Eagle Eye & The echelon conspiracy – எனது பார்வையில்

Eagle Eye படத்தை வார இறுதியில் பார்த்தேன். “உன்னை எப்போதும் யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்பது தான் படத்தின் ஒன் லைன். படம் துவங்கும் போது ஒரு தீவிரவாதியைத் தேடிப் போகிறது ராணுவம். வழக்கம் போல தீவிரவாதி முஸ்லீம் தான். இஸ்லாமியர்களின் நாட்டில் நுழைந்து தெருக்களில் நோட்டமிடுகிறது. உருவ ஒற்றுமையுடைய ஒருவரை தீவிரவாதி என நினைத்து, கம்ப்யூட்டரின் பதிலையும் மீறி கொன்று விடுகிறார்கள். ஒரு இறுதிச் சடங்கில் நிற்கிறார் அந்த மனிதர். அவரும் அவருடன் நிற்கும் அத்தனை பேரும் இறந்து போகிறார்கள்.

படம் நம்ம ஹீரோவை நோக்கித் தாவுகிறது. ஹீரோ, வீட்டு வாடகைக்குப் பணம் கொடுக்கவே தடுமாறும் சராசரி. ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறான். இரட்டையர்களில் ஒருவனான அவனுடன் பிறந்த அவனுடைய சகோதரன் இறந்து விடுகிறான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனுடைய முகத்தைப் பார்த்து சோகத்தில் திரும்புகிறான் ஹீரோ.

ஒரு ஏடிஎம் மில் பணம் எடுக்க வருகிறான். ஒரு 40 டாலர் கூட பேலன்ஸ் இல்லாத அவனிடம் இப்போது பல இலட்சம் டாலர்கள். நம்ப முடியாமல் வீடுதிரும்புகிறான். அவனுடைய வீடு முழுக்க நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் இத்யாதிகள். மிரண்டு போய் நிற்பவனுக்கு ஒரு போன்கால் வருகிறது. உடனே ஓடிவிடு, எஃப்.பி.ஐ உன்னைத் தேடி இன்னும் முப்பது வினாடிகளில் வருவார்கள் ! வழக்கமான ஹீரோ போலவே இவனும் நம்ப மறுக்கிறான். எஃப்.பி.ஐ வருகிறது, அலேக்காக அள்ளிக் கொண்டு போகிறது.

“நான் சொல்வது போல செய். இல்லையேல் உன் பையன் காலி” என ஹீரோயினிக்கும் அதே பெண் போன் செய்கிறாள். அமெரிக்காவின் ஒட்டு மொத்த நெட்வொர்க்கையும், சர்வ சகலத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத வில்லன்.

போன் காலில் வரும் கட்டளைக்குத் தக்கபடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். உதாசீனப் படுத்த முயலும்போதெல்லாம் விபரீதங்கள் பயங்கரமாக இருக்கின்றன. எனவே அந்த போன் கால் சொல்வது போலெல்லாம் செய்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் இந்த வேலைகளையெல்லாம் செய்வது கம்ப்யூட்டர். புதிதாக இணைத்த இண்டெலிஜெண்ட் மென்பொருள் தான் இந்த வேலைகளையெல்லாம் செய்கிறது. கிறிஸ்டல் பாம்ப் என ஒரு புது கான்சப்டை உருவாக்கி சின்ன ஒரு கிறிஸ்டல் துகளை வைத்து ஒரு புட்பால் கிரவுண் அளவுக்கு பகுதியை துவம்சம் செய்து தள்ளலாம் என்றெல்லாம் பேசிக் கொ(ள்)ல்கிறார்கள். ஏகப்பட்ட கார் சேசிங், கட்டிடங்கள் தகர்ப்பு, சாவுகள் என காட்சிகளுக்குப் பின் அந்த கணினியை செயலிழக்கச் செய்து நம்மையும் கொட்டாவி விடச் செய்கிறார்கள்.

இந்தப் படம் பார்த்த கொடுமையை விட அதிக கொடுமை அடுத்து பார்த்த The echelon conspiracy எனும் படம். முந்தைய படத்தின் கொசு அடிச்சான் காப்பி ( ஈயடிச்சான் காப்பின்னு எவ்ளோ நாள் தான் எழுதறது ? ).  அதே போல போன்கால்கள், எச்சரிக்கைகள், இத்யாதிகள். அங்கேயும் அதே கம்ப்யூட்டர். கடைசியில் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்தால் விஷயம் ஓவர்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படிப்பட்ட படங்களை தொடர்ந்து சுட்டுத் தள்ளுவாங்களோ தெரியவில்லை. வார் கேம்ஸ், நார்த் பை நார்த்வெஸ்ட், த நெட் என கிடைத்த படங்களிலிருந்தெல்லாம் சுட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் “வி ஆர் அட் வார்” என்று ஒரு வசனம் வந்தாலே படத்தை ஆஃப் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.  செய்யாதது என் தப்பு. நான் செய்த தப்பை நீங்களும் செய்ய வேண்டாமே எனும் ஒரு எச்சரிக்கைக்காகத் தான் இந்தப் பதிவே !

தமிழிஷில் வாக்களிக்க