போபால் : நடந்ததும், நடக்க வேண்டியதும்

 

1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இரவை எத்தனை முறை கழுவினாலும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழித்து விட முடியாது. பகல் முழுவதும் வேலை செய்து இரவில் நிம்மதியாய்ப் படுத்த அப்பாவி மக்களுக்கு, இது தான் தங்கள் கடைசி இரவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நள்ளிரவை நெருங்கும் நேரம் திடீரென எல்லோருக்கும் இருமல், நெஞ்செரிப்பு, கண் எரிச்சல். எல்லோரும் சட்டென எழுந்து கொள்கிறார்கள். பார்த்தால் ஊரே இருமுகிறது, பயத்தில் மக்கள் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள்.

அந்தக் களேபரத்தில் ஊர் சட்டென விழித்துக் கொள்ள, காவல் துறை ஊருக்குள் வர, விஷயம் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருது வருகின்ற விஷவாயு !. மக்களின் பதட்டமும், பீதியும்  அதிகரிக்கிறது. அதற்குள் ஒவ்வொருவராக சட் சட்டென்று கீழே விழுந்து இறந்து போக ஆரம்பிக்கின்றனர். விலங்குகள் சத்தமிடுகின்றன. சிறிது நேரத்திலேயே அந்தச் சத்தமும் அடங்கிப் போகிறது.

மக்கள் அந்த நள்ளிரவிலேயே ஊரைக் காலி செய்து விட்டு ஓடுகின்றனர். அடைக்கப்பட்ட காருக்குள் புகுந்து ஓடியவர்கள் தப்பித்தார்கள். கால்களை நம்பி ஓடிய ஏழைகளோ ஏகமாய் மூச்சு வாங்க, அதிக விஷ வாயுவைச் சுவாசித்து வழிகளிலேயே விழுந்து விட்டனர்.

விடியலில் எட்டிப் பார்த்த சூரியனுக்குத் தெரிந்ததெல்லாம் ஊரெங்கும் நிரம்பிக் கிடந்த பிணங்கள் தான். இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஒன்பது பேர் ஊரெங்கும் இறந்து கிடந்தனர். ஒப்பாரி வைக்கக் கூட ஆளில்லாமல் ஊரே மயானமானது. மருத்துவமனைகளெல்லாம் நிற்பதற்கும் இடமில்லாமல் பிதுங்கி வழிந்தன.

அத்துடன் அந்தத் துயரம் நின்று போகவில்லை. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் எட்டாயிரம் பேர் இறந்து போகிறார்கள். அதன் பின் காலங்கள் செல்லச் செல்ல விஷவாயு தாக்கியதால் மீண்டும் இறந்து போனவர்கள் எட்டாயிரம் என்கின்றன புள்ளி விவரங்கள். அந்தப் பிராந்தியத்திலுள்ள விலங்குகளெல்லாம் மாண்டு விட்டன. காற்றின் விஷத்தன்மையாய் மரங்களெல்லாம் பட்டுப் போய்விட்டன.

தனியார் புள்ளி விவரங்கள் போபால் விஷவாயுக் கசிவினால் இறந்து போனவர்கள் இருபதாயிரத்துக்கும் மேல் என்கிறது. பாதிக்கப்பட்டவர்களோ பல இலட்சம். பாதிப்பு என்பது கொஞ்ச நஞ்ச பாதிப்பல்ல ! நிரந்தர ஊனம் எனுமளவுக்கு மிகக் கொடுமையான பாதிப்பு.

உலகிலேயே இப்படி ஒரு மாபெரும் விஷவாயுக் கசிவு நடந்ததே இல்லை. வரலாற்றின் மாபெரும் துயரத்தை இந்தியா சந்தித்தது. இந்தியா முழுவதுமே இந்த அதிர்ச்சி அலை வேகமாய்ப் பாய்ந்தது. நடந்தது தான் என்ன ?

யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் 1969ம் ஆண்டு போபால் என்னுமிடத்திற்கு அருகே ஒரு தொழிற்சாலையை நிறுவியது. 1979ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் மெத்தில் ஐசோசைனைட் (எம்.ஐ.சி) தயாரிக்கும் கூடம் ஒன்றும் இணைக்கப்பட்டது. இது கொடிய விஷத் தன்மை கொண்டது. உலகின் பல்வேறு தொழிற்சாலைகள் இதற்குப் பதிலாக விஷத் தன்மை குறைந்த வேறு ரசாயனங்களை உருவாக்குகின்றன. ஆனால் கார்பைடு நிறுவனமோ செலவு குறைவு என்பதால் மெத்தில் ஐசோசைனைடை தயாரிக்க முடிவு செய்தது. இது தான் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகக் காரணம்.

அந்த கொடிய இரவில் நான்கு டன் எம்.ஐ.சி இருந்த கலனுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இது அங்குள்ள தொழிலாளர்களின் கவனக் குறைவு என்று சொல்லப்படுகிறது. கலனில் புகுந்த தண்ணீர் வேதியல் மாற்றத்துக்குள் தள்ளப்பட்டது. இந்த மாற்றத்தை  எக்ஸோ தெர்மிக் ரியாக்சன் என்கிறார்கள். இதனால் கலனின் வெப்பம் 200 டிகிரி செண்டிகிரேட் எனும் அளவுக்கு எகிறி விடுகிறது. இந்த அழுத்தம் கலனிலிருந்து மிக அதிக அளவு வாயு வெளியேறக் காரணமாகிவிடுகிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு வெளியேற ஆரம்பித்த விஷ வாயு, அதிகாலை நான்கு மணிக்குள் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை உயிரைக் குடித்து, இலட்சக்கணக்கானவர்களை ஊனமாக்கி விடுகிறது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய இந்த நிகழ்வின் வழக்கு கல்வெட்டில் பொறிக்கக் கூடிய அளவுக்கு ஆமை வேகத்தில் நடந்தது. கால்நூற்றாண்டு காலத்துக்குப் பின் வாசிக்கப்பட்ட தீர்ப்பு, வாசிக்கப் படாமலேயே இருந்திருக்கலாம் என எண்ண வைக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய கொடூரத்தின் குற்றவாளிகளுக்கு வெறும் இரண்டாயிரம் டாலர் அபராதம், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என விஷ வாயுவை விட வீரியமாய் பாய்கிறது தீர்ப்பு.

சரி, இது ஒரு விபத்து தானே ? இதில் வேறென்ன தண்டனை எதிர்பார்க்கிறீர்கள் ? எனும் குரல்கள் ஆங்காங்கே எழுகின்றன. நீங்கள் உங்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறீர்கள். வழியில் எதிர்பாராத விதமாக இரண்டு பேரை இடித்துக் கொன்று விட்டால் அது விபத்து. உங்கள் காரில், பிரேக் இல்லை, கியர் வேலை செய்யாது, கிளட்ச் முரண்டு பிடிக்கும், சக்கரம் சரியில்லை, ஹார்ன் சத்தம் போடாது எனும் நிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்டியை காட்டுத் தனமாக ஓட்டி இரண்டு பேரைக் கொன்றால் அதை விபத்தென்று நியாயப்படுத்த முடியுமா ? இது தான் கார்பைடு விஷயத்திலும் நடந்தது.

செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எம்.ஐ.சி யின் குளிர்வசதியை நிறுத்தியிருந்தார்கள். இது நிர்ணயிக்கப்பட்ட 4.5 டிகிரி எனும் குளிர் நிலையில் இருந்திருந்தாலே போதும், இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான உயிர்களை விட செலவைக் குறைக்க வேண்டும் என கார்பைடு நிறுவனம் நினைத்திருக்கிறது.

நான்கு வருடங்களாக அலாரங்கள் வேலை செய்யவில்லை. நான்கு எனும் எண்ணிக்கையில் இருக்க வேண்டிய பேக்-அப் சிஸ்டம்  ஒரே ஒன்று தான் இருந்தது. குழாய்களைச் சுத்தம் செய்ய வேண்டிய நீராவி பாய்லர்கள் வேலை செய்யவே இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆபத்து கால நடவடிக்கைகள் எதையுமே சரியான முறையில் செய்திருக்கவில்லை. ஒரு வாரமாக அந்த கலனே சரியான இயங்கு நிலையில் இருக்கவில்லை.  பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பு கருவிகள் எல்லாம் சுவிட்ச் ஆஃப் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கார்பன் ஸ்டீல் குழாயில் இருந்த கசிவை, அதிக செலவாகும் எனும் காரணத்துக்காக நிர்வாகம் பழுது நீக்காமலேயே வைத்திருந்தது. விபத்துக்கு சில மாதங்களுக்கு முன், “இப்படி ஒரு ஆபத்து நடக்கலாம்” என்று விஞ்ஞானிகள் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையையே நிர்வாகம் தூக்கிக் கிடப்பில் போட்டு விட்டது !

