INVICTUS : எனது பார்வையில்

ஹாலிவுட்டின் நடிப்பு ஜாம்பவான் கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கிறார் என்பதனாலேயே சிறப்புக் கவனம் பெறுகிறது இன்விக்டஸ் படம்.

தனது கால்நூற்றாண்டு தாண்டிய சிறை வாசத்திலிருந்து வெளியே வருகிறார் நெல்சன் மண்டேலா. சில ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இன மக்களோ இனிமேல் தங்கள் வாழ்வு அவ்வளவு தான் என நினைத்துக் கொள்கிறார்கள். கருப்பு இன மக்களோ இது வெள்ளையர்களுக்கு எதிரான பழி தீர்க்கும் காலம் என நினைத்துக் கொள்கிறார்கள். இருவருடைய சிந்தனையும் தவறு, தனது எண்ணம் அனைவரையும் அரவணைத்து ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புவதே என்கிறார் மண்டேலா !

இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது ரக்பி விளையாட்டு ! . அமெரிக்கன் புட்பால். ஸ்பிரிங்பக்ஸ் எனும் தென்னாப்பிரிக்க விளையாட்டுக் குழுவில் இருப்பவர்கள் ஏறக்குறைய எல்லோருமே வெள்ளையர்கள். அவர்கள் விளையாட்டிலும் சொதப்பிக் கொண்டிருந்த காலம். இவர்கள் குழுவைக் கலைத்து விட்டு கருப்பர்களைக் கொண்டு புதிய குழுவை ஆரம்பிக்க வேண்டுமென விளையாட்டுக் கமிட்டிகளெல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. மண்டேலாவோ, அந்தக் குழுவை ஆதரித்து அதை உலகக் கோப்பை வெல்ல வைப்பதன் மூலம் வெள்ளையர் கறுப்பர் பாகுபாட்டை உடைக்க நினைக்கிறார்.

அந்த விளையாட்டுக் குழுவின் தலைவர் மேட் டிமான். அவரை தனியே தேனீர் விருந்துக்கு அழைத்து உற்சாகமூட்டி, தொடர்ந்த ஆதரவை அந்த அணிக்கு வழங்குகிறார். தனது பாகுபாடற்ற நிலையை மிகத் தெளிவாக வரையறுத்து, அணியை வெற்றி பெறச் செய்து ஒன்று பட்ட மனநிலையை மக்களிடையே உருவாக்குகிறார் என்பதே கதை !

நெல்சன் மண்டேலாவாக வாழ்ந்திருப்பவர் மார்கன் ஃபிரீமேன். அவருடைய நடிப்பைப் பற்றிப் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஜஸ்ட் லைக் தேட் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அவரோடு போட்டி போட்டு விளாசியிருக்கிறார் மேட் டிமான். பார்ன் சீரீஸ் போல அதிரடிக்கு எந்த வாய்ப்பும் இல்லாத அடக்கமான கேரக்டர். அதிலும் ஜொலிக்கிறார் அவர். குறிப்பாக ஜனாதிபதி தனக்கு தனியே ஸ்பெஷல் தேனீர் விருந்து வழங்கும் காட்சியில் மார்கனின் நடிப்புக்குச் சவால்விடும் நடிப்பில் அசத்துகிறார் மேட் டிமான்.

காட்சியமைப்புகள் படத்தின் மீதான தாக்கத்தையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கின்றன. இன்விக்டஸ் என்பது ஒரு கவிதை. வில்லியம் ஹென்லே என்பவரால் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட கவிதை அது. நீதான் உன் விதிக்கும், உன் ஆன்மாவுக்கும் ஆசான் ! என்பது தான் கவிதையின் கரு. அது தான் மண்டேலாவின் சிறை வாழ்வில் ஊக்கமளித்த கவிதை. அதைக் கைப்பட எழுதி மேட் டிமானுக்குக் கொடுத்து அவரை ஊக்கப்படுத்துகிறார்.

விளையாட்டுக் குழுவில் இருந்தவர்கள் எப்படி மண்டேலாவை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை.  அந்த கடைசி விளையாட்டு ரொம்பவே இழுக்கிறது ! இப்படி ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் அவை நிறைகளினால் மறைந்து விடுகின்றன.

மண்டேலாவின் எளிமை, அவருடைய செயல்பாடுகள், மக்களுடன் அவர் கொண்டிருந்த ஸ்நேகம், அவருடைய இயல்பான வாழ்க்கை என இப்படி ஒரு தலைவர் எல்லா நாட்டுக்கும் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கிறது படம்.

உணர்ச்சிபூர்வமாக காட்சிகளும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காட்சிகளும், பரபப்பான காட்சிகளுமாய் வசீகரிக்கிறது இன்விக்டஸ்.

வாய்ப்புக் கிடைத்தால் தயங்காமல் பார்க்கலாம்…

படித்தது பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…