THE WEATHER MAN : எனது பார்வையில்…

“இன்றைய வானிலை” என கையையும் தலையையும் ஆட்டி ஒரு செயற்கைச் சிரிப்புடன் சிகாகோ தொலைக்காட்சியில் வானிலைச் செய்தி அறிவிப்பவர் நம்ம ஹீரோ நிக்கோலஸ் கேஜ். நகரில் அவர் ஒரு காமெடி கேரக்டர். நம்ம ஊரில் பிடிக்காதவர்கள் மீது தக்காளி, அழுகிய முட்டை எறிவது போல அவர் மீது ஃபாஸ்ட் புட் ஐட்டங்களை எறிந்து கலாய்க்கிறார்கள். பரீடோ, சிக்கன் நகெட்ஸ், பல்ப், ஆப்பிள் பை என சகட்டு மேனிக்கு வாங்கிக் கட்டுகிறார்.

@!#$ எனும் வார்த்தையை நிமிடத்துக்கு நான்கு முறை உச்சரிக்கும் கோபக்காரர் ஹீரோவுக்கு சிக்கல்களுடன் வளரும் இரண்டு பிள்ளைகள். தனது கோபத்துக்கு விலையாக சிதையும் திருமண பந்தம் ! ஒரே ஆதரவான பாசத்துக்குரிய தந்தைக்குக் கேன்சர், வாழ்க்கை இன்னும் சில மாதங்கள் மட்டுமே ! என குடும்ப வாழ்க்கைப் பக்கத்திலும் ஐயாவுக்கு துயரங்களின் தோரணமே.

ரசனையாவது திருப்தி தருகிறதா என்றால் அதுவும் இல்லை. புலிட்சர் விருது வாங்கிய அப்பனுக்குப் பிறந்தும் உருப்படியாய் ஒரு கதை எழுத முடியவில்லை எனும் ஆதங்கம் மனசு நிரம்ப. என “ஒரு தோற்றுப் போனவனின் கதை” என்று சப் டைட்டில் போடுமளவுக்கு தோல்விகள் கதாநாயகனுக்கு.

ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் இழந்தாலும் வாழ்க்கையை பாசிடிவாக அணுகுவதிலும், வாய்த்த வாழ்க்கையில் சில நல்ல குணாதிசயங்களைக் கற்றுக் கொள்வதிலும் வெற்றி பெறுகிறார் என படம் முடிகிறது.

தனது ஆதங்கத்தை மெலிதாக பின்னணிக் குரலால் ஒலிக்க விடும்போதெல்லாம் மனதைப் பிசைந்து விடுகிறார் நிக்கோலஸ். மனைவியும் பிள்ளைகளும் வாழும் வீட்டை வெளியிலிருந்து பார்த்து மௌனமாய் அழுவதிலும், தந்தையின்  மறைவு நெருங்குவதை அறிந்து உடைந்து போவதிலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

மைக்கேல் கெய்ன் தான் அழுத்தமான அப்பா ! சாகப் போகும் தனக்காய் ஒரு லைவ் அடக்க கூடுகை நடத்துவதில் நெகிழ்ச்சியளிக்கிறார். அந்த நிகழ்ச்சியிலும் கடுமையான மன உளைச்சல் அடையும் நிக்கோலஸ் பரிதாபத்தின் உச்சகட்டமாக நம்மை அச்சச்சோ சொல்ல வைக்கிறார்.

ஹோப் டேவிஸ் நொந்து போன மனைவி. நிக்கோலஸைப் பிரிந்து இன்னொரு திருமண வாழ்க்கைக்குப் போனபின்னும், தொலைக்காட்சியில் நிக்கோலஸைப் பார்க்கும் போது கண நேரம் உணர்வுகளைக் கண்களில் காட்டி அசத்துகிறார்.  

பைரட்ஸ் ஆஃப் த கரீபியன் புகழ் இயக்குனர் கோர் வெர்பின்ஸ்க்கி காட்சிப் படுத்துதலில் ரசிக்க வைக்கிறார். பனியில் ததும்பும் ஏரியைப் படம்பிடித்திருக்கும் ஒரு காட்சியே போதும் அவர் அழகியலுக்கு கட்டியம் கூற !

திடுக் திடுக் திருப்பங்களோ, “இறுதியில் எல்லாம் சுபம் சுபம் “ எனும் திருப்தியும் இந்தப் படத்தில் இல்லை. தோல்விகளையும், வெற்றிகளையும், இயலாமைகளையும் ஒருங்கே கொண்ட நம்மைப் போன்ற ஒரு யதார்த்தவாதியின் வாழ்க்கைப் பயணம் மட்டுமே.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….