இப்போது சொல்லுங்கள். போபாலில் நடந்தது விபத்தா ? அல்லது பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாய் கொண்ட ஒரு நிறுவனத்தின் அலட்சியமா ? இதனால் தான் இன்று இந்தியாவே இந்த தீர்ப்பைக் கேட்டு மனம் உடைந்திருக்கிறது.

இருபதாயிரம் பேரைப் பலிகொண்டு, இரண்டு இலட்சம் பேரை நிரந்தர ஊனமாக்கிய ஒரு கோர விபத்தின் தீர்ப்பு ஏதோ லஞ்சம் வாங்கிய தாசில் தாருக்கு எதிரான வழக்கு போல வெளியாகியிருப்பது வேதனை. அந்த தீர்ப்பையும் கால் நூற்றாண்டு காலம் கழிந்தே சொன்னதால், குற்றவாளிகள் பலர் இயற்கை மரணத்தையே சந்தித்து விட்டார்கள்.

இப்போதைய தேவை இரண்டே இரண்டு தான்.

ஒன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய அடிப்படையில் அதிகபட்ச உதவிகள் செய்யப்பட வேண்டும். ஊழலிலேயே பல்லாயிரம் கோடிகள் அடிபடும்போது, அதே போன்ற ஒரு பெரும் தொகையை மக்களுக்காய்ச் செலவிடுவதில் எந்தத் தவறும் இல்லை.

இரண்டு, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருக்கும் யாருடைய தொழிற்சாலையானாலும் சரி, சரியான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வில்லையேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இழுத்து மூடப்பட வேண்டும்.

இது தான் இந்தியர்களையும், இந்தியாவையும் அரசு நேசிக்கிறது என்பதற்கான ஒரே உதாரணமாக முடியும் !

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க….

Advertisements

6 comments on “போபால் : நடந்ததும், நடக்க வேண்டியதும்

 1. ///சரி, இது ஒரு விபத்து தானே ? இதில் வேறென்ன தண்டனை எதிர்பார்க்கிறீர்கள் ? எனும் குரல்கள் ஆங்காங்கே எழுகின்றன. நீங்கள் உங்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறீர்கள். வழியில் எதிர்பாராத விதமாக இரண்டு பேரை இடித்துக் கொன்று விட்டால் அது விபத்து. உங்கள் காரில், பிரேக் இல்லை, கியர் வேலை செய்யாது, கிளட்ச் முரண்டு பிடிக்கும், சக்கரம் சரியில்லை, ஹார்ன் சத்தம் போடாது எனும் நிலை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்டியை காட்டுத் தனமாக ஓட்டி இரண்டு பேரைக் கொன்றால் அதை விபத்தென்று நியாயப்படுத்த முடியுமா ? இது தான் கார்பைடு விஷயத்திலும் நடந்தது.///

  இதை ஒரு தொழிற்சாலை விபத்தாக மட்டும் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் தொழிற்சாலையின் பணியாளர்கள் மட்டுமல்ல. இதைச் சரியான வார்த்தைகளைக் கொண்டு விளக்கியிருக்கிறீர்கள்.

  இதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு கேவலம் இரண்டாண்டு தண்டனை. நிதியை நீட்டினால் நீதி என்பதை விட நிதி உள்ளோர் நீட்டுவதெல்லாம் நீதி என்பது தான் சரியாயிருக்கும் போல. 😦

  Like

 2. our ruling is bad
  it will continue in india only
  our goverment get money and give permission to destroyed the india
  the did not like our people
  must chsnge the rulling and coming goog people
  than only this type of problem did not comes in india

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s