கொல்லுங்க பிளீஸ்….

 

1966ம் ஆண்டு ! மும்பையின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்து வந்தாள் அருணா ஷான்பாக் எனும் இளம் பெண். வசீகரிக்கும் அழகிலும், நேர்மையான பணியிலும் வலம் வந்த அவளுக்கு மருத்துவமனையில் மிக நல்ல பெயர். 1973ம் ஆண்டு நவம்பர் 11ம் தியதி. நாளை முதல் திருமண விடுப்பில் செல்ல இருக்கும் உற்சாகத்தில் இருந்தாள் அவள். அன்று வேலை முடிந்து மருத்துவமனையின் ஒரு அறையில் ஆடைமாற்றிக் கொண்டிருந்த போது விதி விளையாடியது. அந்த மருத்துவமனையில் வார்ட் பாய் ஆக இருந்த சோகன்லால் வால்மீகியின் காமக் கண்களில் விழுந்தாள் அவள். 

ஆடைமாற்றிக் கொண்டிருந்தவளின் அறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அடக்கி அவளைப் பாலியல் வன்முறை செய்ய எத்தனித்தான். அவளுக்கோ அது மாதவிடாய் காலம். அப்போதாவது விட்டதா அந்த மிருகம் ? அவளை குப்புறக் கவிழ்த்து கழுத்தில் நாய்ச் சங்கிலியால் நெரித்து பின்புறம் வழியாக புணர்ந்து தன் வெறியை முடித்துக் கொண்டது. கழுத்தில் சுற்றிய சங்கிலி அழுத்தியதில் அருணாவின்  கழுத்து நெரிபட்டு சுவாசக் குழாய் உடைபட்டு மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லும் பாதை நாசமாகி அவளுடைய மூளை இறந்தே போய் விட்டது.

அந்த வெறி பிடித்த விலங்கின் சில நிமிட வெறி அவளைக் கோரமான கோமோ நிலைக்குத் தள்ளியது. அன்றிலிருந்து இன்று வரை நீண்ட நெடிய 36 வருடங்களாக அதே மருத்துவமனையில் கோமோ நிலையில் கிடக்கிறார் அவர் எனும் செய்தி அதிர வைக்கிறது. தினமும் ஐந்து தடவை அவளுடைய அறைக் கதவு திறக்கப்படும். விழுங்க முடியாத அவளுடைய தொண்டையில் நீர் ஆகாரம் செலுத்தப்படும். அவ்வளவு தான். 

அவளைப் பலாத்காரம் செய்து இந்த நிலைக்கு ஆளாக்கியவன் ஏழு வருட காலம் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தும் முப்பது வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் அவனால் பாதிக்கப்பட்ட அவள் முப்பத்து ஆறு ஆண்டு காலமாக வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இருட்டு அறைகளுக்குள் கிடக்கிறாள்.

இனிமேல் பிழைக்கவே முடியாது எனும் நிலையில் உள்ளவர்களை நிம்மதியாய் சாக அனுமதிப்பதைக் கருணைக் கொலை என்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கருணைக் கொலை செய்வதை எந்த நாடும் சட்டமாக்கவில்லை. நெதர்லாந்து மட்டும் மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பரிந்துரை இருந்தால், கருணைக் கொலையை அனுமதிக்கிறது. கருணைக் கொலை எனும் பெயரில் தப்பு ஏதும் நடந்து விடக் கூடாதே எனும் அதீத எச்சரிக்க உணர்வு உலகெங்கும் இருப்பதையே இது தெரிவிக்கிறது.  

அருணா ஷான்பாக் நிலமையும் அது தான். அவரைக் கருணைக் கொலை செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை. பல முறை விண்ணப்பித்தும் நீதிமன்றம் அவற்றை வாசலிலேயே நிராகரித்து அனுப்பி விட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவளுடைய பாதுகாவலரும் எழுத்தாளருமான பிங்கி விரானி அளித்துள்ள புதிய மனு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றம் விண்ணப்பத்தை முதன் முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிமன்றம் இயற்கை மரணத்தையே ஆதரிக்கிறது. அருணாவைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு வழங்காமல் இருந்தால் இயற்கை மரணம் நிகழ்ந்து விடும் என்பது தான் உண்மை. 

அருணாவுக்காக வாதாடிய சேகர் நாபேட் அருணாவின் மரணத்தை அனுமதிக்க வேண்டுமென்று உருக்கமாகவும், ஆழமாகவும் வாதாடினார்.

