ராஜபக்சேவும், தினத் தந்தியும் …

தினமணியைத் தொடர்ந்து, இன்றைய தினத்தந்தி இதழில் எனது ராஜபக்சே – சூழ்ச்சியும், தந்திரமும் நூலுக்கான விமர்சனம் வந்திருக்கிறது…

“மொத்தத்தில் ராஜபக்சே பற்றி முழுமையாக, முதல் முறையாக வெளிவந்துள்ள புத்தகம்” எனும் பஞ்ச் வரிகளோடு !

நன்றி தினத்தந்தி !

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க…..

வசீகர உளவாளிகள்.

 

“ஏய்… நெசமாவா சொல்றே ? அவளா ? இருக்காதேப்பா”

உளவாளிகளின் உண்மை முகம் வெளியே வந்ததும் பதட்டத்துடன் ஓடி வரும் முதல் கேள்வி பெரும்பாலும் இது தான். காரணம் உளவாளிகள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரர்கள். ஒருத்தர் உளவு வேலை செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமா” ரேஞ்சுக்கு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். உளவு பார்க்கச் சென்ற இடத்தின் நம்பிக்கையைப் பெறும் வரை எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வெகு சாதாரணமாய் வலம் வருவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியாது. சரவண பவனில் சாப்பிடுவார்கள், ரங்கநாதன் தெருவில் புடவை எடுப்பார்கள்.

அவர்களுடைய முதல் திட்டம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது தான். அந்த நம்பிக்கையைப் பெற சில வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்பார்கள். “பொறுத்தார் உளவு பார்ப்பார்” என்று புது பழமொழியே போடலாம் ! இவர்களை சாதாரணமாய் எடை போடக் கூடாது. ரொம்ப கூர்மையான அறிவு, அலர்ட் எல்லாம் இவர்களிடம் இருக்கும்.

இந்த உளவு வேலையில் எக்கச் சக்கமான பெண்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக உலகப் போர் காலத்தில் பெண் உளவாளிகளின் மோக வலையில் விழுந்து மோட்சம் போனவர்கள் எக்கச் சக்கம். ஒரு நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து கொண்டு, எதிரி நாட்டைக் கவிழ்ப்பது இவர்களுடைய வேலை.

அழகினாலும், வசீகரத்தினாலும் ஒரு பெண் நினைத்தால் ஆணை எளிதில் வீழ்த்தலாம் எனும் ஆதாம் கால தந்திரம் தான் இது. எதிரியின் கோட்டைக்குள் ரகசியமாய் புகுவார்கள். அங்குள்ள உயர் அதிகாரியின் பார்வையில் படுவார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவரை நெருங்கி, அவர் அன்புக்குப் பாத்திரமாகி, தேவைப்பட்டால் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெறுவார்கள்.

இந்த நபரால் நமக்கு ஆபத்தே இல்லை. நம்பி கஜானா சாவியைக் கொடுக்கலாம் எனுமளவுக்கு நம்பிக்கை வளர்த்ததும் சுயரூபம் காட்டுவார்கள். ஆளைப் போட்டுத் தள்ளுவதோ. தகவல்களை அப்படியே கப்பலேற்றுவதோ என இவர்களுடைய பங்களிப்பை நம்பித் தான் நாடே காத்திருக்கும். நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது, நம்ப வெச்சு கழுத்தறுப்பது இப்படியெல்லாம் வர்ணிக்கலாம் இந்தப் பணியை !

மாடா ஹரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இவருடைய இயற்பெயர் மார்கரீதா கீர்துரிடா, நெதலாந்து நாட்டுக்காரி. இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுகளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி. மேடைகளில் அரைகுறையாய் ஆடி புகழ் பெற்றவர். ஆடைகளை அவிழ்த்து வெறும் ஆபரணங்களுடன் இவர் ஆடும் ஆட்டம் அப்போது ஜிலீர் ரகம். அழகிய பெண் என்றால் எந்த ஆணுடனும் எளிதில் நெருங்கலாம் எனும் ஹார்மோன் விதி இவருக்கும் உதவியது. உளவு வேலைகளில் இறங்கினார்.

