அரை நூற்றாண்டுக்குப் பின் ஒரு ஆனந்த சந்திப்பு

அந்த அதிகாலை நிசப்தத்தை செல்போனின் சிணுங்கல் ஒலி சற்றே உடைத்தது.

“மேரி இருக்காங்களா ?”  மறு முனையில் பேசிய குரலில் தயக்கமும், எதிர்பார்ப்பும் இழையோடியது.

“நான் தான் பேசறேன். நீங்க யாரு ? “

“ஹேய்.. சி.ஆர் … நான் தான் புஷ்பம் பேசறேன்” மறு முனையிலிருந்த குரலுக்குச் சட்டென ஒரு துள்ளல் சந்தோசம்.

“புஷ்பமா 50 years ago...? எந்த புஷ்பம் ? “

“கண்டு பிடி பாக்கலாம் ? “ மறு முனை கொஞ்சம் விளையாட்டுக் குரலுக்கு இறங்கியது.

மேரி தனது தலையிலிருந்த நரை முடிகளைக் கோதியபடியே யோசித்துப் பார்த்தார்.

“சாரி.. யாருன்னு தெரியல. எனக்கு சின்ன வயசுல புஷ்பம்னு ஒரு பிரண்ட் இருந்தா.. அதுக்கப்புறம் எந்த புஷ்பமும் எனக்கு தெரியாது…”

சொல்லி முடிக்கும் முன் மறுமுனை உற்சாகமாய் குரல் கொடுத்தது.

“அதே புஷ்பம் தாண்டி நானு… எவ்ளோ வருசமாச்சு பேசி” மறுமுனையின் உற்சாகம் சட்டென மேரியின் மனதுக்குள்ளும் குடியேறியது.

“ஏய்.. நீயா ? எப்படிடி இருக்கே ? எங்கே இருக்கே ? என் நம்பர் எப்படி கிடைச்சுது ?” படபடப்புடன் கேள்விகளாக கொட்டின மேரியின் உதடுகளிலிருந்து.

“ஒரேயடியா கேள்விகளைக் கொட்டாதே. எனக்கும் ஏகப்பட்ட கேள்வியிருக்கு நிறைய பேசணும்”

“நீ எங்கே இருக்கே ?”

“நான் நாகர்கோயில் லிட்டில் பிளவர் ஸ்கூல்ல இருந்து தான் பேசறேன்”

“ஓ.. நாம படிச்ச ஸ்கூல்… ஹேய்.. கரெக்டா 50 வருஷமாச்சு நாம பத்தாம் கிளாஸ் படிச்சு !”

“ஆமா. அதான் விஷயம். நாம படிச்சு 50 வருஷமாச்சு இல்லையா. அதனால நம்ம கிளாஸ்ல படிச்ச எல்லாரும் இதே ஸ்கூல்ல ஒரு நாள் சந்திச்சுப் பேசினா எப்படி இருக்கும்” புஷ்பம் முடிக்கும் முன் மேரி உற்சாகமானார்

“ரொம்ப நல்லா இருக்கும்… ஆனா, எல்லாரையும் கண்டு பிடிக்கிறது எப்படி ?”

“உன் நம்பரை கண்டு பிடிச்சேன் இல்லையா ? இதே மாதிரி ஒவ்வொரு இடமா தேட வேண்டியது தான். ஏற்கனவே ஹெட்மாஸ்டர் கிட்டே பேசிட்டேன். அவங்க பழைய வீட்டு அட்ரஸ்களையெல்லாம் தரேன்னு சொல்லியிருக்காங்க. ஒவ்வொருத்தரையா தேடணும். நம்பிக்கையிருக்கு எல்லாரையும் ஒண்ணு சேத்துடலாம்” புஷ்பத்தின் குரல் உற்சாகமானது.

“எத்தனை பேரை இதுவரைக்கும் கண்டு பிடிச்சிருக்கே ? “

“நாலு பேரு… இன்னும் நாப்பது பேரைத் தேடணும். உனக்கு வேற யாரையாவது தெரியுமா ?”

“பூமணி நம்பர் மட்டும் தெரியும். அவ கூட மட்டும் தான் காண்டாக்ட் இருக்கு. ஒரு நிமிஷம் இரு.. நம்பர் சொல்றேன்”

மேரி நம்பர் சொல்ல, புஷ்பம் குறித்துக் கொண்டார்.

விஷயம் இது தான். லிட்டில் பிளவர் பள்ளியின் கோல்டன் ஜூபிலி ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவின் ஒரு பாகமாக முதல் முதலாக அந்த பள்ளியில் பத்தாம் கிளாஸ் படித்த எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது ஏற்பாடு.

மேரியின் மனதில் உற்சாகம் கரை புரண்டோடியது. முழுதாய் ஐம்பது ஆண்டுகள் முடிந்திருந்தது. பள்ளியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், துயரங்களும் இல்லாமல் திரிந்த காலம் கண் முன்னால் விரிந்தது. அந்த உற்சாகக் குரல்களின் மிச்சம் இன்னும் காதுகளில் ஒலிப்பது போல ஒரு பிரமை.

கண்களை மூடியபோது பள்ளிக்கூட வராண்டாவும், ஆசிரியர்களும், பள்ளிக்கூட முற்றத்தின் நின்ற மரமும் எல்லாம் அவருடைய நினைவுகளில் வந்து போயின.

