தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

 

“இங்கே தானே வெச்சேன் எங்கே போய் தொலஞ்சுச்சோ தெரியலையே” ங்கற களேபரம் காலம் காலமா நடந்திட்டு இருக்கிற ஒரு விஷயம் தான். தாத்தாக்கள் தலையில கண்ணாடியை வெச்சுட்டு கண்ணாடி எங்கேன்னு தேடுவாங்க. பாட்டிங்களுக்கு சீப்புப் பிரச்சினை. இப்போ ஹைடெக் காலத்துல இளசுகளோட பிரச்சினை மொபைல். என் மொபைலைப் பாத்தீங்களா என தேடுவது வீடுகளில் வாடிக்கையாகிவிட்டது.

மொபைலை வைத்துப் பேசலாம் என்பது முந்தைய நிலை. “பேசவும் செய்யலாம்” என்பது தான் இன்றைய நிலை. இன்றைய மனிதர்களின் ஆறாம் விரல் இந்த மொபைல் தான். அது இல்லாவிட்டால் ஏதோ ஆளில்லாத தீவில் தத்தளிக்கும் ஆமையைப் போல தடுமாறி விடுகிறது மனசு. பெயர் இல்லாத மனுஷன் கூட இருக்கலாம், ஆனா போன் இல்லாத மனுஷன் இருக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு இப்போதைய மொபைல் ஆதிக்கம் கலிபோர்னியா காட்டுத் தீயாய் பற்றிப் படர்கிறது.

இந்த இடத்துல தான் நியூட்டனோட மூணாம் விளையாடுது. எந்த வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு ! மொபைல் போன் அதிகரிக்க அதிகரிக்க, மொபைல் போன் தொலைந்து போவதும் அதிகரிக்கிறது. மொபைல் போன் தொலைந்து போவது இரண்டு வகையாக நடக்கலாம். ஒன்று கவனக் குறைவாய் நீங்களே உங்க மொபைலை எங்கேயாவது விட்டு விட்டு வந்திருக்கலாம். அல்லது யாரோ கில்லாடி கிட்டு உங்களிடமிருந்து அதைச் சுட்டுவிட்டிருக்கலாம்.

முன்பெல்லாம் மொபைலை யாரேனும் திருடிவிட்டால் அது உடனே அவருடைய சொந்தப் பொருளாக ஆகிவிடும். சிம்மைக் கழற்றி எறிந்து விட்டால் போன் கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகிவிடும். போனைக் கண்டுபிடிப்பதை விட நாலு கொம்புள்ள குதிரையைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல. டெக்னாலஜி வளர்கிறது. மொபைலைத் திருடிச் சென்றாலும் அதை விரைவிலேயே கண்டுபிடித்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். 

ஒரு மொபைலை வாங்கினவுடனே என்ன பண்ணுவீங்க ? பேனா வாங்கினா காதலி பெயரை எழுதிப் பாக்கற மாதிரி யாருக்காச்சும் போன் பண்ணி ரொமான்சுவீங்களா ? இல்லேன்னா ஒரு சாமி படத்தை போட்டோ எடுத்து வெச்சுப்பீங்களா ? இல்லை ஓரத்துல மஞ்சள் தடவி பூஜை பண்ணுவீங்களா ? இது எதுவானாலும் அது இரண்டாம் பட்சம் தான். முதல்ல போனோட IMEI நம்பரை நோட் பண்ணி வையுங்க. அதான் ரொம்ப முக்கியம். இண்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடெண்டிடி என்பது தான் இதன் விரிவாக்கம். அதாவது சர்வதேச மொபைல் எண். ஒவ்வொரு மொபைலுக்கும் தனித் தன்மையான ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது பதினைந்து இலக்க எண்.

உங்க மொபைல்ல பொதுவா பேட்டரிக்குக் கீழே இந்த எண் குறிக்கப் பட்டிருக்கும். முதலில் இந்த எண்ணை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். . நம்பர் எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்க முடியலேன்னா போன்ல இருந்து *#06# ன்னு டைப் பண்ணுங்க, போனே அந்த எண்ணை திரையில் காட்டும் !

மேட் இன் சீனா, கொரியன் போன்களை வாங்கினால் இந்த எண் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அத்தகைய போன்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏன்னா, இப்படிப்பட்ட போன்களை கண்டு பிடிக்க முடியாது, இத்தனைய போன்கள் தீவிரவாதம் போன்ற தப்பான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

மொபைல் தொலைந்து போனால் என்ன செய்வீர்கள். புலம்புவதையும், புது மொபைல் வாங்குவதையும் தவிர ! பெரும்பாலானவர்கள் இந்த இரண்டு விஷயங்களோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். மொபைல் தொலைந்து போனால் இரண்டு இடங்களுக்கு அந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ! இரண்டாவது உங்களுடைய செல்போன் சேவையாளர். இந்த இரண்டு இடங்களிலும் போக உங்கள் ஐ.எம்.இ.ஐ எண் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

அது இல்லாமல் போனைக் கண்டுபிடிப்பது வெகு சிரமம். இந்த எண் இருந்தால் போனைத் திருடியவர் எந்த சிம்மைப் போட்டாலும் கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகம். காரணம் அந்த போனிலிருந்து செல்லும் எல்லா அழைப்புகளிலும் இந்த எண் ஒரு சங்கேதக் குறியீடாய் இணைந்திருக்கும் என்பது தான் !  ஒருவேளை அப்படி கண்டுபிடிக்கவே முடியாவிட்டால் கூட அந்த போனை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய முடியும் ! அதனால் தான் இந்த எண் மிகவும் முக்கியமான இடத்தில் கம்பீரமாய் இருக்கிறது. யூ.கே உட்பட சில நாடுகளில் இந்த ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முயல்வது கூட சட்டப்படி குற்றமாகும். சில நாடுகளில் அது கிரிமினல் குற்றம் !

