டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் ! 

இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.

எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட்  சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும். 

சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை. விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.

உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை  வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.

ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.

கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.

டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” – மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.

நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.

டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.

நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான்.  உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.

ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம்.  ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.

ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.

மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து ! 

இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.

இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.

கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !

நன்றி : அவள் விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்