வாங்க ஜெயிக்கலாம் : எனது புதிய நூல்

“இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க” எனக்கு முன்னால் கத்தையாய் கொஞ்சம் பேப்பரைப் போட்டார் பிலால், பிளாக் ஹோல் மீடியா நிறுவனர்.

ஏதோ ஸ்கூல் பிள்ளைங்களோட பரீட்சை பேப்பர் போல இருந்தது. வித விதமான கை எழுத்துகளில் கிறுக்கலாய் கிடந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து வாசித்தேன். புரியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“என்ன தலைவரே இதெல்லாம் ?”

தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அவர், அருகில் ஆசிரியர் யாணன் அவர்கள்.

ஒருபக்கம் பெண்கள் வளர்கிறாங்கன்னு சொல்றோம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக் காணோம். அப்படி என்னென்ன பிரச்சினைகளைத் தான் பெண்கள் முக்கியமா எதிர்கொள்றாங்க ? அவங்களுக்கு இன்னிக்கு என்னென்ன விஷயத்துல பாதுகாப்பும், ஆலோசனையும் தேவைன்னு யோசிச்சோம். பெண்களோட பிரச்சினையை பெண்களே சொல்லட்டுமேன்னு முடிவு பண்ணினோம். அதோட விளைவு தான் இந்தப் பேப்பர்கள் !

வேலைபாக்கிற பெண்கள் தொடங்கி படிக்கிற பெண்கள் வரை நிறைய பேர்கிட்டே பேப்பரைக் கொடுத்து அவங்களுக்கு ஆலோசனை தேவைப்படற ஐந்து பிரச்சினைகளை எழுதச் சொன்னோம். அந்தப் பிரச்சினைகள் தான் இந்தக் காகிதங்கள்ல இருக்கு.

இந்தப் பிரச்சினைகள்ல முக்கியமான சில பிரச்சினைகளை எடுத்து ஒரு நல்ல புக் போடணும். அது பெண்களோட பிரச்சினைகளுக்கு ஒரு தோழியா கூடவே இருந்து வழிகாட்டணும். அதுதான் பிளாக் ஹோல் மீடியாவோட ஐடியா.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். படிகப் படிக்க வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை ? பெண்கள் வளர வளர அவர்களுக்கு எதிரான சதி வலைகளும் கூட வளர்கிறதோ எனும் பயமும் உருவாகிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகளும், புதைகுழிகளும் அவர்களுடைய பாதைகளில் மறைந்து தான் கிடக்கின்றன. வாசித்தவற்றில் பல பிரச்சினைகள் புதியவை. சில பிரச்சினைகள் விகடன், பெண்ணே நீ போன்ற இதழ்களுக்காக பிரத்தேயகமாக எழுதப்பட்டவை.

“என்ன செய்யலாம் சொல்லுங்க” என்றேன்.

அந்தந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது, பிரச்சினைகளைக் குறித்து அலசி ஆராய்வது, கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து கட்டுரைகள் எழுதுவது என முடிவானது !

அப்படி எழுதப்பட்ட கட்டுரைகள் தான் “வாங்க ஜெயிக்கலாம்” எனும் கட்டுரைத் தொகுப்பு.

பெண்களோட வளர்ச்சிக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்களை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. “நீ நெருப்பின் நடுவில் இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போகாமல், எப்படி வெந்து போகாமல் வெளியே வருவது என்றும் இந்த கட்டுரைகள் வழிகாட்டுகின்றன.

வெற்றி என்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ பெறும் மதிப்பெண்களில் மட்டும் அடங்கிவிடுவதல்ல. சமூகம் நம்மீது திணிக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஜெயித்துக் காட்டுவது தான். வாங்க ஜெயிக்கலாம் நூல் அந்தப் பணியை திறம்படச் செய்திருக்கிறது என நம்புகிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால், வாசித்துப் பாருங்கள்.வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

Pages : 172,  Rs : 130/-

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

வாக்களிக்க விரும்பினால் கிளிக்குங்கள்

2 comments on “வாங்க ஜெயிக்கலாம் : எனது புதிய நூல்

  1. அடுத்த புத்தகம் எங்களுக்காக எழுதுங்கள் நண்பரே!,. பெண்களுக்காக கவலைப்பட சிலர் இருக்கின்றார்கள். எங்களுக்குதான் யாருமில்லை.

    ஜெகதீஸ்வரன்.

    Like

  2. /அடுத்த புத்தகம் எங்களுக்காக எழுதுங்கள் நண்பரே!,. பெண்களுக்காக கவலைப்பட சிலர் இருக்கின்றார்கள். எங்களுக்குதான் யாருமில்லை/

    பண்ணிட்டா போச்சு…

    Like

Leave a comment