THE WEATHER MAN : எனது பார்வையில்…

“இன்றைய வானிலை” என கையையும் தலையையும் ஆட்டி ஒரு செயற்கைச் சிரிப்புடன் சிகாகோ தொலைக்காட்சியில் வானிலைச் செய்தி அறிவிப்பவர் நம்ம ஹீரோ நிக்கோலஸ் கேஜ். நகரில் அவர் ஒரு காமெடி கேரக்டர். நம்ம ஊரில் பிடிக்காதவர்கள் மீது தக்காளி, அழுகிய முட்டை எறிவது போல அவர் மீது ஃபாஸ்ட் புட் ஐட்டங்களை எறிந்து கலாய்க்கிறார்கள். பரீடோ, சிக்கன் நகெட்ஸ், பல்ப், ஆப்பிள் பை என சகட்டு மேனிக்கு வாங்கிக் கட்டுகிறார்.

@!#$ எனும் வார்த்தையை நிமிடத்துக்கு நான்கு முறை உச்சரிக்கும் கோபக்காரர் ஹீரோவுக்கு சிக்கல்களுடன் வளரும் இரண்டு பிள்ளைகள். தனது கோபத்துக்கு விலையாக சிதையும் திருமண பந்தம் ! ஒரே ஆதரவான பாசத்துக்குரிய தந்தைக்குக் கேன்சர், வாழ்க்கை இன்னும் சில மாதங்கள் மட்டுமே ! என குடும்ப வாழ்க்கைப் பக்கத்திலும் ஐயாவுக்கு துயரங்களின் தோரணமே.

ரசனையாவது திருப்தி தருகிறதா என்றால் அதுவும் இல்லை. புலிட்சர் விருது வாங்கிய அப்பனுக்குப் பிறந்தும் உருப்படியாய் ஒரு கதை எழுத முடியவில்லை எனும் ஆதங்கம் மனசு நிரம்ப. என “ஒரு தோற்றுப் போனவனின் கதை” என்று சப் டைட்டில் போடுமளவுக்கு தோல்விகள் கதாநாயகனுக்கு.

ஒவ்வொன்றாய் எல்லாவற்றையும் இழந்தாலும் வாழ்க்கையை பாசிடிவாக அணுகுவதிலும், வாய்த்த வாழ்க்கையில் சில நல்ல குணாதிசயங்களைக் கற்றுக் கொள்வதிலும் வெற்றி பெறுகிறார் என படம் முடிகிறது.

தனது ஆதங்கத்தை மெலிதாக பின்னணிக் குரலால் ஒலிக்க விடும்போதெல்லாம் மனதைப் பிசைந்து விடுகிறார் நிக்கோலஸ். மனைவியும் பிள்ளைகளும் வாழும் வீட்டை வெளியிலிருந்து பார்த்து மௌனமாய் அழுவதிலும், தந்தையின்  மறைவு நெருங்குவதை அறிந்து உடைந்து போவதிலும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

மைக்கேல் கெய்ன் தான் அழுத்தமான அப்பா ! சாகப் போகும் தனக்காய் ஒரு லைவ் அடக்க கூடுகை நடத்துவதில் நெகிழ்ச்சியளிக்கிறார். அந்த நிகழ்ச்சியிலும் கடுமையான மன உளைச்சல் அடையும் நிக்கோலஸ் பரிதாபத்தின் உச்சகட்டமாக நம்மை அச்சச்சோ சொல்ல வைக்கிறார்.

ஹோப் டேவிஸ் நொந்து போன மனைவி. நிக்கோலஸைப் பிரிந்து இன்னொரு திருமண வாழ்க்கைக்குப் போனபின்னும், தொலைக்காட்சியில் நிக்கோலஸைப் பார்க்கும் போது கண நேரம் உணர்வுகளைக் கண்களில் காட்டி அசத்துகிறார்.  

பைரட்ஸ் ஆஃப் த கரீபியன் புகழ் இயக்குனர் கோர் வெர்பின்ஸ்க்கி காட்சிப் படுத்துதலில் ரசிக்க வைக்கிறார். பனியில் ததும்பும் ஏரியைப் படம்பிடித்திருக்கும் ஒரு காட்சியே போதும் அவர் அழகியலுக்கு கட்டியம் கூற !

