வம்பு என்ன விலை பாஸ் ?

ராபர்ட் எங் பெல்டன் (Robert Young Pelton)

“வம்பை விலை கொடுத்து வாங்குவது “ ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவர் விஷயத்துல அது நூறு சதவீதம் பொருந்தும். இவர் ஒரு சாகசப் பிரியர். இவரோட விருப்பம் காட்டுக்கு போறதோ, மிருகங்களோடு கபடி ஆடுவதோ அல்ல. இவருடைய பேவரிட் இடங்களைக் கேட்டால் நமக்கு உதறல் எடுக்கும். ஆப்கானிஸ்தான், அல் குவைதா, ஈராக், கொலம்பியா, லிபேரியா, என பட்டியல் நீள்கிறது.

இங்கெல்லாம் போய் தீவிரவாதக் குழுக்கள், கடத்தல் மன்னர்கள், ஒற்றர்கள் இவர்களிடமெல்லாம் நாசூக்காய் பேசி படம் பிடிப்பார். சின்னதா ஒரு இலை அசைந்தாலே தோட்டா வெடிக்கும் இடங்களுக்குக் கூட தில்லாகப் போவார். இவருடைய பயண அனுபவங்கள் தொலைக்காட்சியில் டேஞ்சரஸ் பிளேஸஸ் என ஒளிபரப்பானது. மக்கள் எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதைப் பார்க்க ஆரம்பித்தார்கள். நெட்டில் போட்ட போது கிளிக் ஒரு நாள் எட்டு இலட்சம் என எகிறியது.

இவருடைய பேட்டியின் ஹைலைட், இவர் ஆப்கானிஸ்தானில் போய் அல் குவைதா மெம்பர் ஒருவரையே கேமராவில் கிளிக்கி பேட்டியும் வாங்கியது தான். “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என முன்னுரை கொடுக்க எல்லா அருகதையும் இவரோட வீடியோக்களுக்கு உண்டு.

எங்கெங்கே தீவிரவாதம், கடத்தல் மன்னர்கள், வெடிகுண்டு உண்டோ அங்கெல்லாம் உற்சாகமாய் ஓடுவார். எப்போ வேண்டுமானாலும் பின் மண்டையில் ஒரு புல்லட் வெடிக்கலாம் எனும் சூழலில் தான் எப்போதும் இருப்பார். பலமுறை உயிரை மயிரிழையில் காப்பாற்றியும் இருக்கிறார். ஒருமுறை இவரைக் கடத்திக் கொண்டு போய் நொங்கெடுத்தார்களாம். இவருடைய சாகசப் பயணம் உலகெங்கும் மிகப் பிரபலம். கனடாக் காரரான இவரைப் பற்றி வெளியான பயோகிராபியே 13 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதென்ன பெரிய அல்குவைதா ? ராஜபக்சேயைப் பார்க்கச் சொல்லலாமா ?

Thanks : Ananda Vikatan