காதலர் தினம் – இது புதுசு !

1. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோக்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !
2. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

3. காதலர் தின  பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

4. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ்  தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பலரால் நம்பப்படும் வரலாறு.

5. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

6. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

7. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

8. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

9. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

10. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான்.  இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான்.  இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

 ஃ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…