திடுக் திடுக் திருப்பங்களோ, “இறுதியில் எல்லாம் சுபம் சுபம் “ எனும் திருப்தியும் இந்தப் படத்தில் இல்லை. தோல்விகளையும், வெற்றிகளையும், இயலாமைகளையும் ஒருங்கே கொண்ட நம்மைப் போன்ற ஒரு யதார்த்தவாதியின் வாழ்க்கைப் பயணம் மட்டுமே.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

“குஷி” யான பங்கி ஜம்பிங்

எதுலப்பா திரில் இருக்குன்னு கண்ணுல விளக்கெண்ணை போட்டு தேடினவங்க கண்டுபிடிச்சது தான் இந்த ஜம்பிங். பங்கின்னா கயிறு, ஜம்பிங்னா குதிக்கிறது. கயிறைக் கட்டிட்டு குதிங்கறதைத் தான் ஸ்டைலா பங்கி ஜம்பிங்னு சொல்றாங்க. பயங்கர உயரமான ஒரு பாலமோ, அல்லது அணைக்கட்டுப் பகுதியோ, பள்ளத்தாக்கோ தான் இதுக்கு வசதியானது.

கால்கள் இரண்டையும் ஒரு கயிறில் கட்டி உங்களை பல நூறு அடி உயரத்தில இருந்து தள்ளி விடுவாங்க. கயிறு அறுந்திருமோ, அவுந்திருமோங்கற பயத்துலயே பாதி உயிர் போகும், கீழே தலைகீழா போய் சேருவோம். அதோட நிக்காது கயிறு மேலே வரும், நாமும் மேலே வருவோம். மறுபடியும் கயிறு கீழே போகும். ஐயோ, போதுமப்பா ஆளை விடுங்கன்னு நினைக்கற வரைக்கும் திரில் பின்னியெடுக்கும். இதற்குன்னு சர்டிபிகேட் வாங்கின நிறைய நிறுவனங்கள் உண்டு. அதை விட்டுட்டு  மேட் இன் சைனா மாதிரி லொடக்கு நிறுவனங்களிடம் போய் பங்கி ஜம்ப் பண்ணினீங்கன்னா அவ்ளோ தான். உங்களுக்கே அது ஒன்வே ஆயிடும்.

இப்படித் தான் 1997ல் லாரா பேட்டர் எனும் பெண் ஒரு டி.வி ஷோவுக்காக பங்கி ஜம்பிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாவம், விதி விளையாடியது. கயிறு தள்ளாடி அவிழ்ந்தது. கோரமாகப் பலியானார். இப்படி அங்கும் இங்கும் அடிக்கடி திகில் செய்திகள் வந்தாலும் இந்த விளையாட்டின் கிரேஸ் தீரவில்லை.  ஜேம்ஸ்பாண்ட் 1995ல் கோல்டன் ஐ படத்தில் ஆரம்பித்து வைத்தார். குஷி படத்துல குதித்த விஜய் வரை நிறைய ஹீரோக்கள் பங்கி ஜம்ப் பண்ணியிருக்காங்க.

தெகிரிய பார்ட்டிங்க கயிறைக் கட்டிட்டு குதிங்க ( கயிறை கால்ல கட்டுங்க பிளீஸ்) . உடான்ஸ் பார்ட்டிங்க, என்னப்பா பங்கி ஜம்பிங், எனக்கு மங்கி ஜம்பிங் கூட தெரியும் என சொல்லி நைஸா எஸ்கேப் ஆயிடுங்க.

Thanks : Ananda Vikatan

வாக்களிக்க விரும்பினால், கிளிக் போதும்…

BUCKET LIST : எனது பார்வையில்

பணத்தின் உச்சத்தில் வாழும் ஜேக் நிக்கல்ஸனுக்கு சொந்தம், பந்தம், நல்லது, கெட்டது, வெந்தது, வேகாதது இத்யாதி சமாச்சாரங்கள் ஏதும் கிடையாது. ஜஸ்ட் பணம் தான் வாழ்க்கை. நாலுதடவை டைவர்ஸ் ஆன கிழம் அது.