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு நிறைய ரசிகர்கள். யுத்தக் களத்தில் பலர் புரள, இவருடைய முத்தக் குளத்தில் சிலர் புரண்டனர். அந்த பட்டியலில் இராணுவத்தினர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுடன் என பலரும் உண்டு. எல்லோரிடமும் கப்ளிங்ஸ் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்ஸ்க்கு அனுப்பினார்.

கடைசியில் 1917 பிப்ரவரி 13ம் நாள் பாரீஸில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். “நான் பிரான்ஸ் உளவாளிதான்” என மாடா சொன்னார். ஆனால் பிரான்ஸ் அதை மறுத்து “இவர் ஜெர்மன் உளவாளி” என பிளேட்டைத் திருப்பிப் போட்டது. ஜெர்மனிக்கு உளவு வேலை பார்த்ததாகவும், 50,000 படை வீரர்களின் சாவுக்குக் காரணமாய் இருந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுட்டும் விழிச் சுடர் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எடித் கிராவெல் என்றொரு உளவாளி இருந்தார். ஜெர்மன் நாட்டுக்காரியான இவர் இங்கிலாந்துக்கு உளவு வேலை பார்த்ததாகச் சொல்லி இவர் கைதானார். அவர் பார்த்து வந்ததோ யாரும் சந்தேகப்பட முடியாத நர்ஸ் வேலை. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இவர் 1915 அக்டோபர் 15ம் தியதி மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

அமெரிக்க உளவாளிகள் விர்ஜினியா ஹால், மரியா குளோ விச், இங்கிலாந்து உளவாளிகள் பிரின்சஸ் நூர், வயலட் ரெனி எலிசபெத் புஷ்ஷெல், இத்தாலிய உளவாளி பார்பெரா லாவெர்ஸ், பிரான்ஸ் உளவாளி ஏமி எலிசபெத் தோர்பே போன்றவர்கள் இந்த உளவு வேலைப் பிரபலங்கள். உளவாளிகள் பட்டியல் இத்துடன் தீர்ந்து விடவில்லை ஜூலியா மெக்வில்லியம்ஸ், மர்லேன், மெக்கிண்டோஷ், மேரி லூயிஸ், நான்சி கிரேஸ் என நீளும் இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. உலகப் போர் வரலாற்றில் பெண் உளவாளிகள் எந்த அளவுக்கு பரவியிருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறிய அறிமுகமாக இதைக் கொள்ளலாம்.

அதெல்லாம் அந்தக் காலம், இப்போ அப்படியெல்லாம் இல்லை என்று நினைக்கிறீர்களா ? இப்போதும் பெண் உளவாளிகள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அப்படி ஒரு வேலையைச் செய்து வசமாக மாட்டியிருக்கிறார் மாதுரி குப்தா எனும் 53 வயதான பெண். இஸ்லாமாபாத்தில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரக அதிகாரி. ஐ.பி.எஸ் படித்தவர். இவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றிருப்பதோ பரம்பரைப் பகை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு !

பாகிஸ்தானில் உள்நாட்டு உளவுப் பிரிவு அதிகாரியான முடாசர் ராணாவுடன் “நெருக்கமானார்”. எல்லாம் பிஸினஸ் நெருக்கம் தான். நெருக்கத்தை வேண்டுமென்றே உருவாக்கி, ரகசியங்களை விற்று கல்லாவை நிரப்பியிருக்கிறார் மாதுரி. இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளைப் பிரதியெடுத்து ‘ஜஸ்ட் லைக் தேட்’ ராணாவிடம் கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த உளவு வேலைக்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ  இவருக்கு இறைத்ததோ கோடிக்கணக்கான ரூபாய்கள். எல்லாம் பாகிஸ்தான் வங்கிகளில் பத்திரமாய் இருக்கின்றன. அவ்வப்போது தனது இந்திய வங்கிகளுக்கும் அந்தப் பணத்தை அனுப்பி தேசப்பற்றைக் காப்பாற்றுகிறார் ! 

உளவாளிகள் பொறுமை சாலிகள். எல்லாவற்றிலும் கட்சிதமாக சந்தேகம் வராதபடி நடந்து கொள்வார்கள். அப்படின்னா அவர்களைப் பிடிக்கச் செல்பவர்கள் அதைவிட புத்திசாலிகளாக, பொறுமை சாலிகளாக இருக்கணும் இல்லையா ?

