இலக்கியவாதி ரஜினி ரசிகராய் இருக்கலாமா ?

பத்திரிகை உலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் இடையே எந்திரன் பற்றிய பேச்சும் வந்தது. அது வராம ஒரு பேச்சு இப்பல்லாம் இருக்க முடியுமா என்ன ?

“எந்திரன் பாட்டு கேட்டீங்களா ? ” என்று கேட்டார்.

“நல்லாயிருக்கு… ரொம்ப ரசிச்சு கேக்கறேன். கார்க்கியோட வரிகள் தான் அவ்வளவு ரசிக்கும்படியா இல்லை” ன்னு சொன்னேன்.

“உங்களுக்கு எந்திரன் பாட்டு புடிச்சிருந்துதா ?” என்று அவர் ஒரு உலக மகா ஆச்சரியத்துடன் கேட்டார். ஏதோ நான் சொல்லக் கூடாததைச் சொன்னது போல ! “ஆமா.. நான் ரஜினி ரசிகன். அதனால எனக்கு பாட்டு ரொம்பவே புடிச்சிருந்துது” என்றேன்.

“இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமாயில்லையா ?” என்றார் பட்டென்று.

“பாட்டு புடிச்சிருக்குன்னு சொல்றதுக்குக் கூட வெக்கப்படணுமா என்ன?” என்றேன்

அதைச் சொல்லல. ரஜினி ரசிகர்ன்னு சொல்றீங்களே ! ஒரு எழுத்தாளர் இப்படி சொல்லலாமா ? என்று ஆரம்பித்தார். அப்புறம் அவரோட பட்டறிவு அகராதியிலிருந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். நம்ம சின்ன மூளைக்குள் அதெல்லாம் சென்று சேரவில்லை. அவரோட பேச்சு தான் ஆச்சரியத்தையும், கேள்விகளையும் எழுப்பி விட்டுக்கொண்டிருந்தது.

ஒருவேளை இலக்கியவாதியாய் இருப்பவர்களுக்கு ரஜினியைப் பிடிக்கவே கூடாது என்று ஏதேனும் விதிமுறை வைத்திருக்கிறார்களோ என்னவோ ?

நான் பொதுவாகவே அறிவு ஜீவிகளை விட்டுத் தள்ளியே இருக்க விரும்புவேன். அதுக்குக் காரணம் இல்லாமலில்லை. “நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கல” ங்கற ஒரு வரியையே “அடுத்த நாளைக்குறித்த பிரக்ஞையற்று வனாந்தர வெளியில் வட்டமடிக்கிறது மனசு” என்று எழுதினால் தான் இலக்கியம் என்று பேசுபவர்கள் சுத்த போர் எனக்கு. ஒரு பக்கக் கட்டுரையை அரை நாள் படிக்குமளவுக்கு சுழற்றிச் சுழற்றி எழுதும் பலரை நான் நிராகரித்ததுண்டு. தினத்தந்தி ரேஞ்சுக்கு சிம்பிளா இருந்தா போதும் என்பது என் சிந்தனை. எழுத்து என்பது தமிழ் தெரிந்த எல்லோருக்குமே புரியவேண்டும், இலக்கியம் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல.

சினிமா குறித்த பேச்சுகளில் ரஷ்ய படம், ஈரானிய படம், குறும்படம் என்று நான்கு விஷயம் பேசுவதை கௌரவமாய் நினைப்பவர்கள் உண்டு. கூகுளில் தேடி பெயரைப் படித்து விட்டு வருவார்களோ எனும் சந்தேகம் எனக்குண்டு.

ஒரு இலக்கிய விமர்சகர் ஒருவரிடம் ரெண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சார்த்தரைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதாய் இல்லை. உங்களுக்கு சார்த்தரைப் பிடிக்குமா என்றார்.

“ஆல்ஃபர்ட் மால்கம் எழுதிய சூயிசைடல் திங்கிங் தான் எனக்குப் பிடிச்ச நூல்” படிச்சுப் பாருங்க, அசந்துடுவீங்க என்றேன். அப்படி ஒரு நூலும் கிடையாது, எழுத்தாளரும் கிடையாது.

“அந்த புக் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா படிச்சதில்லை” என்றார் அவர். இல்லாத ஒரு புக்கைச் சொன்னால் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே கவுரவம் என்று நினைக்கிறாரே என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

எதுக்குத் தான் இப்படி அடுத்தவங்களுக்காக வாழறாங்களோ மக்கள். இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் “இது என்னோட அப்பான்னு சொல்ல வெக்கப்படற பையன்” கதை தான் ஞாபகத்துக்கு வரும். என்னைப் பொறுத்தவரை, ரசனையில் உயர் ரசனை கீழ் ரசனை என்றெல்லாம் கிடையாது. அது தனிப்பட்ட சிலிர்ப்புகள் சார்ந்தது. அதீத ரசனை பற்றிப் பேசற சிலர் தங்களோட தனி வாழ்க்கையில் நிகழ்த்தும் சில “ஆங்…” ரக ரகசிய ரசனைகள் நமக்குத் தெரியாததா ?

சரி அதெல்லாம் இருக்கட்டும், எந்திரன் பிரிவியூ டிக்கெட் ஒண்ணு கிடைக்குமா ?

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்