How To Train Your Dragon : எனது பார்வையில்….

எனக்கு அனிமேஷன் படங்களின் மீது அலாதிப் பிரியம் உண்டு. இல்லாத ஒரு உலகத்துக்குள் புகுந்து நாமும் ஒரு அங்கமாகிப் போகும் சுவாரஸ்யம் விவரிக்க முடியாதது. பெரும்பாலான ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் ஏமாற்றுவதில்லை. அதிலும் பிக்ஸர், டிரீம்வர்க்ஸ் போன்ற ஜாம்பவான்களின் பட்டறையிலிருந்து வெளிவரும் படங்களை நம்பிப் போய் உட்காரலாம்.

அப்படி சமீபத்தில் வசீகரித்த படங்களில் ஒன்று டிரீம்வர்க்ஸ் தயாரிப்பான “ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன்”.  அவதார் ஆரம்பித்து வைத்த 3டியின் இரண்டாவது இன்னிங்சில்  இந்தப் படமும் இணைந்திருக்கிறது.

கதை ? அக்மார்க் ஃபேண்டஸி கதை. கிரெசிடா கௌவெல் எழுதி 2003ல் வெளியான நாவலின் திரைப் பதிப்பு.   

பெர்க் தீவில் வசிக்கும் ஆஜானுபாகுவான வைக்கிங் இனத்தவருக்கு ஒரே ஒரு பிரச்சினை. டிராகன்கள். வித விதமான டிராகன்கள். அவ்வப்போது வந்து ஊரையே களேபரம் பண்ணி விட்டு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போய் விடும். தலை முறை தலைமுறையாக டிராகன்களை வேட்டையாடுவதே இவர்களுடைய தலையாய பிரச்சினையாகிப் போய் விடுகிறது.

வீரம், மரியாதை இத்யாதி எல்லாமே டிராகன் வேட்டையில் எவ்வளவு கில்லாடி என்பதை வைத்து தான் கணக்கிடப்படும். வைக்கிங் தலைவன் ஸ்டாயிக் மலை போன்றவர். கையாலேயே டிராகனை குஸ்தி செய்து விரட்டும் தீரன். அவருடைய ஒரே மகன் ஹிக்கப். அவருக்கு நேர் எதிர். பலவீனமான பல்லி போன்றவர். வாளைத் தூக்கவே வலு இல்லை. ஆனாலும் அவனுக்கு டிராகன்களை வேட்டையாடி தனது பெயரையும் வரலாற்றில் எழுதி வைக்க வேண்டுமென்பது ஆசை.

ஒரு முறை ஒரு டிராகனை அடித்து வீழ்த்தியும் விடுகிறான். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. அடிபட்ட  அந்த டிராகனைத் தேடிப் போகும் ஹிக்கப், தனது இளகிய மனசின் காரணத்தால் அதைக் கொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் கொல்லாமல் விடுகிறான். அப்படியே அந்த டிராகனுடன் நட்பும் மலர்கிறது. அந்த டிராகனின் உடைந்து போன வாலுக்கு ஒரு செயற்கை வாலையும் தயாரித்து டிராகனில் ஏறி பறக்கவும் செய்கிறான்.

வைக்கிங்கள் டிராகன்களைப் பற்றி எவ்வளவு பெரிய தப்பான அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பது டிராகன்களுடன் பழகியபின் தான் அவனுக்குத் தெரிய வருகிறது. டிராகன்கள் போர் நடத்துவதே அவர்களுடைய “தலைவன்” டிராகனுக்கு உணவு கொடுக்கத் தான் என்பதையும் புரிந்து கொள்கிறான். அப்புறம் என்ன ? கொடிய டிராகனை அழித்து மற்ற டிராகன்களுடன் மக்கள் நட்பாய் பழகுவதுடன் படம் முடிகிறது.

சுவாரஸ்யமான கதை, மலைப்பூட்டும் கிராபிக்ஸ், பரபரக்கும் காட்சிகள் என இறக்கை கட்டிப் பறக்கிறது படம். இதன் காட்டில் அடை மழை வசூல் என்பதும், இதன் அடுத்த பாகம் 2013ல் வெளிவரும் என்பதும் உப தகவல்கள்.   

குழந்தைகளுக்கும், குழந்தைகளாக மாற விரும்பும் பெரியவர்களுக்கும் ஸ்பெஷல் விருந்து இந்தப் படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை !

தமிழிஷில் வாக்களிக்க…