அப்படித்தான் நடந்து கொண்டது இந்திய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தேக வலையில் விழுந்தது பட்சி. ஆனால் சந்தேகத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் வெகு இயல்பாய் கண்காணித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் நிழல் போல் தொடர்ந்து, அவர் உளவாளி என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பின் “வேலை விஷயமாக” என்று சொல்லி டெல்லி அலுவலகம் வர வைத்தனர். அங்கே வந்த பின்பு தான் அவருக்குத் தான் மாட்டிக் கொண்டோம் எனும் விஷயமே புரிந்தது.

“என்னைப் போயி உளவாளின்னு சொல்றீங்களே, இஸ்லாமாபாத் ரா பிரிவு தலைவர் ஷர்மாவே ஒரு பாகிஸ்தான் உளவாளி தான்பா” எனக் கூறி ஒரு நியூக்ளியர் திடுக்கிடலையும் உருவாக்கினார் இவர். அப்புறமென்ன அவர் மீதும் விசாரணை நடக்கிறது.

இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான உளவு வேலைகளை இயந்திரங்களே கவனித்துக் கொள்கின்றன. ஒரு சின்ன உதாரணம் சொல்றேனே, டிராகன் பிளை எக்ஸ்.6 ஒரு உளவுக் கருவி. சின்ன தும்பி போல இருக்கும். எதிரியின் கோட்டைக்குள் பறந்து திரிந்து அங்கே நடப்பதைப் படம் பிடித்து அனுப்பும். அங்கே நடக்கும் உரையாடல்களையும் அட்சர சுத்தமாய் காது கடத்தும். இதே போல எக்கச் சக்க உளவு டெக்னாலஜி சமாச்சாரங்களும் இன்று நாடுகளிடம் இருக்கின்றன.

இந்த நவீனங்களையெல்லாம் தாண்டியும் உளவு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள். அவர்களுடைய பொறுமையும், அழகும், வசீகரமும் ஆண்களுடைய அறிவுச் சிந்தனைக்கு இடையே ஒரு தற்காலிகத் திரையையாவது விரித்து விடுகிறது. அதில் ஆண்கள் ஏமாந்து விடும் வினாடியில் உளவு வேலை சக்சஸ் !

என்ன தான் ராஜதந்திரம் என வர்ணித்தாலும், இந்த வேலை செய்தெல்லாம் வாழ்க்கையை ஓட்டுவது பெண்மையைப் பெருமைப்படுத்துவது ஆகுமா ? என்பதை பெண்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க….

மக்கள் தொலைக்காட்சியில் நான்…

நாளை ( ஞாயிறு 13/06/2010) காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் சன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் நான் பேசுகிறேன்…வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்….

அன்புடன்

சேவியர்

நூல் : டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க !

டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க” எனும் எனது புதிய நூலை பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவள் விகடன், பெண்ணே நீ, தமிழ் ஓசை களஞ்சியம், ஹெல்த், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது.

ஆரோக்கியமான விமர்சனங்கள் இந்த நூலுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தினமணி இதை “சிறந்த நூல்” என பிரகடனப் படுத்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

சாதாரண விஷயங்களுக்குள் ஒளிந்திருக்கும் பல அசாதாரண உண்மைகளை இந்த நூல் படம் பிடிக்கிறது என நம்புகிறேன். எனது அனுபவப் பாடத்தில் கிடைத்தவையும், எனது தொழில் நுட்ப அனுபவத்தில் கிடைத்தவையும், நான் படித்ததில் என்னை வசீகரித்தவையும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள்,

படித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். 

தினமணி இதழில் வெளியான விமர்சனம்

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

 

தமிழிஷில் வாக்களிக்க

வெட்டியும், தைத்தும் பெண்மையைச் சிதைத்தும்….

 “அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது ஏதோ பாலியல் பலாத்காரமல்ல. சைக்கோ கொலையாளியின் கைவரிசையுமல்ல. இவர் சொல்வது பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமையைக் குறித்துத் தான். இதை முன்னின்று நடத்துவது வேறுயாருமல்ல பெண்ணின் அம்மாவே தான் !

எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். எஃப்.ஜி.எம் என்பது இதன் சுருக்கம்.

சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன. கலாச்சாரம், மதம், ஆணாதிக்கம், மூடத்தனம் என பல்வேறு காரணங்கள் இதன் பின்னால் உண்டு.

