நூல் : மேற்குலக ஓவியர்கள் – எனது பார்வையில்…

 ஓவியங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் இல்லை என்றாலும் அது மீது ஒரு அபரிமிதமான காதல் எனக்குண்டு. ஓவியங்கள் குறித்த நூல்களைத் தேடித் தேடி வாசிப்பதற்கு அதுதான் முழு முதல்க் காரணம்.

ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதில் கலக்கும் ஒவ்வோர் துளியிலும் ஓவியனின் மனசும் கரைந்திருப்பதாகத் தோன்றும் எனக்கு. “ஒரு பொருளை எப்படிப் பார்க்கிறேனோ அப்படி வரைவதில்லை, எப்படி சிந்திக்கிறேனோ அப்படியே வரைகிறேன்” எனும் பிக்காஸோவின் வார்த்தைகள் ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒலிக்கும்.

கவிதைகளோடு எனக்கு நெருங்கிய நேசம் உண்டு. கவிதைகளின் கூறுகளையும், தன்மைகளையும், அதன் உட்பொருட்களையும் ரசிக்கும் அவியாத தாகமும் உண்டு. சினிமாப் பாடல்களிலும், கானாப் பாடல்களிலும், ஏன் பஸ்ஸில் கல்லூரி இளைஞர்கள் மெட்டமைத்துப் பாடும் பாடல்களில் கூட கவித்துவம் ரசிக்கும் வெறி எனக்குண்டு. அந்த கவிதையின் ரசனை தான் என்னை ஓவியங்களின் பிரியனாக்கியதோ எனும் வியப்பும் எனக்கு உண்டு. ஒருவகையில் ஓவியம் என்பது படமாக்கப்பட்ட கவிதையே !

இன்றைக்கு ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் ரொம்பவே அருகி வருகின்றன. அதுவும் பிறநாட்டு ஓவியங்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஓவியர்களிடையே மங்கி வருகிறது. ஓவியங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது என்பது ஒரு காரணம். அப்படியே எழுதினாலும் அதன் புனிதம் கெடாமல் பதிப்பிக்க தாகமுள்ள பதிப்பகங்கள் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

தற்கால ஓவியர்களில் அந்தப் பணியை தன் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவர்கள் வெகு சிலர். கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் இந்தப் பணியைச் செய்கிறார். ஆனால் அவருடைய நூல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே வருகின்றன. “தாத்தா ஆனதுக்கப்புறம் ஓடியாடும் ஓவியங்களே என் வாழ்க்கையாகிப் போச்சு” என்று பேரனைச் சுட்டிக் காட்டிச் சொன்னார் சென்ற முறை அவரைச் சந்தித்த போது.

ஓவியங்கள் வரைவதுடன் நின்று விடாமல் அதன் கூறுகளையும், தன்மைகளையும் எழுத்திலும், பேச்சிலும் கொண்டு வருவதில் இன்றைக்கு முனைப்புடன் செயலாற்றி வருபவர் ஓவியர் நண்பர் புகழேந்தி அவர்கள். ஓவியங்களோடு வார்த்தைகளும் வசப்பட்டிருப்பது அவருடைய பலம். அவருடைய மேற்குலக ஓவியங்கள், வண்ணங்களும் வரலாறும் எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

ஐரோப்பிய ஓவியர்களைப் பற்றியும் அவர்களுடைய ஓவியங்களைப் பற்றியுமான நூல் இது. ஓவியங்களைப் பற்றிப் பேச ஓவியரால் தான் முடியும் எனும் கூற்று எத்தனை ஆத்மார்த்தமானது என்பதை தனது ஒவ்வொரு வாக்கியத்திலும் நிரூபிக்கிறார் ஆசிரியர்.

ஒரு ஓவியம் எப்படி உருவானது, அதை எத்தனை அடுக்குகளாக வரைந்தார்கள். முதலில் எதை வரைந்தார்கள், கடைசியாக எதை வரைந்தார்கள், ஏன் அப்படி ? என்பன போன்ற நுணுக்கமான விளக்கங்களை ஒரு ஓவியரன்றி வேறு எவராலும் சொல்லி விட முடியாது !

லிம்பர்க் சகோதரர்கள், ஜான் வான் ஐக், ரோஜர் வாண்டா வேடன், லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ரபேல், டிசியன், ரூபன்ஸ், பிரான்ஸ் ஹால்ஸ், ரெம்ப்ரெண்ட் எனும் பத்து ஓவியர்களைப் பற்றிய விரிவான பதிவுகளே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

அவர்களுடைய வாழ்க்கை, ஓவியங்கள், பின்னணி என ஒவ்வோர் செய்தியையும் நேர்த்தியுடன் சொன்னதில் நூல் வெற்றியடைகிறது. கூடவே அந்த ஓவியர்களில் ஓவியங்களை வண்ணத்தில் போட்டிருப்பது நூலின் தரத்தை அதிகரிக்கிறது.

ஊடகங்களோ, புகைப்படக் கலையோ உருவாகாத காலகட்டத்தில் ஓவியங்களின் பங்களிப்புகள் எப்படி இருந்தன. கட்சிதமான அளவுள்ள அழகிகளை வரைந்த ஓவியர்கள், வனப்பு இல்லாத பணிப்பெண்களை வரைந்த ஓவியர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மேற்குலக ஓவியர்கள் செய்த பங்களிப்பு ? அவர்கள் மரபுகளை உடைத்துச் செய்த விஷயங்கள் என்பன போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லியிருப்பது நூலின் ஆழத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

அருவி வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் ஓவியங்களை ரசிப்பவர்களையும், ஓவியர்களை ரசிப்பவர்களையும் ஒரு சேர வசீகரிக்கும்

அருவி வெளியீடு

விலை : 150

94443-02967

4 comments on “நூல் : மேற்குலக ஓவியர்கள் – எனது பார்வையில்…

  1. இலக்கிய எழுத்தாளர் ராமகிருஷ்ணண் தன்னுடைய பார்வையில் ஓவியத்தைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். மிக அருமையான நூல் அது.

    ராஜா ரவி வர்மா மற்றும் டாவின்சியின் ஓவியங்களை என்னுடைய தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

    உலகை பிரம்மிக்க வைத்த ஓவியங்கள் – டாவின் சி

    உலகை பிரம்மிக்க வைத்த ஓவியங்கள் – டாவின் சி

    Like

Leave a comment