கல்கியில் எனது : “நல்லா இருக்கியா மக்களே…”

இலக்கியங்கள் சொன்ன எழிலெல்லாம் இன்னும் மிச்சம் இருப்பது கிராமத்தின் பக்கங்களில் மட்டும் தான் என்பது புரட்டிப் பார்க்கும் போது புரிகிறது. குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள எனது கிராமத்தின் பெயர் பரக்குன்று. நாகர்கோவிலில் இருந்து 39 கிலோமீட்டர் தூரம், மார்த்தாண்டத்திலிருந்து ஏழு கிலோமீட்டர், களியக்காவிளையிலிருந்து மூன்று கிலோமீட்டர் என வரைபடம் சொல்லும். கேரளாவும் தமிழகமும் கைகுலுக்கிக் கொள்ளும் குளிர்த்தென்றல் இந்தக் கிராமத்தின் பூர்வீகச் சொத்து.

பரந்த குன்றுகளால் அமைந்த இடமானதால் இதற்கு இந்தப் பெயர்வந்ததாக பாட்டிமார் பெயர்க்காரணம் சொல்கிறார்கள். காடும் காடு சார்ந்த இடமுமான மருத நிலப் பகுதியின் மிச்சமாக இருக்கிறது கிராமம். ஒரு காலத்தில் மலையிலிருந்து கரடிகள் இறங்கி வந்து குடிசை வீட்டுக்குள் எட்டிப் பார்த்துச் செல்லும் எனும் சிலிர்ப்புக் கதைகளும் உலவுவதுண்டு.

நாகரீகம் நாலுகால் பாய்ச்சலில் கிராமத்திற்குள் நுழைந்த போதிலும் இன்னும் தனது அடையாளங்களை அவிழ்த்தெறியாமல் இருப்பது சுகமான அனுபவம். மத நல்லிணக்கத்தின் இதமான காற்று நிதமும் வீசிக்கொண்டிருக்கும் எனது  கிராமத்தில் இரண்டு மத அடையாளங்கள் உண்டு. ஒன்று இந்துக்களின் வழிபாட்டு இடமான சாஸ்தான் கோயில். அடர்ந்த ஆலமரமும், அழகிய சர்ப்பக் குளமும் அருகிலேயே அமைந்திருக்கும் இந்துக் கோயிலும் அழகியலின் வெளிப்பாடுகள். பாம்புகள் தொங்கி விளையாடும் ஆலமரத்தைப் பார்க்கையில் பால்யத்தில் மனதுக்குள் பயம் ஓடித் திரியும்.

இன்னொன்று இயேசுவின் திரு இருதய ஆலயம். 1957ம் ஆண்டு ஜெர்மன் பாதிரியார் ஜேம்ஸ் தொம்மரால் கட்டப்பட்ட இந்தக் கோயில் இந்திய மத அடையாளங்களோடு கட்டப்பட்டிருப்பது வியப்பு. உள்ளே தூண்களெல்லாம் இந்துக் கோயில்களின் பிரதிபலிப்பு, கோபுரம் இஸ்லாமிய தொழுகைக் கூடத்தின் பிரதிபலிப்பு என சர்வ மத ஒற்றுமையின் அடையாளமாய் நிமிர்ந்து நிற்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. இவர் பக்கத்து ஊரில் கட்டிய ஆலயத்தில் இயேசு வேட்டி கட்டிக் கொண்டு நிற்கிறார் என்பது சுவாரஸ்யச் செய்தி.

இந்துக்களின் ஆலய விழாக்களில் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வதும், கிறிஸ்தவ மேடைகளில் இந்துத் தலைவர்கள் சமத்துவ உரை நிகழ்த்துவதுமெல்லாம் மனதை நனைக்கும் உறவின் வெளிப்பாடுகள்.

கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் என அணிவகுத்திருந்த கிராமத்தில் காங்கிரீட் வீடுகளெல்லாம் சமீபத்திய அறிமுகங்கள் தான். மலையாளக் கரையோரம் இருப்பதால் கேரள விழாக்களெல்லாம் இங்கே பிரசித்தம். ஓணத்துக்கு ஊஞ்சல் போடுவதும், ஓணக்கோடி உடுத்தி அத்தப்பூ வைப்பதும் இங்கே சர்வசாதாரணம் ! நடந்தே மலையாள மண்ணுக்குப் போய்விடலாம் என்பதால், கலாச்சாரக் கைகுலுக்கல்களெல்லாம் நிகழ்ந்தே தீரும் என்பதே உண்மை.

