“சுவிட்சை ஆன் பண்ணியிருக்கீங்களா சார் ” மறு முனையில் பேசிய கஸ்டமர் சர்வீஸ்காரனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க கிருபாவுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு பதில் சொன்னான்.
“ஆன் பண்ணியிருக்கேன்”
“உங்க மோடம்ல லைட் எரியுதா ?”
“சுவிட்சைப் போட்டா லைட் எரியாம மோடமேவா எரியும்?”
“சார்… பிளீஸ் சொல்லுங்க.. எத்தனை லைட் எரியுது ?
“நாலு லைட்… பச்சை பச்சையா எரியுது”
“அப்போ ஏதோ மிஸ்டேக். இரண்டாவதா இருக்கிற லைட் மஞ்சள் கலரா எரியணும்”
“பாஸ்… இதையெல்லாம் நான் லாஸ்ட் ஒன் வீக்கா உங்க கிட்டே டெய்லி போன் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் வயரு சுவத்துல இருக்கா, சுவரு வீட்டுல இருக்கா, வீட்ல கரண்ட் இருக்கான்னு கடுப்படிக்கிறீங்க”
“சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்… எவ்ளோ நாளா இண்டர்நெட் வர்க் ஆகலைன்னு சொன்னீங்க ?”
“இன்னியோட முழுசா ஒரு வாரம்”
“ஓ..கே சார்… உங்க பழைய கம்ப்ளையண்ட் நம்பர் என்ன ?”
சொன்னான்.
“பிளீஸ் ஹோல்ட் ஆன்” மறுமுனை சொல்லி முடித்ததும் போனில் ஏதோ இசை வழியத் தொடங்கியது. மெலிதான இசைதான். ஆனால் இந்த சூழலில் அது கர்ண கொடூரமாய்த் தெரிந்தது.
இந்த ஹோல்ட் ஆனைக் கண்டு பிடிச்சவனைக் கொல்லணும். நாலு கேள்வி கேட்டுட்டு ஹோல்ட்ல போட்டுட்டு டீ குடிக்க போயிடறாங்க போல. பத்து நிமிசம் கழிச்சு சாவாகாசமா வந்து சாவடிப்பாங்க. கிருபாவின் எரிச்சல் ஏறிக் கொண்டிருந்தது.
இருக்காதா பின்னே. போன மாசம் தான் பிரியாவுக்கு அவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆச்சு. நிச்சயதார்த்தம் ஆன முதல் நாள்ல இருந்து எப்போவும் ஸ்கைப் தான் ஒரே துணை. நெட்ல பேசறது, வெப் கேம்ல சிரிச்சுக்கிறது, இ மெயில்ல போட்டோ அனுப்பிக்கிறது ன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடிட்டே இருந்தது. சுவாரஸ்யத்தோட உச்சத்துல இருந்தப்போ தான் ஒரு நாள் சட்டுன்னு அந்த சிக்கல் வந்துது. இண்டர் நெட் கணக்ட் ஆகலை !
நெட் கனெக்ட் ஆகாததெல்லாம் ஒரு பெரிய சர்வதேசக் குற்றம் கிடையாது தான். இன்னிக்கு பெப்பே காட்டும். கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா கணெக்ட் ஆயிடும். இதுக்குன்னு சில ஸ்பெஷல் வைத்தியங்கள் உண்டு.
முதல்ல மோடம் பின்னாடி இருக்கிற வயரை எல்லாம் கழற்றிட்டு திரும்ப மாட்டணும். என்னத்த கழட்டறோம்ன்னும் எதுக்கு கழட்டறோம்னும் யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு தடவை புல்லா கழற்றி மாட்டினா செத்துப் போன மேடம் வேலை செய்ய சாத்தியம் இருபது சதவீதம் உண்டு.
அதுவும் வேலைக்காவலைன்னா இருக்கவே இருக்கு சிஸ்டம் ரீஸ்ட்டார்ட். கம்ப்யூட்டரை ஒரு வாட்டி ஷட்டவுன் பண்ணி ஆன் பண்ணினா அதுபாட்டுக்கு எல்லா கனெக்ஷன்களையும் தூசு தட்டு ஜம்முன்னு இண்டர்நெட் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இப்படி எல்லா முதலுதவிகளும் செய்து பார்த்து கிருபாவுக்கே சலிப்பு வந்துடுச்சு. இந்த வாட்டி தான் இப்படிப் படுத்துது. என்ன பண்ணினாலும் வேலைக்காவலை. தெரியாத் தனமா இந்த பி.எஸ்.என்.எல் வேற வாங்கித் தொலச்சுட்டேன். வேற பிரைவட் கம்பெனின்னா கூப்பிட்டா உடனே வந்து நிப்பாங்க. முதல்ல இதை தலையைச் சுத்தி தூரப் போடணும். கிருபாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஸ்பீக்கர் போனில் இன்னும் மியூசிக் தான் ஓடிக் கொண்டிருந்தது.