தன்னுடைய அலமாராவைத் திறந்து துணிகளுக்கு அடியே வைத்திருந்த போட்டோக்களை எடுத்தார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு கருப்பு வெள்ளைப் புகைப்படமும் ஒன்று. அதிலுள்ள முகங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது. அதிலுள்ள பல முகங்களின் பெயர்கள் தொண்டை வரைக்கும் வந்து விட்டு மனதில் வராமல் முரண்டு பிடித்தன.

நாட்கள் மெல்ல மெல்லக் கரைய, அந்த நாளும் வந்தது.

எதிர்பார்ப்புகளோடு தனது பேரப் பையனையும் அழைத்துக் கொண்டு நாகர்கோயில் புறப்பட்டார் மேரி. பேரப் பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

லிட்டில் பிளவர் ஸ்கூல் வாசலில் நீண்ட நெடிய ஆண்டுகளுக்குப் பின் நுழையும் போதே பின்னணியில் நினைவுகளும் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தன.

உள்ளே நுழைந்தபோது ஒரு கத்தோலிக்க சிஸ்டர் அவரை எதிர்கொண்டார்.

“ஹே … நீ சி.எஸ்.ஆர்… தானே ?”

“ஆமா.. நீங்க….”

“ஹே.. நான் தான் புஷ்பம். “

“ஹேய்.. நீ கன்யாஸ்திரி ஆயிட்டியா ? எனக்குத் தெரியவே தெரியாது ! பேசும்போ கூட நீ சொல்லவே இல்லை ?”

“நம்ம கூட படிச்ச நாலஞ்சு பேரு துறவறம் போயிருக்காங்க. உள்ளே வா.. நிறைய பேசலாம். இன்னும் கொஞ்சம் பேரு பேரு வந்திருக்காங்க”

“எல்லாரையும் கண்டு பிடிக்க முடிஞ்சுதா ?

“இல்லை… நம்ம குரூப்ல பத்து பதினைஞ்சு பேரு இறந்துட்டாங்கடி.. நம்ம வேலம்மா கூட இறந்துட்டா.. தெரிஞ்சப்போ ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நாலு பேரை கண்டு பிடிக்க முடியல. மூணு பேரு வெளிநாடு போயிட்டாங்க போல. 27 பேரைக் கண்டு பிடிச்சு வரச் சொல்லியிருக்கேன். மூணு நாலு பேரு வந்திருக்காங்க” சொல்லி முடிக்கவும் வகுப்பறை வரவும் சரியாக இருந்தது.

உள்ளே சில நரைத்த தலைகள் தெரிந்தன. வகுப்பறை புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இருந்தாலும் அதே பழைய நினைவுகளின் மிச்சம் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஹேய்.. நீ சி.ஆர் ?”

“நீ…. விமலா தானே .. இன்னும் ஒன் சிரிப்பு அப்படியே இருக்குடி”

அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பு ஒவ்வொருத்தராய் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பேசத் தொடங்கினார்கள்.

அந்தக் கூட்டத்தில் ஒவ்வொருத்தராய் வந்து சேர, கொஞ்ச நேரத்திலேயே அறையில் 27 பேரும் ஆஜர்.

தங்களுடைய வயதுகளை மறந்து, துயரங்களை மறந்து, நோய்களை மறந்து சட்டென அனைவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகப் பறந்து விட்டார்கள். அறை உற்சாக உரையாடல்களாலும், பேச்சுகளாலும் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏகப்பட்ட கதைகள் நிரம்பி வழிந்தன. அவர்களுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மருமக்கள் என கதைகள் வகுப்பறையில் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தன.

பலரும் தங்கள் உயிர்த்தோழிகளை கட்டியணைத்து தழு தழுத்தனர்.

“சாகறதுக்கு முன்னாடி உன்னைப் பாக்க முடிஞ்சதே போதும்” எனும் உரையாடல்கள் ஆங்காங்கே நட்புக்கு வயதில்லை என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன.

சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள், பரிசுகள், பேச்சு, பாட்டு, பிரார்த்தனை, உணவு என நேரம் போனதே தெரியவில்லை.

சட்டென மாலை வந்து நிற்க அனைவரின் மனதிலும் ஓர் இனம் புரியா சோகம். எல்லாருமா நின்னு ஒரு போட்டோ எடுத்துப்போம், எடுத்துட்டு கன்யாகுமரி கடலுக்குப் போவோம்…

போட்டோ எடுக்கப்பட்டது.

எல்லோரும் ஒரு வேன் பிடித்து குமரிக் கரையில் இறங்கினார்கள்.

ஒரு கூட்டம் முதியவர்கள் வந்து குமரிக் கரையில் கொட்டமடித்ததை வியப்புடன் பல கண்கள் பார்த்தன. இவர்களெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அதுவும் ஐம்பது ஆண்டுகள் தொடர்பே இல்லாத நபர்கள் சட்டென ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாதது. அதுவும், படித்த அதே பள்ளியில் அதே இடத்தில் ஒன்று சேரும்போது மனதுக்கு இரண்டு இறக்கைகள் கூடுதலாய் முளைத்து விடுகின்றன என்பதையே இந்த சந்திப்பு வெளிப்படுத்தியது.

இந்த சந்திப்பு இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் தொடரவேண்டும் எனும் விருப்பங்களின் பரிமாற்றங்களோடு அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு நெகிழ்வான அனுபவத்தைப் பதிவு செய்த ஆனந்தத் தடங்களுடன் பள்ளி வராண்டா மௌனமாய் இருந்தது.

 

நன்றி தேவதை, பெண்கள் இதழ்

பெப்ரவரி 2012