இந்தச் சடங்கைச் செய்ய கைதேர்ந்த மருத்துவர்களோ, அறுவை சிகிச்சை நிபுணர்களோ இருப்பதில்லை. வயதான பாட்டிகள் தான். கத்தி, பிளேடு, உடைந்த கண்ணாடித் துண்டு, கத்திரி, ஊசி நூல் இவை தான் அவர்களுடைய கருவிகள். பெண்ணுறுப்பை வெட்டி எடுத்தபின் கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டி நாற்பது நாட்கள் வரை அப்படியே போட்டு விடுகிறார்கள். காயம் ஆறுவதற்காக !

மிகக் கொடுமையான வலி. அந்த வலியினால் உருவாகும் அதிகமான அதிர்ச்சி. தொற்று நோய். பலவிதமான உடல் சார்ந்த நோய்கள் என இந்த வழக்கம் கொண்டு வரும் சிக்கல்கள் சொல்லி மாளாது. பல இலட்சம் பெண்கள் இந்த நிகழ்வுக்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள். பலர் முழுமையான மன நோயாளிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்பது இன்னும் கொடுமையானது.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கடுமையாய் சொல்லியிருக்கிறது  உலக நலவாழ்வு நிறுவனம். கொடுமையின் அளவை வைத்து உலக நலவாழ்வு நிறுவனம் இந்த வழக்கத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. கொஞ்சமாய் வெட்டி அகற்றுவது முதல், முழுமையாய் அகற்றி தைத்து வைப்பது வரை என இந்த வகைப்படுத்தல் வேறுபடுகிறது.

இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான பழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் எகிப்திய மம்மிகளில் இதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பழக்கம் மிக அதிக அளவில் பரவியிருப்பது 28 ஆப்பிரிக்க நாடுகளில் என்கின்றனர் ஆய்வாளர்கள். எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98 சதவீதம் பெண்களுக்கும் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

எல்லா வயதிலும் இந்தச் சடங்கு நடத்தப்படலாம் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு நான்கு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.

இந்தக் கொடுமையான சடங்குக்கு பெரும்பாலும் கொடூரமான சமூக நம்பிக்கைகளே காரணமாகிவிடுகின்றன. பல பிரதேசங்களில் இந்தச் சடங்கு செய்தால் தான் ஒரு பெண் முழுமையான பெண்ணாகக் கருதப்படுகிறாள். அப்போது தான் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் இந்தச் சடங்கைச் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் இந்த வலிமிகுந்த சடங்கு அந்த பிரதேசங்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது.

இந்தச் சடங்குக்கு பல்வேறு காரணங்கள் அந்தப் பகுதிகளில் உலவுகின்றன. இந்தக் காரணங்கள் எல்லாமே ஆணாதிக்கச் சிந்தனையும், முட்டாள் தன சிந்தனையும் கலந்தே மிதக்கின்றன என்பது கண்கூடு.

“இந்தச் சடங்கைச் செய்தால் பெண்ணுக்கு பாலுணர்வு குறைவாக எழும். இல்லையேல் பெண்கள் திருமணத்துக்கு முன்பாகவே வேறு ஆண்களுடன் தொடர்பு கொண்டு விடுவார்கள். பெண் திருமணம் வரை கற்போடு இருக்க இந்தச் சடங்கு தான் ஒரே வழி” என்பது அத்தகைய காரணங்களில் ஒன்று !

சில குழுக்கள், இந்தச் சிகிச்சை செய்து கொண்டால் பெண்மைத் தன்மை அதிகரிக்கும் என நம்புகின்றனர். உண்மையில் இந்தச் சிகிச்சை பெண்மைக்கே உரிய உணர்வுகள் பலவற்றைச் சிதைத்து விடுகின்றன. பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் பாலுறவில் திருப்தி எனும் நிலையை அடைவதே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இந்த சிகிச்சை செய்து கொண்டால் தான் பெண்ணுக்கு உரிய தீட்டு மறைந்து விடும் என்றும், உடலிலுள்ள துர் நாற்றங்கள் நீங்கி விடும் என்றும், முகம் அழகாகும் என்றும் எக்கச் சக்கமான பாட்டிக் கதைகள் இந்தச் சடங்கைச் சுற்றி உலவுகின்றன.