கண்டிப்பா அந்த ….. போனை ஹோல்ட் பண்ணிட்டு டீ குடிக்கத் தான் போயிருக்கும். பொறம்போக்கு… கிருபா சத்தமாகவே அந்த வார்த்தையைச் சொல்லி அருகிலிருந்து சேரை எட்டி உதைத்துத் தள்ளியபோது மியூசிக் நின்றது.
ஐயையோ .. மிதிச்ச மிதியில போனும் கட்டாச்சோ என ஒரு வினாடி கிருபா திடுக்கிட்டான். நல்ல வேளை அப்படியெல்லாம் நடக்கவில்லை. இல்லேன்னா மறுபடியும் போன் பண்ணி “பிரஸ் ஒன் பார் இங்கிலீஸ்” ன்னு கேக்கறதுக்கு பதிலா மோடத்தையே எரிச்சுடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.
“தேக்ஸ் ஃபார் ஹோல்டிங் சார்”
“சரி சரி.. டீ குடிச்சாச்சா ?”
“ஐ.. டிடிண்ட் கெட் யூ சார்…”
“எவ்ளோ நேரம் தான் ஹோல்ட்ல போடுவீங்க. இந்த மியூசிக் கேட்டுக் கேட்டு காதெல்லாம் வலிக்குது. உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கணும்ன்னு தோணினா ஹோல்ட் ல போட்டுடுவீங்க. அப்படித்தானே ? உண்மையைச் சொல்லுங்க… ”
மறுமுனையில் அவன் சிரித்தான். “நோ சார்.. நான் உங்க டேட்டா எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தேன்”
“ஓ… மறுபடியும் ஒரு செக்கிங்ஆ ? சரி… ஏதாச்சும் யூஸ் புல்லா கிடைச்சுதா ? இல்லை இன்னொரு நயன் டிஜிட் நம்பர் தருவீங்களா ? கஸ்டமர் கம்ப்ளையிண்ட் நம்பர்ன்னு. ”
“நோ சார்… உங்க பிராப்ளம் என்னன்னு கண்டு பிடிச்சாச்சு”
“ஓ ரியலி… தேங்க் காட்…. கேக்கவே சந்தோசமா இருக்கு. ? என்ன பிராப்ளம் ? நெட்வர்க் இஷ்யூவா ? ”
“நோ.. நோ சார். எங்க சைட் எந்த பிராப்ளமும் இல்லை. உங்க சைட்ல தான்”
“என் சைட்ல என்னய்யா பிராப்ளம்”
“நீங்க இந்த மாசம் பணமே கட்டலை சார். சோ, டிஸ்கணக்ட் பண்ணியிருக்காங்க. உங்களுக்கு இண்டிமேஷன் கூட அனுப்பியிருக்காங்களே”
மறுமுனையில் அவன் சொல்லச் சொல்ல கிருபாவுக்கு பக் என்றானது. ஐயையோ…. எப்படி மறந்தேன் ? பணமே கட்டாமல் இண்டர்நெட்டை துண்டித்திருக்கிறார்கள். அந்த விஷயம் தெரியாமல் ஒருவாரமாக எல்லோரிடமும் எகிறிக் குதித்து களேபரம் பண்ணியிருக்கிறேன். நினைக்க நினைக்க கிருபாவிற்கு தன் மேலேயே கடுப்பாய் இருந்தது.
லவ் மூடில் பணம் கட்டவே மறந்து போன சமாச்சாரம் அவனுக்கு ரொம்ப லேட்டாக உறைத்தது.
“சார்… இருக்கீங்களா ?”
“யா… ஐ…ஐ..யாம் சாரி… ஐ.. பர்காட்… நான் பணத்தைக் கட்டிடறேன்” கிருபாவின் குரலின் சுருதி ஏகத்துக்குக் குறைந்திருந்தது.
“ஈஸ் தெயர் எனிதிங் எல்ஸ் ஐ கேன் டு பார் யூ சார்” மறுமுனையில் கேட்டவனுடைய குரலில் கொஞ்சம் நக்கல் இருந்தது போல தோன்றவே “நோ.. தேங்க்ஸ்” என்று சொல்லாமலேயே போனைக் கட் பண்ணினான் கிருபா.
அவனுக்கு முன்னால் பளீர் பச்சை நிறத்தில் எரிந்து கொண்டிருந்த மோடம் விளக்குகள் அவனைப் பார்த்து கை கொட்டிச் சிரிப்பதாய் தோன்றியது அவனுக்கு.
ஃ