சாதாரண வசதியுடன் வாழும் மார்கன் ஃப்ரீமென் குடும்பஸ்தன். பொறுப்பான கணவன், அப்பா. டிரேட் மார்க் மார்கென் கேரக்டர், த பிளாக் இண்டலிஜெண்ட் ! இருவரும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்குகிறார்கள். அது நிக்கல்சனுடைய மருத்துவமனை. நிக்கல்ஸன் கொண்டு வந்த காஸ்ட் கட்டிங் பிளான் அவருக்கே சிக்கலாய் மாறிவிடுகிறது. மார்கனுடன் ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல். இருவரும் நீ யாரோ, நான் யாரோ என்று இருக்கிறார்கள். மார்கன் ஒரு பேப்பரில் பக்கெட் லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கிறார். பக்கெட் லிஸ்ட் என்பது சாகும் முன் வாழ்க்கையில் என்னென்ன செய்யவேண்டுமெனும் விருப்பப் பட்டியல்.

போதாத காலம் ஐ..மீன் காலம் போதவில்லை. அவர்கள் இருவரும் உயிர் வாழப் போவது இன்னும் சில மாதங்கள் தான் எனும் திடுக் செய்தி தெரிய வருகிறது. இரண்டு பேரும் கேன்சர் நோயாளிகள். நிக்கல்சனின் உதவியாளர் வந்து உங்களை எரிக்கவா, புதைக்கவா ? பணத்தை என்ன செய்யப் போறீங்க என்றெல்லாம் கடுப்படிக்கிறார். இதெல்லாம் வேலைக்காவாது, மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது நம்ம விருப்பம் போல வாழ்வோமே என பணம் மட்டுமே இருக்கும் ஜேக் நிக்கல்சனும், விருப்பங்கள் மட்டுமே இருக்கும் மார்கனும் முடிவு செய்கிறார்கள்.

அப்புறமென்ன, பக்கெட் லிஸ்டை எடுத்துக் கொண்டு உலகம் முழுக்க சுற்றுகிறார்கள், ஸ்கை டைவிங் செய்கிறார்கள், ரேஸ் போகிறார்கள், பிரமிடு மேல் அமர்கிறார்கள், நமது தாஜ்மஹாலுக்கும் வந்து போகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஷங்கர், ஜீன்ஸ் பட பாட்டுக்காக சுற்றிய பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். பயணத்தில் இருவரும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது தான் தெரியவருகிறது நிக்கல்சன் உயிருக்கு உயிராய் வளர்த்த மகள் தந்தையை உதறிவிட்டுப் போன உண்மை. நிக்கல்சனுக்கு ஈகோ பிடிவாதம்.

உலகம் முழுக்க சுற்றினாலும் சந்தோசத்தை நீ தான் கண்டு கொள்ளவேண்டும். கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக் கொண்டு இறந்து போகிறார் மார்கன். நண்பனின் மறைவில் கலங்கி, மகளைப் பார்த்து உணர்ச்சிகரமாய் உறவைப் புதுப்பித்து தழுதழுக்கிறார் ஜேக் நிக்கல்ஸன். கடைசியில் அவர்களால் வர முடியாமல் போன ஒரே இடமான இமயமலையில் அவர்களுடைய சாம்பல் வைக்கப்படுகிறது.

ஒரு தெளிவான சிறுகதை போன்ற இந்தத் திரைப்படத்தை வலுவாக தூக்கி நிறுத்தியிருப்பது நிக்கல்சன் – மார்கென் எனும் இரண்டு மாபெரும் நடிகர்கள். வேறு யாருக்கும் எந்த வேலையும் இல்லை. படத்தின் வசனங்கள் மிகப்பெரிய பலம். கவித்துவமும், ரசனையும், நகைச்சுவையும் கலந்து வசீகரிக்கின்றன. இனிமேல் வெட்ட முடியாது எனுமளவுக்கு ஷார்ப் வசனங்கள். எந்தவிதமான திருப்பங்களும் இல்லாத ஒரு நதியின் பயணம் போன்ற திரைக்கதையும் காட்சியமைப்புகளும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட் என்று பாடத் தோன்றுகிறது. காரணம், இதோ சாகப் போகிறாய் என்று தெரிந்தபின் வலுக்கட்டாயமாய் இவர்கள் உருவாக்கிக் கொள்ளும் செயற்கை மகிழ்ச்சியாகவே பல காட்சிகள் தோன்றுகின்றன. இந்த இருவரையும் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் சிக்கல் இல்லை, படத்தை ஆஃப் பண்னி விட்டு பாலிமர் டிவியில் காமெடி பார்க்கப் போய்விடலாம். ஆனால் படத்தில் இவர்களுடைய நடிப்பு ஆளுமை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. 

வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது. மரணம் நெருங்கும் போது வாழ்க்கை எவ்வளவு அழகாய்த் தோன்றுகிறது.  ராப் ரெய்னரின் இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபின் ரொம்ப நாளாய் பேசாமலிருந்த யாருக்காவது போன் பண்ண வேண்டும் என ஒரு உந்துதல் எழுந்தால் வியப்பில்லை !

வாழ்க்கை அழகானது. அதை உணரும் நிமிடத்திலிருந்து !

 ஃ

 தமிழிஷில் வாக்களிக்க…

காதலைச் சொல்லணுமா ? கொஞ்சம் ஜாலி ஐடியாஸ்…

இது வேலண்டைன் காலம் !..

1. காதலைச் சொல்ல பூக்கள் பயன்படுவது பல்லாயிரம் காலப் பழசு. ஆனால் அதை வெச்சே காலத்துக்கேற்ப ஜாலியாகவும், ரொமாண்டிக்காகவும், ஹைடெக் ஆகவும் காதலைச் சொல்லலாம். இந்த ஐடியாவை டிரை பண்ணி பாருங்கள். ஒரு கொத்து ரோஜாப்பூக்களை எடுத்துக் கொண்டு உங்கள் ஏஞ்சல் முன்னால் நீட்டுங்கள். அவள் குழப்பமாய்ப் பார்க்கும் போது,”ஒண்ணுமில்லை டியர், நீ எவ்ளோ அழகுன்னு இந்தப் பூக்களுக்குக் காட்டினேன்” என்று கவிதையாய்ச் சொல்லிப் பாருங்கள். உங்கள் ரசனையிலேயே சறுக்கி விட்டால் வேலண்டைன் ஜாலி தான். 

2. சட்டென்று அவளிடம் போய் ‘ஐயோ, உங்க கால் வலிக்குதா ? “ என்று கேளுங்கள்.  எவண்டா இவன் என் கிட்டே வந்து கால் வலிக்குதா என்று கேட்கிறானே என்று அவள் தலையைச் சொறிவாள். “இல்லை என்னோட சிந்தனைகள் முழுக்க முழுக்க கொஞ்ச நாளா நீங்க தான் ஓடிட்டே இருக்கீங்க. அதான் கேட்டேன்” என்று சொல்லுங்கள். “ஆமா.. உன்னை விட்டு ரொம்ப தூரமா போகணும்ன்னு தான் தலை கால் புரியாம ஓடிட்டே இருந்தேன் என்று பார்ட்டி சொன்னால் உடனே எஸ்கேப் ஆகி விடுங்கள். சிரித்தால் அந்த நூலைப் பிடித்துக் கொண்டு பட்டம் விடுங்கள்.
 

3. “எக்ஸ்கியூஸ் மி, உங்க கிட்டே மேப் இருக்கா ?” என்று அவளுடைய கண்களைப் பார்த்துக் கொண்டு காதல் மிதக்க மிதக்க கேளுங்கள். “மேப்பா ? எதுக்கு ?” என அவள் தனது மருண்ட விழிகளை உருட்டும் போது, “இல்லே.. உங்க கண்ணுக்குள்ள நான் தொலைஞ்சு போயிட்டேன். எப்படி வெளியே வர்றதுன்னு தெரியல.. அதான்…’ என்று வசீகரியுங்கள். முறைத்தால் சுற்றுலாப் பயணி போல சட்டென்று வேறு எதையாவது பார்க்க ஆரம்பித்து விடுங்கள். சிரித்தால் “கண்ணே கலைமானே…” என பாட ஆரம்பியுங்கள்.
 