இந்தச் சடங்கை எந்த மதமும் முழுமையாய் ஆதரிக்கவில்லை. இஸ்லாமியர்களிலும் ஒரு சிலர் மட்டுமே ஆதரிக்கின்றனர். ஆனாலும் இது பரந்துபட்ட ஒரு மத வழக்கம் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இதை மக்களின் அறியாமையாகவோ, அல்லது ஆணாதிக்க சமூகத்தின் மிச்சமாகவோ தான் கருதவேண்டியிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் குடியமரும் மக்கள் இதை பல இடங்களுக்கும் கொண்டு செல்வது இன்னும் வேதனையான விஷயம். இந்த வழக்கத்தை அவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என எல்லா இடங்களிலிருந்தும் செய்கின்றனர்! கொண்டு செல்பவர்கள் இது எங்கள் கலாச்சாரம் என்றோ, கற்பைப் பாதுகாக்கும் வழக்கம் என்றோ, மத அடையாளம் என்றோ, குடும்ப கவுரவம் என்றோ ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்கின்றனர். இன்னும் சில பெண்கள், இது ஆண்களுக்கு உறவில் அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்பதற்காகச் செய்து கொள்கிறார்களாம் !

பெண்களுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய சுமையாய் இருக்கின்ற இந்தச் சடங்கு குழந்தைப் பிறப்பிலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறப்பதோ, அல்லது தாய் இறந்து போவதோ அதிகம். ஆப்பிரிக்காவில் சுமார் 20 சதவீதம் குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்து போகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த முட்டாள் தனமான சடங்கு தான் என்கிறது 2007ம் ஆண்டு நடந்த உலக நல வாழ்வு நிறுவன ஆய்வு.

உலக அமைப்புகளின் எதிர்ப்புகளுக்குப் பின் பல்வேறு நாடுகள் இந்தப் பழக்கத்தை தடை செய்திருக்கின்றன. குறிப்பாக இந்தப் பழக்கம் அதிகமாக இருந்த எகிப்து 2007ம் ஆண்டு இந்தப் பழக்கத்தைத் தடை செய்து சட்டம் இயற்றியது. இந்தச் சடங்கின் போது ஒரு பன்னிரண்டு வயது சிறுமி பலியாகி, அது ஒரு போராட்டமாய் வெடித்ததே இந்தச் சட்டம் இயற்றப்பட முக்கியக் காரணம்.

இன்னும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு சவுதி அரேபியா, தெற்கு ஜோர்தான், வடக்கு ஈராக், சிரியா, ஓமன், இந்தோனேஷியா என பல இடங்களிலும் இந்தச் சடங்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், ஆண்களைத் தாண்டியும் வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருகும் இன்றைய உலகிலும், பெண்களுக்கு எதிராக இத்தகைய வன் கொடுமைகள் நடக்கின்றன என்பதை நினைக்கும் போது உள்ளம் பதறித் தான் போகிறது !

 நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

நூல் : மஹிந்த ராஜபக்சே – சூழ்ச்சியும் தந்திரமும்

இலங்கையில் தனது அதிகாரத்தை நிறுவ மஹிந்த ராஜபக்சே செய்த முறையற்ற பல நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நூல். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் நரகமாக இருப்பதையும், அங்கே மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நிகழ்வதையும் ராகபக்சே செய்த படு மோசமான போர்க்குற்றங்களையும், தனது அக்கிரமமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர் செய்யும் ராஜ தந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக ராஜபக்சேவின் சுயநலம் இருப்பதையும் இந்நூல் சற்றும் மிகையின்றிப் படம் பிடித்துக் காட்டியுள்ளதுதினமணி, நூல் விமர்சனம் “

ராஜபக்சே எனும் பெயரே தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக நிலைபெற்றிருக்கிறது. தமிழர்கள் என்றில்லை, மனித நேயத்தை மனதில் கொண்டு இயங்கும் எந்த ஒரு மனிதனுக்குமே அந்தப் பெயர் அலர்ஜியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்சேவின் இளமைக் காலம் முதல் அவருடைய சமீபத்திய முகம் வரையிலான மாற்றங்களை படம் பிடித்துக் காட்டும் முயற்சியே இந்த நூல். ராஜபக்சே எனும் தனி மனிதனை மையமாகக் கொண்டு அவருடைய செயல்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் இந்த நூல் அலசுகிறது.

வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள், படித்தால் கருத்துத் தெரிவியுங்கள்.

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க.