எங்கள் கிராமத்து மொழியிலும் மலையாளத்தின் வாசம் வீசுகிறது. எனினும் இதை வேனாடு மலைத் தமிழ் என சிற்றிதழ்க் குழுக்கள் அழைக்கின்றன. செந்தமிழ் வார்த்தைகளான சூலி போன்றவையெல்லாம் இங்கே புழங்கப்படுவதில் தமிழின் தொன்மை புலனாகிறது என்று சிலாகிக்கின்றனர் ஆய்வாளர்கள். நலமா என்பதை “நல்லா இருக்கியா மக்களே” என வெற்றிலை வாசத்துடன் விசாரிக்கும் திண்ணைப் பாட்டிகளின் அன்பில் நிரம்பிக் கிடக்கிறது பாசம்.

கிராமத்தில் நேர்வகிடெடுத்துப் பாயும் சானல்(கால்வாய்) பால்யகாலத்து நீச்சல் நிலையம். வருடங்களின் புரட்டலில் அது வலுவிழந்து போனாலும் இன்னும் முழுமையாய் அழிந்து போகாதது ஒரு தற்காலிக ஆறுதல்.

குடை சரிசெய்ய வருபவர்களும், அம்மி கொத்த வருபவர்களும், பாத்திரத்தில் ஓட்டை அடைக்க வருபவர்களும், அவல் விற்க வருபவர்களெல்லாம் இங்கும் கதைகளாகிப் போய்விட்டார்கள். மலையிலிருந்து சங்கிலி இழுத்து வரும் பேய்களெல்லாம் இப்போது மின்சாரப் பூசாரியால் துரத்தப்பட்டிருக்கிறது.

பொதுவுடமையாய் இருந்த புறுத்திச் சக்கை (அன்னாசிப்பழம்), வரிக்கை சக்கை (பலா ), பேரக்கை (கொய்யா) , பப்பாளி எல்லாவற்றையும் இன்று ரப்பர் அழித்திருப்பது மனதுக்குள் கனமாய் வந்து அமர்ந்து கொள்கிறது. பனை மரங்களால் நிரம்பியிருந்த தோட்டங்களிலெல்லாம் இன்று ரப்பர் மரமே ஆட்சி செலுத்துகிறது. நாற்றுகளும், வாழைமரங்களும் அணிவகுத்திருந்த வயல்களில் கூட இன்று ரப்பர் மரங்கள் ஒற்றைக் காலூன்றிவிட்டன.

ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மாற்றங்கள் விரைவில் கிராமம் தனது தனித்தன்மையை முற்றிலும் இழந்து விடுமோ எனும் அச்சத்தைத் தராமலில்லை. இருந்தாலும் வெளியூர்ப் பறவைகளான நகர்ப்புறவாசிகளுக்கு பரக்குன்று கிராமம் விடுமுறை வேடந்தாங்கலாய் தான் இருக்கிறது.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

7 comments on “கல்கியில் எனது : “நல்லா இருக்கியா மக்களே…”

 1. நல்ல பதிவு . கிராமத்திற்கே சென்று வந்த திருப்தி .

  //விரைவில் கிராமம் தனது தனித்தன்மையை முற்றிலும் இழந்து விடுமோ எனும் அச்சம்\\

  நியாயமான பயமும்கூட

  Like

 2. உங்கள் எழுத்து கல்கியில் வெளியாவதெல்லாம் பெரிய காரியமில்லை. . நல்லா இருங்க மக்களே

  Like

 3. //நலமா என்பதை “நல்லா இருக்கியா மக்களே” என வெற்றிலை வாசத்துடன் விசாரிக்கும் திண்ணைப் பாட்டிகளின் அன்பில் நிரம்பிக் கிடக்கிறது பாசம்.//
  இனிய மண்வாசனையை நுகர்ந்த மகிழ்வு, உங்கள் கட்டுரையைப் படித்த பின்பு!… நீங்கள் நலமுடனிருக்க என் பிரார்த்தனைகள்!… உங்கள் கலைப்பயணம் தொடர வாழ்த்துகள் சேவியர்!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s