த கராட்டே கிட்- எனது பார்வையில்

 

பார்க்க வேண்டும் என நினைத்து நினைத்து கடைசியில் பார்த்தே விட்டேன். ஹாலிவுட் வில்ஸ்மித் பையன், பொடியன் ஜேடன் ஸ்மித் தான் கதையின் ஹீரோ. கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த தி கராட்டே கிட் திரைப்படத்தின் மறு பதிப்பு தான் இந்த புதிய படம்.

கதை ? அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து சீனாவுக்கு குடிபெயர்கின்றனர் ஜேடனும் அம்மாவும். இனிமேல் டெட்ராய்டில் எதுவுமே இல்லை எனும் சூழல். மிச்சமுள்ள வாழ்க்கை சீனாவில் தான். சீனா வந்ததும் பூங்காவில் விளையாடப் போகும் ஜேடனுக்கு அறிமுகமாகிறாள் ஒரு பதின் வயதுத் தோழி. வழக்கம் போலவே அதைச் சகித்துக் கொள்ள முடியாத பதின் வயதுப் பசங்க ஜேடனை அடித்து விடுகிறார்கள். போதாக்குறைக்கு வில்லன் சிறுவர்கள், தோழி, ஜேடன் என எல்லாருமே ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டிய கட்டாயம்.

நம்ம ஜாக்கி சான், ஜேடன் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டின் மெயிண்டனன்ஸ் மேன். ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என திரியும் ஒரு முதுமை மனிதர். ஒரு நாள் ஜேடனை அவருடைய வீட்டு வாசலில் வைத்தே ஆறு மாணவர்கள் புரட்டி எடுக்க, காப்பாற்றுகிறார் த ஃபாஸ்ட் ஃபைட்டர் ஜாக்கிசான்.

அந்த சண்டை போட்ட சிறுவர்களின் மாஸ்டரிடம் போய் “சமாதானம் பேச வந்திருக்கேன். இனிமே சண்டை வேண்டாம்” ன்னு சொல்ல, அந்த மாஸ்டரோ எதிர்பார்த்தபடியே வில்லன். சண்டைல இரக்கமெல்லாம் காட்டக் கூடாது என பசங்களுக்குப் பாடம் எடுப்பவர். பிரபல கங் ஃபூ மாஸ்டர். சமாதானம் வேணும்ன்னா உங்க ரெண்டு பேருல யாராச்சும் ஒருத்தர் சண்டை போடணும் என்கிறார் அவர். வழக்கமான படமாய் இருந்திருந்தால் ஜாக்கி சான் சட்டையைக் கழற்றி, பட்டையைக் கிளப்பியிருப்பார். இந்தப் படத்தில் “இந்த பையன் வரப்போற போட்டில கலந்து சண்டை போடுவான்” என சொல்கிறார். வழக்கம் போலவே வில்லன் நக்கலடிக்க, பையனின் மாஸ்டராகிறார் ஜாக்கி.

கடைசியில் பையன் போட்டியில் வென்றானா இல்லையா என்பதை திரையில் காணாமலேயே சொல்லி விடுவோம் எல்லோருமே !

அதிரடி சண்டைக்காரர் ஜாக்கிசானுக்கு வயதாகிவிட்டது. அந்த வயதுக்கேற்ற ஒரு வேடத்தைப் பிடித்திருக்கிறார். இதுவரை அவரிடம் கவனிக்க மறந்து போன நுணுக்கமான உடல் அசைவுகளை இதில் கவனிக்க. இருந்தாலும் ஜாக்கிசான் என்றாலே பறந்து பறந்து பதறடிக்க வேண்டாமா ? ம்ம்… என்ன செய்ய !

ஜேடன் எண்பதடி பாய்ந்த குட்டி. ஆணா, பெண்ணா என்றே குழம்புமளவுக்கு மழலை முகம். கசிந்து அழும் காட்சியில் அப்படியே செவன் பவுண்ட்ஸ் வில்ஸ்மித்தின் மினியேச்சராய் தெரிகிறார். தனுஷுன் சுள்ளான் எல்லாம் பார்த்துப் பழகிப் போனதால் ஜேடனின் பென்சில் உருவம் நம்மை ரொம்ப டென்ஷன் ஆக்கவில்லை என்பது கொசுறுச் செய்தி.

