எனக்கு வந்த மின்னஞ்சல்…

அந்த மின்னஞ்சல் என்னைப் புரட்டிப் போட்டது. அண்ணா என்று அழைத்த அந்தக் கடிதம் “திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் கணவரை விபத்தில் பறி கொடுத்து விட்டேன். அவர் நினைவில் வாழும் எனக்கு, எனக்கே எனக்காய் ஒரு கவிதை எழுதித் தருவீர்களா ?” என்று வலியுடனும் உரிமையுடனும் அந்தக் கடிதம் விண்ணப்பம் வைத்திருந்தது. ஏதோ ஒரு முகம் தெரியாத சகோதரியின் மனக் குரலின் வார்த்தை வடிவமாய் அது என்னை அறைந்தது.

எத்தனையோ விதமான கடிதங்களின் மத்தியில் எனது அன்றைய தினத்தைப் கசக்கிப் போட்ட கடிதமாய் அது அமைந்து விட்டது. வாழ்க்கையில் துயரங்களின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த சகோதரியின் நிலை மனதுக்குள் இனம் புரியாத ஒரு இருளை உருவாக்கியது. தனது சோகத்தைச் சொல்லி நம்மிடம் ஒரு கவிதை கேட்கிறார்களே என்றபோது மனம் கனத்தது.

அன்றே ஒரு நீண்ட கவிதையை எழுதி அனுப்பினேன். துயரத்தின் வலிகளைச் சொல்லி பின்னர் வாழ்வின் இனிமையைச் சொல்லி கடைசியில் வாழ்வதற்கான நம்பிக்கையைச் சொல்லி அந்தக் கவிதையை முடித்திருந்தேன். எந்த வரிகளும் அவருடைய தன்னம்பிக்கையின் முனையை இம்மியளவும் சிதைக்காமல், அவருக்கு வாழ வேண்டும் எனும் உந்துதலைத் தரவேண்டுமென கவனமாய் எழுதினேன். எனக்கு அதில் முழு திருப்தி வந்தபின்பு அதை அனுப்பினேன்.

அந்தக் கவிதை அவருடைய மனதில் எத்தகைய மாற்றங்களை விளைவித்ததென்று தெரியவில்லை. கண்ணீரும், ஆனந்தமும், ஆயிரம் நன்றிகளுமாய் அவருடைய பதில் மடல் அடுத்த நாளே என்னை வந்து சேர்ந்தது. “கவிதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். எப்போதெல்லாம் மனசு கனக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் கவிதைச்சாலை தளத்துக்கு வருவேன். மனம் இலகுவாகும். கவிதைகளின் மீது எனக்கு அவ்வளவு பிரியம். இப்போது இந்தக் கவிதை எனக்கு வாழ்வின் மீதான ஒரு நம்பிக்கையையும், பிடிமானத்தையும் தந்திருக்கிறது” என்று சொன்னார்கள்.

கவிதைகளால் ஆய பயன் என்ன” என்று வாழ்க்கையைப் புரியாதவர்கள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்

தமிழிஷில் வாக்களிக்க…