4. உங்கள் அழகு தேவதை ஸ்டைலாக தனியே நிற்கும் போது அருகில் செல்லுங்கள். “ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க” என்று சொல்லி அவளை மேலும் கீழும் பாருங்கள். “என்ன ஆச்சரியம்..” என அவள் உள்ளுக்குள் ஆச்சரியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு சர்வ சாதாரணமாய்க் கேட்பாள். “இல்லே…. தேவதைகள் தரையில கூட நடக்குமா ? சொர்க்கத்துல தானே இருக்கும்” என்று சொல்லுங்கள். பார்ட்டி வெட்கப் பட்டால் ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்று பொருள். மாறாக “ எத்தினி வாட்டி மேன் நீ சொர்க்கத்துக்கு போயிருக்கே” என திருப்பிக் கேட்டால் சொர்க்கமோ நரகமோ ஆளை விடுடா சாமின்னு ஓடி விடுங்கள்.

5. உங்கள் ஹைடெக் கிளி ஹெட்போனில் பாட்டை ரசித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் போது அருகே செல்லுங்கள். “ஹாய்” என்று சொல்லுங்கள். மெதுவாக வால்யூமைக் குறைத்துக் கொண்டே “வாட் ?” என கேட்பவளிடம் சொல்லுங்கள். “உனக்கு முதல் பார்வையிலேயே காதல் வரும் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லேன்னாலும் பரவாயில்லை, இன்னொரு வாட்டி வரேன் ? என்ன சொல்றீங்க ? ” என்று கேளுங்கள். பார்ட்டி வால்யூமை சகட்டு மேனிக்கு ஏற்றினால் “ப்ப்ப்ப்ப்போடா ..” என்று அர்த்தம். காதிலிருந்து மெல்ல ஹெட்போனைக் கழற்றினால் ஆஹா.. என்று அர்த்தம்.

6. புத்தகத்தைப் படித்துக் கொண்டு கற்பனை உலகில் மூழ்கி இருக்கும் உங்கள் ஒருதலைக் காதலியிடம் செல்லுங்கள். “எக்ஸ்கியூஸ் மி… உங்க கிட்டே பேண்ட் எய்ட் இருக்கா ? பிளீஸ்… ” என்று கேளுங்கள். நான் என்ன மெடிக்கஸ் ஸ்டோர்ன்னு நினைச்சியாடா மவனே என்பது போல ஒரு லுக் வரும். உடனே “உங்களைப் பார்த்ததும் காதலில் விழுந்தேன். அடிபட்டிடுச்சு.. அதான் கேக்கறேன்” என்று சொல்லிப் பாருங்கள். தர்ம அடி விழுந்தால் நான் பொறுப்பல்ல. பட், ஒர்க் அவுட் ஆனால் மறக்காம டிரீட் வையுங்க, கலந்துக்கறேன்.
 
7. பார்ட்டி உங்களோட சக தோழி என்றால் சமாச்சாரம் ரொம்ப சிம்பிள். “ஹாய்.. எனக்கு தூங்கவே புடிக்கல” என்று ஒரு இசை போல சொல்லுங்கள். “ஏண்டா ? உடம்பு சரியில்லயா ?” என்று பார்ட்டி கேட்கும். “அப்படியில்ல, கனவை விட நிஜம் அழகா இருந்தா நான் ஏன் தூங்கணும்” என்று சொல்லி விட்டு சட்டென அவள் கண்ணைப் பாருங்கள். அவள் கண்ணில் வெட்கம் தெரிந்தால் வலையில் சிக்கியது விண்மீன் என்று அர்த்தம். கோபம் தெறித்தால், ஐ..மீன்… இந்த இயற்கை அவ்வளவு அழகு என்று ஏதாவது சொல்லி எக்கச்சக்கமாக வழியுங்கள்.