இதையும் தாண்டி பல ஹைடெக் விஷயங்கள் இப்போதைய போன்களில் உண்டு. முக்கியமானது சில மென்பொருட்கள். சில மென்பொருட்களை உங்கள் மொபைலில் நிறுவினால் உங்கள் மொபைல் போன் இருக்கும் இடத்தை கம்ப்யூட்டர் மூலமாகவே கண்டு பிடித்து விட முடியும் என்பது லேட்டஸ்ட் டெக்னாலஜி.

சில சாப்ஃட்வேர்கள் சுவாரஸ்யமானவை. திருட்டுப் பேர்வழி நம்ம சிம்மை கழற்றி விட்டு ஒரு புது சிம் போட்டதும் ஒரு மெசேஜ் வரும். “ஐயா, இது உங்க போன் இல்லை. இது இந்த நபரோடது. மரியாதையா குடுத்துடுங்க” ன்னு. அதே நேரம் உங்கள் புது எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும் உங்க போன் எங்கே இருக்குங்கற விவரங்களோடு. அதோட முடியுமான்னா அதுவும் இல்லை. போன் சத்தம் போட ஆரம்பிச்சுடும். திருடினவனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடும். வேற வழியில்லாம சுவிட்ச் ஆஃப்லயே வெச்சிருக்க வேண்டியது தான்.

ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் சில குறிப்பிட்ட மென்பொருட்களை பரிந்துரை செய்வதால், நீங்கள் எந்த மொபைல் வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து அதை முடிவு செய்யுங்கள். மொபைல் வாங்கும்போதே கடைகளில் அதற்குரிய விவரங்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் போனில் “பாஸ்வேட்” வசதி உண்டென்றால் அதை முதலில் செயல்படுத்துங்கள். ஒவ்வொரு வாட்டியும் பாஸ்வேர்ட் போடணுமா என சலிச்சுக்காதீங்க. உங்கள் மொபைல் தொலைந்தாலும் உங்கள் தகவல்கள் பெரும்பாலும் பாதுகாப்பாய் இருக்க அது உதவும். உங்கள் சேவை தரும் நிறுவனத்திடம் சொல்லி உங்கள் எண்ணை “தடை” செய்ய வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம்.

மொபைல் போன்களை கண்டு பிடிக்க டிராக்கர் இணைய தளங்களும் உள்ளன.  இதில் உங்கள் தொலைந்து போன மொபைல் எங்கே இருக்கிறது என்பதை வரைபடம் மூலமாக கண்டு பிடித்து விடும் வசதி உண்டு. குறிப்பாக ஜி.பி.எஸ் எனப்படும் வசதியுள்ள மொபைல் போன்களைத் திருடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி ஏகப்பட்ட டெக்னாலஜி வசீகரங்கள் இருப்பதால் மொபைலைக் காணோமென்றால் உடனே பதட்டப்பட்டு, குழம்பி, பயந்து, எரிச்சலடையாதீர்கள். வருமுன் காக்கும் வழிகளை மனதில் கொள்ளுங்கள். 

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

16 comments on “தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

 1. மிகவும் பயன்தரும் விடையங்கள்… உங்கள் சேவைக்கு நன்றி சேவியர்!

  Like

 2. /மிகவும் உபயோகமானது. அந்த தளங்களின் முகவரியையும் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்//

  நன்றி சகோதரா… எப்படி இருக்கீங்க…

  Like

 3. நல்ல பதிவு. அரசாங்கம் எல்லா அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களையும் ” மொபைல் டிராக்கர்” வசதியை கண்டிப்பாக எல்லா அலை பேசிகளிலும் இருக்குமாறு வலியுறுத்தினால் நுகர்வோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  என்னுடைய அனுபவத்தில் காவல் நிலையங்களில் அலைபேசி தொலைந்து போனதாக புகார் கொடுத்தால் அவர்கள் உடனடியாக FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்லை. காரணம் : அப்படி செய்தால் நீதிமன்றம் போன்று புகார்கள் முடிக்க முடியாமல் குவிந்து விடும். ஆகையினால் மேற்கொண்டு சொன்ன ” மொபைல் ட்ராக்கர்” வசதி இருவருக்கும் உபயோகமாக இருக்கும்.

  Like

 4. மொபைல் பாக்ஸ்ல இருக்கர ஐ எம் இ நம்பரும் மொபைல இருக்கர ஐ எம் இ ஒன்னா?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s