படத்துக்கு ஏன் கராத்தே கிட் என்று பெயர்வைத்தார்கள் என்பது ஹாலிவுட் கடவுளுக்கே வெளிச்சம். படத்தில் படிப்பதென்னவோ கங் ஃபூ தான். நாம நினைக்கிற பிளாக் பெல்ட் சமாச்சாரங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் சீனாவில் உஷாராக “த கங்ஃபூ டிரீம்” என்று பெயரிட்டிருக்கிறார்கள் ! “நாம செய்ற எல்லா செயல்லயுமே கங் ஃபூ இருக்கிறது. இது சண்டை அல்ல சமாதானம் ” என வசனங்கள் ஆங்காங்கே பளிச்.

பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு, இசை, காட்சிகள் என படம் தொய்வில்லாமல் போகிறது. ஐஸ்வர்யா ராயும், பிரசாந்தும் ஓடி நடந்த சீனப் பெருஞ்சுவரை இன்னும் அழகாய்க் காட்டியிருக்கிறார்கள். உள்ளொளிப் பயணம், பாம்பை மயக்கும் சண்டை, ஜாக்கியின் உடைய வைக்கும் பிளாஷ்பேக் என கதையின் பயணம் பார்வையாளரைக் கட்டிப் போட்டு விடுகிறது. சீனாவின் கலாச்சாரத்தை, ஜேடனின் தலை முடியைத் தொட்டுப் பார்க்க விரும்பும் தோழியின் வழியாய் காட்டி விடுகிறார்கள், அழகான காட்சியமைப்பு.

ஹீரோ சண்டையிட்டு ஜெயிக்கும் அக்மார்க் கதை தான் என்றாலும் அதை பரபரப்பும், அழகும், வசீகரமுமாகக் காட்டியதில் கராத்தே கிட் வசீகரிக்கிறது. என்ன தான் இருந்தாலும் சீனாவுக்குள்ளே வந்து ஒரு அமெரிக்க சிறுவன் சீனர்களை அடித்து வெற்றி பெறுகிறானே ? என்று ஏதேனும் சீனப் பத்திரிகை விமர்சனம் எழுதியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கதை ராபர்ட் மார்க், திரைக்கதை கிறிஸ்டோபர். இசை, அவதார், அப்போகாலிப்டோ என அசத்திய ஜேம்ஸ் ஹார்னர். இயக்கம் ஹெரால்ட் ஸ்வார்ட்.

பார்க்கலாமா வேண்டாமா என இருதலைக் கொள்ளியாய் இருக்கும் நண்பர்களுக்கு “தைரியமாய்ப் பாருங்கள்” என்று தான் சொல்வேன்.

 

CLICK HERE TO VOTE………

Advertisements

6 comments on “த கராட்டே கிட்- எனது பார்வையில்

  1. அருமையான விமர்சனம். மிகக் கச்சிதம். இட்லிவடையிலும் ( http://idlyvadai.blogspot.com/2010/07/blog-post_10.html )தமிழ்ஹிந்துவிலும் ( http://www.tamilhindu.com/2010/07/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-the-karate-kid-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/ ) இப்படத்திற்கு விமர்சனம் வந்திருக்கிறது.

    Like

  2. இது ஒரு ஹாலிவுட் சுறா என்று சொல்லக்கூடிய அளவுக்கு மொக்கை படம்.ஏற்று கொள்ளக்கூடிய விமர்சனமல்ல.

    Like

  3. //இது ஒரு ஹாலிவுட் சுறா என்று சொல்லக்கூடிய அளவுக்கு மொக்கை படம்.ஏற்று கொள்ளக்கூடிய விமர்சனமல்ல.//

    ரசனைகள் மாறுபடும். ( இருந்தாலும் ஹாலிவுட் சுறா என்பதெல்லாம் ரொம்ப ஓவர்… விஜயை குஷிப்படுத்த சொல்றீங்கன்னு நினைக்கிறேன் )

    Like

  4. to attract the viewers of karatekid1 the movie may be named so. will smith family spoke abt the making of the movie in oprah show. for me it is a kind of kid’ s movie. after reading this i hope i may watch this.

    Like

  5. //to attract the viewers of karatekid1 the movie may be named so. will smith family spoke abt the making of the movie in oprah show. for me it is a kind of kid’ s movie. after reading this i hope i may watch this//

    நன்றி 🙂

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s