வோமே என பணம் மட்டுமே இருக்கும் ஜேக் நிக்கல்சனும், விருப்பங்கள் மட்டுமே இருக்கும் மார்கனும் முடிவு செய்கிறார்கள்.

அப்புறமென்ன, பக்கெட் லிஸ்டை எடுத்துக் கொண்டு உலகம் முழுக்க சுற்றுகிறார்கள், ஸ்கை டைவிங் செய்கிறார்கள், ரேஸ் போகிறார்கள், பிரமிடு மேல் அமர்கிறார்கள், நமது தாஜ்மஹாலுக்கும் வந்து போகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஷங்கர், ஜீன்ஸ் பட பாட்டுக்காக சுற்றிய பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். பயணத்தில் இருவரும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது தான் தெரியவருகிறது நிக்கல்சன் உயிருக்கு உயிராய் வளர்த்த மகள் தந்தையை உதறிவிட்டுப் போன உண்மை. நிக்கல்சனுக்கு ஈகோ பிடிவாதம்.

உலகம் முழுக்க சுற்றினாலும் சந்தோசத்தை நீ தான் கண்டு கொள்ளவேண்டும். கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக் கொண்டு இறந்து போகிறார் மார்கன். நண்பனின் மறைவில் கலங்கி, மகளைப் பார்த்து உணர்ச்சிகரமாய் உறவைப் புதுப்பித்து தழுதழுக்கிறார் ஜேக் நிக்கல்ஸன். கடைசியில் அவர்களால் வர முடியாமல் போன ஒரே இடமான இமயமலையில் அவர்களுடைய சாம்பல் வைக்கப்படுகிறது.

ஒரு தெளிவான சிறுகதை போன்ற இந்தத் திரைப்படத்தை வலுவாக தூக்கி நிறுத்தியிருப்பது நிக்கல்சன் – மார்கென் எனும் இரண்டு மாபெரும் நடிகர்கள். வேறு யாருக்கும் எந்த வேலையும் இல்லை. படத்தின் வசனங்கள் மிகப்பெரிய பலம். கவித்துவமும், ரசனையும், நகைச்சுவையும் கலந்து வசீகரிக்கின்றன. இனிமேல் வெட்ட முடியாது எனுமளவுக்கு ஷார்ப் வசனங்கள். எந்தவிதமான திருப்பங்களும் இல்லாத ஒரு நதியின் பயணம் போன்ற திரைக்கதையும் காட்சியமைப்புகளும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட் என்று பாடத் தோன்றுகிறது. காரணம், இதோ சாகப் போகிறாய் என்று தெரிந்தபின் வலுக்கட்டாயமாய் இவர்கள் உருவாக்கிக் கொள்ளும் செயற்கை மகிழ்ச்சியாகவே பல காட்சிகள் தோன்றுகின்றன. இந்த இருவரையும் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் சிக்கல் இல்லை, படத்தை ஆஃப் பண்னி விட்டு பாலிமர் டிவியில் காமெடி பார்க்கப் போய்விடலாம். ஆனால் படத்தில் இவர்களுடைய நடிப்பு ஆளுமை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. 

வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது. மரணம் நெருங்கும் போது வாழ்க்கை எவ்வளவு அழகாய்த் தோன்றுகிறது.  ராப் ரெய்னரின் இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபின் ரொம்ப நாளாய் பேசாமலிருந்த யாருக்காவது போன் பண்ண வேண்டும் என ஒரு உந்துதல் எழுந்தால் வியப்பில்லை !

வாழ்க்கை அழகானது. அதை உணரும் நிமிடத்திலிருந்து !

 ஃ

 தமிழிஷில் வாக்களிக்க…