ஆண்களே “பெல் பஜாவோ”

 சாய்வு நாற்காலியில் ஓய்வாக அமர்ந்து ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் அழுகுரல் காதில் வந்து விழுகிறது.

“ஐயோ… பிளீஸ்…. நான் வேணும்னே உடைக்கல. தெரியாம உடஞ்சுடுச்சு”

“ஓ… என்னை எதிர்த்துப் பேசறியா நீ… பளார்ர்…”

“ஆ….”

பக்கத்து வீட்டு சண்டையில் கோபமடையும் அந்த நபர். சட்டையை மாட்டிக் கொண்டு இறுக்கமான முகத்துடன் விறுவென நடந்து அந்த வீட்டை அடைகிறார். கதவுக்கு முன்னால் போய் நின்று அழைப்பு மணியை அடிக்கிறார்.

உள்ளே சண்டை நின்று போக, சட்டென நிசப்தம்.

குழப்ப முகத்துடன் கதவைத் திறக்கிறார் அந்த கொடுமைக்கார கணவன். என்ன வேண்டும் எனும் கேள்வி அவருடைய முகத்தில்.

“பால்… கொஞ்சம் பால் கிடைக்குமா ?” வந்தவர் இறுக்கம் தவிர்க்காமல், இமைக்காமல் அவரைப் பார்த்துக் கேட்கிறர்.

“ம்…”

கதவை மூடிக் கொண்டு உள்ளே சென்ற நபர் கொஞ்ச நேரத்தில் ஒரு சின்ன டம்ப்ளரில் பால் கொண்டு வருகிறார். வெளியே அந்த நபர் இல்லை ! குழப்ப முகத்துடன் திரும்பும் அவருக்கு ஒரு விஷயம் புரிகிறது. “வந்த நபருக்கு நம்ம வீட்டுச் சண்டை தெரிஞ்சிருக்கு”

ஒரு நிமிடம் ஓடும் சின்ன குறும்படம் இது. இதே போல பல சின்னச் சின்ன படங்கள். சண்டை நடக்கும் வீட்டில் சென்று பெல்லை அடித்து “உன்னோட தண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும் என சொல்லாமல் சொல்வது தான் இந்தப் படங்களின் கான்சப்ட் !”

பக்கத்து வீட்டில் ஒரு சண்டை நடத்தால் “அவங்க குடும்ப விஷயத்துல எதுக்கு நாம தலையிடறது” என்று ஒதுங்கக் கூடாது. அந்தச் சண்டையை நிறுத்த பக்கத்தில் இருக்கும் ஆண்கள் ஒரு சின்ன துரும்பையாவது எடுத்துப் போடவேண்டும் என்கிறது இந்த இயக்கம்.

“பெல் பஜாவோ” என்பது இந்த இயக்கத்தின் பெயர்.”ரிங் த பெல்” என ஆங்கிலத்திலும் “மணியை அடியுங்கள்” என தமிழிலும் சொல்லலாம். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க ஆண்கள்  முன் வரவேண்டும். இந்த சிந்தனையுடன் குட்டிக் குட்டிக் கிரியேட்டிவ் படங்களுடன் களமிறங்கியிருக்கிறது இந்த இயக்கம்.

அடுத்த வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் நாளை நமது சந்ததியினருக்கு நடக்கலாம். அல்லது நமது சகோதரிகளுக்கு நடக்கலாம். இது எப்போதும் அடுத்தவர் பிரச்சினையாய் இருக்கப் போவதில்லை. இந்த சிக்கலுக்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளி வைப்பதற்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் களமிறங்க வேண்டும் என்கிறது இந்த அமைப்பு.

பக்கத்து வீட்டு பெல்லை அடிப்பதற்கு ஆயிரம் நொண்டிச் சாக்குகள் சொல்லலாம். “ஒரு போன் பண்ணிக்கலாமா ?”, “டைம் என்ன ஆச்சுங்க ?”, கிரிக்கெட் பால் உள்ளே விழுந்துதா ?” இப்படி ஏகப்பட்ட ஐடியாக்களைச் சுமந்து வருகின்றன இந்த கனமான விளம்பரப் படங்கள். இந்த ஒரு நிமிடப் படங்களில் வருபவை ஓரிரு வார்த்தைகள் தான். ஆனால் படம் உருவாக்கும் தாக்கமோ அதி பயங்கரமாக இருக்கிறது.

பெண்களில் மூன்றில் ஒருபாகத்தினர் அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் வன்முறைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்தகைய விழிப்புணர்வையும், சமூக பங்களிப்பையும் அளிக்கும் இந்தக் குறுப்படங்களை இயக்கியிருப்பது புத்தாயன் முகர்ஜியின் லிட்டில் லேம்ப் பிலிம்ஸ் எனும் நிறுவனம்.

மனித உரிமைகளை மீண்டெடுக்கத் துடிக்கும் “பிரேக்துரூ” எனும் அமைப்பு தான் இந்த பெல் பஜாவோ திட்டத்தின் மூளை. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பை ஆரம்பித்தவர் மல்லிகா தத் எனும் பெண்மணி. கொல்கொத்தாவில் 1962ம் ஆண்டு மார்ச் 29ம் தியதி பிறந்தவர் இவர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலைமையகங்களைக் கொண்டு இந்த அமைப்பு இன்று  வலுவாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

பெல் பஜாவோ, சமூகத்தின் விழிப்புணர்வையும், பொறுப்புணர்வையும் அதிகரித்திருக்கிறது. ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிய இந்த படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உலக அளவிலான கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத் தக்கது.

பெல் பஜாவோ இப்போது “மினிஸ்ட்ரி ஆஃப் விமன்” மற்றும் “சைல்ட் டெவலப்மெண்ட்” போன்ற அரசு அமைப்புகளோடு இணைந்து தனது பணியை விரிவுபடுத்தியிருக்கிறது.

“பெண்களுக்கான பிரச்சினைகளை பெண்கள் அமைப்புகள் முன்னெடுத்துச் செல்வதும், அவர்களே போராடுவதும் தான் வாடிக்கை. பெண்கள் சமூகத்தின் அங்கம். அவர்களுக்காக ஆண்கள் குரல் கொடுக்கவேண்டியது அவசியம். சமூக மாற்றத்திற்கு ஆண்கள் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். பெண் உரிமையில் தங்கள் பங்களிப்பை அழுத்தமாய்ப் பதிக்கவேண்டும்” என உணர்வு பூர்வமாகப் பேசுகிறார் பிரேக் துரூவின் கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் இயக்குனர் சோனாலி கான். “இது என் வேலையில்லை” எனும் ஆண்களுடைய மனநிலையை அழிக்க வேண்டியது அவசியம் என்கிறார் தயாரிப்பாளர் முகர்ஜி.

அடுத்த முறை பக்கத்து வீட்டிலோ, அப்பார்ட்மெண்ட்லோ பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தால் அமைதியாய் இருக்காதீர்கள். தைரியமாகப் போய் “பெல் அடியுங்கள்”. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான முடிவின் துவக்கமாய் அது அமையும்.

பிடித்திருந்தால்….. வாக்களிக்க விரும்பினால்…கிளிக்…