8. லவ் சொல்லிச் சொல்லி ஏத்துக்காத பொண்ணு கிட்டே மல்லாடறீங்களா ? இந்த ஐடியாவை டெஸ்ட் பண்ணி பாருங்க. பார்ட்டி கிட்டே பவ்யமா போய் “ நான் உன்னோட கண்ணில் உள்ள ஒரு கண்ணீர் துளியா இருந்திருக்கலாம். உன்னோட கண்ணில் பிறந்து, கன்னம் நடந்து, உதட்டில் விழுந்து உயிரை விட்டிருப்பேன். ஒருவேளை கனவில் மட்டும் தான் நீ வருவேன்னா… நான் காலம் முழுதும் முழிக்காம இருக்கவும் நான் ரெடி ” என்று செண்டிமெண்ட் டிரை பண்ணிப் பாருங்கள். அடித்தால் ஜாக்பாட். இல்லையேல் இன்னொரு ஐடியா. நான் சொல்லி நீங்க நிப்பாட்டவா போறீங்க ?

9. புதுசா ஒரு பொண்ணைப் பாக்கறீங்க காலேஜ்ல. சட்டென்று மனசுக்குள்ள ஒரு நாலு கிலோ மின்னல் வெடிச்சு சிதறுதுன்னு வெச்சுக்கோங்க. கொஞ்சம் பீட்டர் வுடுங்க. “ஹேய்.. ஆர் யூ ஃபிரீ… ?” என்று ஆங்கிலத்தில் கொஞ்சுங்கள். “யா…” என்று ஒரு காபி குடிக்கும் ஆசையில் அவள் சொன்னால், “ஐ..மீன், ரெஸ்ட் ஆஃப் யுவர் லைஃப் ?” என்று ஒரு கொக்கியை வீசுங்கள். அவளுடைய பார்வையிலேயே தெரிந்து விடும் அவளுக்குத் தேவை காபியா கல்யாணமா என்பது.
 
10.  “ஹேய் உனக்கொரு விஷயம் தெரியுமா” என்று அந்தப் பெண்ணிடம் கேளுங்கள். கண்ணில் ரொம்ப ஆச்சரியமும், வியப்பும் நிரம்பி இருக்கட்டும். “என்ன… என்ன.. என்று அவள் கேட்பாள் “ இங்கிலீஷ் எழுத்துக்களில யூவையும், ஐ யையும் பக்கத்துல பக்கத்துல வெச்சுட்டாங்களாம்… ஏன்னா, யூ & ஐ… ஹி..ஹி..” என்று சொல்லுங்கள். இது ஏதோ ஒரு உலக மஹா ஜோக் போல ஆளு சிரிச்சா பார்ட்டி அவைலபிள் ன்னு அர்த்தம். “எத்தினி வாட்டிடா எல்கேஜில தோத்தே…” ன்னு திருப்பி கேட்டா “கிளம்பு காத்து வரட்டும்…” ன்னு அர்த்தம்

 Thanks : emails & Jokes

தமிழிஷில் வாக்களிக்க…

ஹாலிவுட் ATONEMENT : எனது பார்வையில்

கொஞ்சமும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்கும் சில படங்கள் உயிரை உலுக்கி எடுத்து விடும்.  அட்டோன்மெண்ட் திரைப்படம் அப்படிப்பட்ட ஒன்று என்று தைரியமாய்ச் சொல்லலாம். 

ஆத்மார்த்தமான ஒரு அழகிய காதல், யார் மீதும் எந்தப் பிழையும் இல்லாமல், ஒரு சிறுமியின் தவறான புரிதலால் உடைந்து போகிறது. 1935களில் இங்கிலாந்தில் நடக்கிறது கதை. செல்வத்தின் உச்சத்தில் இருக்கும் வீடு கதாநாயகியினுடையது. அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் மகன் தான் வசீகரமான கதா நாயகன். இருவருக்குள்ளும் ஒளிந்து விளையாடுகிறது காதல்.

ஒரு நாள் சன்னல் வழியே ஒரு காட்சியைப் பார்க்கிறாள் நாயகியின் தங்கை. நம்மைப் போலவே, அவளும் அந்த நிகழ்வை முழுக்க முழுக்க தவறாய்ப் புரிந்து விடுகிறாள். போதாக்குறைக்கு தொடர்ச்சியாய் நடக்கும் அடுத்த இரண்டு நிகழ்வுகளும் கூட அவளுக்கு நாயகன் மீது தவறான அபிப்பிராயத்தையே ஏற்படுத்துகின்றன. தன் அக்காவுக்கு நல்லது செய்கிறோம் பேர்வழி என செய்யாத ஒரு பாலியல் தப்புக்கு சாட்சியாய் மாறி நாயகனை சிறைக்கு அனுப்புகிறாள். போர்க்காலம் வருகிறது. போர்க்களங்களில் நாயகனும், செவிலியாய் நாயகியும் என பிரிந்தே துயருறுகிறார்கள்.