“வாழ்வது மனித உரிமை என்று சொல்லி தயவு செய்து இதை நிராகரிக்காதீர்கள். அருணாவைப் பாருங்கள். ஒரு மிருகம் கூட இந்த நிலையில் இருக்க முடியாது. இது மனித உரிமை மீறல் என்று சொல்லவே முடியாது. அவர் இயல்பு நிலைக்கு வர வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தால் கூட அவரால் வாழ்க்கை நடத்தவே முடியாது. முப்பத்து ஆறு ஆண்டு கால நீண்ட நெடிய மௌனத்தை நீதிமன்றம் கலைக்க வேண்டும். அவருடைய நிலமையை ஆராய்ந்து மரணத்தை அனுமதிக்க வேண்டும்”  என அவர் உருக்கமாய் வாதாடியதைக் கேட்டு உச்ச நீதிமன்றமே கதிகலங்கிப் போய்விட்டது.

நிலமையை ஆராய்ந்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனைக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முடிவுக்கான துவக்கம் அளிப்பது இதுவே முதல் முறை. 

“அருணாவின் கருணைக் கொலை பற்றி நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்”  என்கிறார் கிங் எட்வர்ட் மருத்துவமனையின் டீன் டாக்டர் சஞ்சய் ஓக். “மருத்துவமனையிலுள்ள நர்ஸ்கள் அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் அவரைப் பராமரித்தோம். இன்னும் பராமரிப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை நீதிமன்றம் எடுக்கட்டும்”  என்கிறார் அவர். அவர் அப்படிச் சொன்னாலும் மருத்துவமனை அருணாவுக்கு நல்ல சிகிச்சையையும், மருத்துவ உதவிகளையும் செய்யவில்லை எனும் குற்றச்சாட்டும் பலமாகவே உலவுகிறது.

கருணைக் கொலையை சட்டம் அனுமதிக்காது தான். ஆனாலும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனதன் தன்மையில் ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பதே சரியான வழிமுறையாய் இருக்க முடியும். சட்டம் இருக்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாய் கதவடைப்பதும், குருட்டுத் தனமாய் அனுமதிப்பதும் எல்லா விஷயத்திலும் ஆபத்தானவையே. இப்போது மனித உரிமைகள் கமிஷனும், ஊடகங்களும் அருணாவின் மரண உரிமைக்கு ஆதரவு அலையை எழுப்பி வருகின்றன.

கைகளெல்லாம் வளைந்து, எலும்புகளெல்லாம் வலுவிழந்து, பற்களெல்லாம் அழுகி வீழ்ந்து அகோரமாகக் கிடக்கிறாள் அருணா. அவளுக்கு வலிக்குமா ? முப்பத்து ஆறு ஆண்டுகாலமாக “என்னைக் கொன்று விடுங்கள்” என கதறிக் கொண்டிருக்கிறாளா ? வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கிடக்கும் அவளுடைய மனதில் என்ன நினைவுகள் ஓடுகின்றன ? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மனம் துடிப்பதையே நிறுத்தி விடுகிறது.

அவளுக்கு வாழ்க்கை மறுக்கப்பட்டு விட்டது, மரணமேனும் பரிசளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத்தை நேசிக்கும் அனைவரின் விருப்பமும்.

வாக்களிக்க விரும்பினால்

27 comments on “கொல்லுங்க பிளீஸ்….

 1. படித்ததும் கண்கள் பனித்து விட்டன….
  ஆண்டவா! இப்படியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதென பிரார்த்தித்தேன்!… மனம் பதைபதைக்கிறது…
  மனதையும் உணர்வுகளையும் உலுக்கி எடுத்துவிட்டது….
  மனதுக்குள் அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ…????
  அவருக்கு நிலையான நிம்மதி கிடைக்கட்டும்!
  அவருக்காகப் பிரார்த்திக்க,
  எமக்கு இவ்விடயத்தை வெளிச்சத்துக்கு எடுத்துவந்த
  சேவியர் உங்களுக்கு என் நன்றிகள்!

  Like

 2. சில நிமிட இன்பத்துக்காக வாழ்கையே தொலைத்தவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு சோகக் கதை.

  அருணாவை இந்த நிலைக்கு தள்ளியவனுக்கு தவறாக 7 வருட சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றமா திரும்பவும் ஒரு சரியான தீர்ப்பை வழங்க போகுது ? முதலில் சோகன்லால் வால்மீகியை கருணைக் குலை செயுங்கள். பாவம் புத்தி இன்றி இந்த உலகத்தில் வாழ அருகதை யற்று மிருகமாக வாழ்கிறான்.

