கண் விழித்துப் பார்க்கும்போது உங்களைச் சுற்றிலும் கும்மிருட்டாய் இருந்தால் எப்படி இருக்கும் ? கைகால்களை நீட்ட முடியாமல், எழ முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? நீங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் எப்படி இருக்கும் ? நினைத்து பார்க்கவே திகிலூட்டும் இந்தச் சூழலை பரீட் திரைப்படம் திரையில் விரிக்கிறது.
கும்மிருட்டில் கண் விழித்து தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலேயே அச்சத்தில் கூச்சலிடும் ஹீரோ, தான் ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து எங்கோ புதைக்கப்பட்டிருப்பதை லைட்டர் வெளிச்சத்தில் உணர்கிறார். அந்த நிமிடங்கள் அவனை அதிர்ச்சியின் பள்ளத்தாக்கில் புதைத்து விடுகின்றன. எதுவும் செய்ய இயலாதவனாய், யாரேனும் காப்பாற்றினால் தான் வெளியே வர முடியும் எனும் நிலையில் அவனுடைய மரண பயத்தை படம் அட்சர சுத்தமாய் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.
ஈராக்கில் டிரக் ஓட்டுவதற்காக வந்த ஒரு ஏழை அமெரிக்கப் பிரஜை அவன். ஈராக்கியர்களிடம் பிடிபடுகிறான். அவர்கள் அவனை சவப்பெட்டியில் போட்டு புதைத்து விடுகிறார்கள். 9/11 க்கு சற்றும் சம்பந்தமில்லாத ஈராக்கியர்கள் அமெரிக்கப் படைகளால் பாதிக்கப்பட்டது போல, போருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த டிரைவரும் பாதிக்கப்படுகிறான். சவப்பெட்டிக்குள் ஒரு செல்போன் இருக்கிறது.
அந்த செல்போன் மூலம் வெளியுலகைத் தொடர்பு கொள்ள அவன் முயல்வதும், அவன் தொடர்பு கொள்ளும் இடங்களிலெல்லாம் பொய்களும், தப்பித்தல்களும், சால்ஜாப்புகளும் நிரம்பியிருப்பதும் பதட்டத்தை அதிகரிக்கிறது. போதாக்குறைக்கு மணல் பாம்பு ஒன்றும் திடீரென சிறு ஓட்டை வழியே உள்ளே நுழைந்து விட பரபரப்பு எகிறுகிறது.
எப்படியாவது வெளியேறி விடவேண்டுமே எனும் ஹீரோவின் தவிப்பில் பார்வையாளனுக்கு மூச்சு முட்டுகிறது. மரணம் நெருங்கும்போது தானே வாழ்க்கை உன்னதமாய்த் தெரிய ஆரம்பிக்கிறது. சவப்பெட்டியில் அடைபட்டவனும் அந்த நிலைக்கு வருகிறான். எப்படியேனும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என தவிக்கிறான். ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த தாயை அழைப்பது, மகனைக் காப்பாற்ற சொந்த விரலை வெட்டுவது, மனைவியுடன் உருகுவது என கலங்கடிக்கும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது திரைக்கதை.
அடைபட்டவனைக் காப்பாற்றுவதை விட, இதிலிருந்து கைகழுவி விடவேண்டுமென துடிக்கும் நிறுவனங்களின், அரசு அதிகாரிகளின் சுயநல, மனிதாபினானமற்ற உரையாடல்கள் மனிதத்தின் மீதான கேள்வியை மிக ஆழமாகவே எழுதியிருக்கின்றன.
கடைசியில் சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு மணல் உள்ளே வர ஆரம்பிக்க பின் நடப்பது உறைய வைக்கும் கிளைமேக்ஸ்.
தீவிரவாதிகளால் கடத்தில் செல்லப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார் என்று எட்டாம் பக்கம் பெட்டிச் செய்தியில் வரும் ஒரு செய்தி, உண்மையில் எத்தனை வலிமிகுந்தது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது படம். ஒவ்வொர் நிகழ்வுக்குப் பின்னாலும் உறைந்து கிடக்கும் துயரங்களில் கடலை திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.
ரசிகனுக்குப் போரடிக்கும் என தமிழ் டைரக்டர்கள் உலகெங்கும் பறந்து பாடல்காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடங்கள் காட்டி படத்தை வினாடி நேரம் கூட போரடிக்காமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ரோர்டிகோ கார்டெஸ்.
படத்தில் நடித்திருக்கும் ஒரே நடிகர் ரயன் ரெய்னாட்ஸ். விருதுகளை அள்ளித் தரக்கூடிய அற்புதமான உணர்வுகளை லைட்டர் வெளிச்சத்திலும், செல்போன் வெளிச்சத்திலும் அவர் வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது. படத்தில் வேறு யாருமே இல்லை. வெறும் தொலைபேசிக் குரல்கள் மட்டுமே !
ஆறடிக்கு நான்கடி அளவுள்ள சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடம் காட்டியிருப்பதில் ஒளிப்பதிவும், டைரக்ஷனும் வியக்க வைக்கின்றன. இன்னொரு குறிப்பிடவேண்டிய அம்சம் இசை. காட்சிகளைக் கட்சிதமாய் உள்வாங்கி பார்வையாளனை இருக்கையில் ஆணி போல அறைந்து வைக்கிறது.
கர்ப்பிணிகளும், பலவீன இதயமுடையவர்களும் பார்க்க வேண்டாம் என டைட்டில் கார்ட் போடக்கூடிய அளவுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்றி இறக்கும் காட்சிகள் தான் ஒன்றரை மணி நேரமும் !
சமீபத்தில் பார்த்த படங்களில் மனதை உலுக்கிய படங்களில் ஒன்று இது !
வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.
இது போல தாங்கள் ஆங்கில பட விமர்சனம் செய்ய செய்ய ஒவ்வொன்றையும் இப்பொழுதே பார்த்து விட வேண்டும் போல இருக்கிறது… fantastic narration… keep going…
LikeLike
நன்றி 🙂
LikeLike
thanks for introducing this film
LikeLike
விமர்சனம் மிக அருமை நண்பரே.. கட்டாயம் பார்த்து விடுகிறேன்.. அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்..
LikeLike
intha movie paakrathuku naanum romba try panren. but engiyum kidaika maatuthu. thalaivaa.
LikeLike
நரேன்.. “நெட்”டிருக்க பயமேன் 😀
LikeLike