தான் செய்தது தப்பு என்று சிறுமி உணரும் போது வாழ்க்கை எல்லாவற்றையும் கலைத்து பிய்த்து எறிந்திருக்கிறது. தீராத குற்ற உணர்வு கொத்தித் தின்ன, மன்னிப்பும் கிடைக்காமல் ஏங்குகிறாள் தங்கை.

காதலியிடம் செய்து கொடுத்த “மீண்டும் வருவேன்” எனும் சத்தியம் காதலனுக்கு உத்வேகமாய் இருக்கிறது. ஆனால் ஊனுடல் வலுவற்றதல்லவா ? போர்க்களத்திலிருந்து கிளம்ப வேண்டிய கடைசி நாளில் உயிரை விடுகிறான் நாயகன். கைகளில் காதலியின் பிரியங்கள் கடிதங்களாக. காதலி இன்னோர் விபத்தில் அன்றே இறந்து விடுகிறாள். துயரத்தின் கடைசித் துளியாய் அவர்களுடைய காதல் சின்னங்கள் மட்டும் மிஞ்சுகின்றன.

தங்கை சிறுவயதிலிருந்தே நன்றாக எழுதுவாள். துயரங்கள் துரத்த அவள் எழுதிக் கொண்டே இருக்கிறாள். மனதின் மூலையில் உறுத்திக் கொண்டே இருக்கும் நிஜக் கதையை தனது கடைசிக் கதையாக “அட்டான்மெண்ட்” என எழுதி முடிக்கிறாள். உண்மையில், முதலில் எழுத ஆரம்பித்து கடைசியாக முடிக்கிறாள் அந்த நாவலை. அந்த நாவலில் நாயகனும், நாயகியும் இணைகிறார்கள். ஆனந்தமாய் இருக்கிறார்கள். “நான் அவர்களுடைய ஆனந்தத்தை கெடுத்து விட்டேன். கதையிலாவது அவர்களை வாழவைக்கிறேன்” என கண்ணீருடன் பேட்டி கொடுக்க படம் முடிகிறது.

ஸ்தம்பித்துப் போன மனநிலையில் நீண்டநேரம் இருக்க வைத்த படம் இது. படத்தின் முதல் சிறப்பம்சம் நடிப்பு ! போட்டி போட்டுக் கொண்டு நடித்து இந்தப் படத்தை உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள். அதிலும் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்து ஆஸ்கரை அள்ளிக் கொண்டு போன வெனீசா ரெட்கிரேவ் நடிப்பு பிரமிப்பு !

சின்னச் சின்ன வியப்புத் திருப்பங்கள், பிரமிப்பூட்டும் காட்சியமைப்புகள், திடுக்கிட வைக்கும் சிறு சிறு பிளாஷ்பேக்ஸ் என ஒரு புதுமையான அனுபவம் இந்தத் திரைப்படம். ஆடை வடிவமைப்புகளில் மிரட்டி விட்டார்கள். குறிப்பாக கதாநாயகி ஒரே ஒரு காட்சியில் அணிந்து வரும் பச்சை நிற ஆடை இன்னும் கண்களுக்குள் !

இந்தத் திரைப்படத்தின் இயக்கம் மனதை வருடுகிறது. சஸ்பென்ஸ்கள் உடையும் சில காட்சிகள் ரொம்பவே சுவாரஸ்யம். மெக் எவன்ஸ் நாவலின் அடிப்படையில் அமைந்த இந்தப் படத்தைஇயக்கியிருப்பது ஜோ ரைட்.  

சில படங்கள் மனதைத் திருடும். இந்தப் படம் தூக்கத்தையும் சேர்த்தே திருடுகிறது. 

தமிழிஷில் வாக்களிக்க…