  Like

 3. நீதி மன்றம் கருணைக்கொலைக்கு உத்தரவிடுவது தான் நன்று…………உலகம் இப்படி பட்டவர்களை ….கல்லெறிந்து அணு அணுவாக ( அந்த கயவனை) கொள்ளவேண்டும் ….

  Like

 4. சில‌ த‌விர்க்க‌ முடியாத‌ சூழ்நிலைக‌ளில் க‌ருணைக் கொலையை அனும‌திக்க‌ வேண்டும்.

  Like

 5. //சில‌ த‌விர்க்க‌ முடியாத‌ சூழ்நிலைக‌ளில் க‌ருணைக் கொலையை அனும‌திக்க‌ வேண்டும்.//
  உண்மை.

  Like

 6. //நீதி மன்றம் கருணைக்கொலைக்கு உத்தரவிடுவது தான் நன்று…………உலகம் இப்படி பட்டவர்களை ….கல்லெறிந்து அணு அணுவாக ( அந்த கயவனை) கொள்ளவேண்டும் //

  நிகழ்ந்தது மகா சோகம்… இந்த உண்மை வெளிவராமலேயே இருந்தது அதை விடப் பெரிய சோகம்

  Like

 7. நெஞ்சை நெருடும் பதிவு. ஏன் கருணைக் கொலைக்கு நீதிமன்றத்தை எதி்ர்பார்த்து காத்திருக்க வேண்டும். மனிதாபிமானம் உள்ள எந்த மருத்துவரும் அதை மறைமுகமாக செய்யலாம் தானே.

  Like

 8. //வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கிடக்கும் அவளுடைய மனதில் என்ன நினைவுகள் ஓடுகின்றன ? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மனம் துடிப்பதையே நிறுத்தி விடுகிறது.//

  உண்மை .

  யாருக்குமே இப்படிப்பட்ட கொடுமை நடக்க கூடாது .

  Like

 9. //மனிதாபிமானம் உள்ள எந்த மருத்துவரும் அதை மறைமுகமாக செய்யலாம் தானே//

  நியாயமான கேள்வி தான் !

  Like

 10. அவருக்கு வலிக்குமா தெரியாது,
  எனக்கும் இதை வாசிப்பவருக்கும் நிச்சயம் வலிக்கும்!.

  Like

 11. //அவருக்கு வலிக்குமா தெரியாது,
  எனக்கும் இதை வாசிப்பவருக்கும் நிச்சயம் வலிக்கும்!.//

  நிச்சயமா நந்து !

  Like

 12. எனக்கு மனது வலித்தது.

  அருணா ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.

  இல்லையென்றால் சோகன்லால் இயற்கையாக
  சாக மாட்டான்!

  Like

 13. அவளுக்கு வாழ்க்கை மறுக்கப்பட்டு விட்டது,
  மரணமேனும் பரிசளிக்கப்பட வேண்டும்.
  -மனவலியுடன் என் கருத்து.

  Like

 14. //அருணாவை இந்த நிலைக்கு தள்ளியவனுக்கு தவறாக 7 வருட சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றமா திரும்பவும் ஒரு சரியான தீர்ப்பை வழங்க போகுது ?//
  -ரிசாத் சரியான கேள்வி

  Like

 15. ரொம்ப கொடுமா சார்.

  சில சமயம் ஆணாய் பிறந்தமைக்காக வெக்கப்பட்டிருக்கிறேன்.

  காமம் தலைக்கேறி, ஒரு பெண்ணை இந்த நிலைக்கு ஆக்கியவன் என்னைப் போல ஒரு ஆண் எனும் போது,. இப்போதும் வலிக்கிறது.

  ஆனால் இயற்கை இச்சையை ஊற்றெடுக்க வைக்கிறதே!. நாளும் எத்தனை எத்தனையோ அருணா ஷான்பாக் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களே!.

  நாய்களைப் போல இவர்களைப் பிடித்து நறுக்கி விடலாமா.

  Like

 16. ஜெகதீஷ்வரன்… உங்கள் கோபம் அனைவருக்குள்ளும் இருந்தால் சமூகம் நலமாகும் !

  Like

 17. //அவருக்கு வலிக்குமா தெரியாது,
  எனக்கும் இதை வாசிப்பவருக்கும் நிச்சயம் வலிக்கும்!.//

  சகோதரர் நந்து, நிதர்சனமனா உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

  பதிவிற்கு மிக்க நன்றி!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s